16 January 2010

எனக்குப்பிடித்த கவிதைகொத்தித் தின்னும்
நம்பிக்கைச் சிதைவால்
நரகமாகும் பொழுதுகளில்
நகர்கிறது வாழ்க்கை
கையகல மணமேடைக்குள்
முடங்க வேண்டும்
பெண் பிரபஞ்சம்
என்பதான
திராவக வீச்சில் கருகும்
தாம்பத்யத் தோழமையோடு
விடியல்கள்.
பிரம்மாஸ்திரம்
குருஷேத்திர யுத்தம் என
இணைகோடு இல்லறம்.
தீக்குளிப்புக்கு அப்புறம் வரும்
சகஜசிரிப்பில்
நெகிழ மறுக்கிறது
அஞ்சரை அடி உயரச்
சதையும் ரத்தமும்
நரம்பும் மனசும்

சுருங்கிவிடுகிறது அவளின் சகலமும்.

ஆனாலும் கேட்கிறது
அக்கம்பக்கத்தில்
பாய்கள் விரிக்கப்படும் சப்தம்.

இங்கே பலபொழுதும்
விரிகிறது படுக்கை
மனைவியின் மன்னிப்பில்.

---ஆண்டாள் பிரியதர்ஷினி.

சுக சம்சாரத்துக்கு 9 சூத்திரங்கள்
காதலிப்பவர்கள் இதன்படி நடந்தால் கல்யாண ஆசை வரும். கல்யாணமானவர்கள் இதன்படி நடந்தால் காதல் வரும்!

1. கணவரிடம் உள்ள நல்ல குணங்களைப் பாராட்டுங்கள்.
அனு, அஜித்களையும், விஜய்களையும் கனவு கண்டுகொண்டிருந்தாள். வாய்த்த கணவன்? சி.ஏ. படித்திருந்தான். ஆனால் அவள் கற்பனைக்கு நேர்மாறாக குடுமியும் வேட்டியுமாய் இருப்பதே தன் கொள்கையாய்க் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் கணவனை கொஞ்சம் வெறுத்தாள். போகப்போக அவன் நல்ல உள்ளம் புரிந்தது. அவன் போக்கிற்கு வளைந்து கொடுத்தாள். இப்போது அவள் சொல்லுக்கு அவன் கட்டுப்படுகிறான். குடுமிக்கும் குட்பை.
யாருக்குமே விமர்சனம் பிடிப்பதில்லை. புகழ்ச்சி பலன் தருகிறது.’முழுக்கை சட்டையைவிட அரைக்கை சட்டை உங்களுக்கு எவ்வளவு அழகாக இருக்கிறது,’ என்று சொல்லிப் பாருங்கள். கை மேல் பலன்!
2. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம், நம்பலாம். ஆனால், அதை அப்படியே முலாம் பூசாமல் போட்டு உடைக்கும் போது, பாதிப்பு உங்களுக்குத்தான்.
அவர் சிகரெட் பிடிப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அமைதியான நேரத்தில், ‘இவ்வளவு நல்ல குணங்கள் இருக்கும் உங்களுக்கு, எப்படி இந்தப் பழக்கம் வந்தது’ எனக்காக கொஞ்சம் குறைத்துக்கொள்ளக்கூடாதா? என்று பேசிப்பேசியே அவர் மனதை மாற்ற முடியும். மாறாக அவர் ஏதோ மூடில் நீங்கள் அதிக செலவு செய்கிறீர்கள் என்று கத்தும்போது, நீங்க மட்டும் ஒழுங்கோ? சிகரெட்டுக்கே நூறு நூறா பணத்தை செலவழிக்கிறீங்க, என்று பதிலுக்கு கத்தினால், சிகரெட் பழக்கம் அதிகமாகுமே தவிர, குறையாது.
3. உணர்ச்சிகள் வரும் போகும். அவற்றை மட்டுமே உண்மை என்று நினைத்து மறுகாதீர்கள்.
உமாவுக்கு திருமணமான மறுமாதமே பிறந்த நாள் வந்தது. கணவன் அதை நினைவில் வைத்துக்கொண்டு பரிசளிப்பான் என்று எதிர்பார்த்தவள், ஏமாந்து போனாள். அவன் வழக்கம் போல அலுவலகம் போய்விட்டான். கணவனுக்கு தன் மேல் காதல் இல்லை என்று கணக்குப்போட்டாள். கோபம் கொண்டாள். மறுநாள் கையில் தவறிப்போய் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டு விட்டாள். சிறு காயம்தான. ஆனால் அதற்கே கணவன் பதறிப்போய் அவளைச் சமைக்க வேண்டாம் என்று ஹோட்டலுக்குப் போய் உணவை வாங்கி வந்து ஊட்டி அவளைத் திக்குமுக்காட வைத்துவிட்டான்.
அன்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது. நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டது அல்ல.
ஆண்களுக்குப் பொதுவாகவே தேதிகள், முக்கிய வீட்டு நிகழ்ச்சிகளெல்லாம் மறந்துவிடும். அது உங்களை அவமதிப்பதாய் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
4. மனிதர்களின் முக்கிய அடிப்படைக் குணமே மன்னித்தல்தான்.
‘இந்தச்சுரிதாருக்கு இந்த துப்பட்டா மேட்ச்சாகிறதா?’ போன்ற கேள்விகளுக்கெல்லாம் பல சமயம் ஆண்களுக்கு எரிச்சலூட்டுகிறது.
இதனால் ‘அவருக்கு கோபம்’. என் மீது பிடிப்பு இல்லை, என்று நாமும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டால், நமக்குள் ஏற்பட்டுள்ள பிளவு அதிகரிக்குமே தவிர குறையாது. நீங்கள் ஷாப்பிங்கிற்கு அழைத்து அவர் வர மறுத்தால் கோபிக்காதீல்கள். அதில் என்ன குடியா முழுகிவிடப்போகிறது?
5. மற்றவர்களுடன் அவரை ஒப்பிடாதீர்கள்.
அவருடைய பிரச்சனைகள், நம்பிக்கைகள், பயங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு ஆறுதல் கூறி, முடிந்தால் அவற்றைத் தீர்க்க வழி சொல்லுங்கள். அப்படி நடத்து கொண்டீர்களானால், நிச்சயம் அவர் உங்கள் மீது அன்பைப் பொழிவார். மறந்துவிடாதீர்கள், ஓர் ஆணைக்கோபமூட்ட எளிய வழி அவனை மற்ற ஆண்களுடன் சதா ஒப்பிட்டு பேசுவதே!
6. வாழ்வில் நொடிக்கு நொடி நடக்கும் சம்பவங்களுக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருக்காதீர்கள்.
அதிகம் தின்று அதிகம் பேசும் அவர் நண்பரை உங்களுக்குப் பிடிக்கவில்லையா, ‘எனக்கு அந்த ஆளைப் பிடிக்கவில்லை, என் தலைவிதி இவனுக்கெல்லாம் சமைத்துப் போடவேண்டியிருக்கு,’ என்று அலுத்துக்கொண்டால், வெறுப்புதான் அதிகமாகும்.
மனிதர்கள் ஒவ்வொருவர் ஒரு விதம். அதில் இந்த மனிதர் இப்படி என்று சகித்துக் கொள்ளப் பாருங்கள். அதன் பின் அந்த மனிதரை அவ்வளவு வெறுக்கத் தோன்றாது.
7. பொறுப்பைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பதில் அதிதீவிரமாக இருக்காதீர்கள்.
ஒரு சமயம் நீங்கள் அவருக்காக அதிகம் செய்வீர்கள். சில சமயம் அவர் உங்களுக்காகச் செய்வார். பள்ளிக்கூட அட்டவனண போல் ஆளுக்குப் பாதிப்பாதி செய்ய வேண்டும் என்று தீர்மாணிக்காதீர்கள். அப்படி நீங்கள் நடந்து கொண்டால் உங்களுக்குப் பெயர் ‘மனைவி’ அல்ல ‘சர்வாதிகாரி’.
8. உங்கள் அந்தரங்கத்தை மற்றவர்களின் புற வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
ஒவ்வொருவர் சூழ்நிலையும் வித்தியாசமானது. தோழியின் கணவர் அவளைத் தினமும் ஹோட்டல், பீச், சினிமா என்று அழைத்துப்போகிறார். நம் கணவர் அப்படிச்செய்வதில்லையே என்று அங்காலாய்க்காதீர்கள். தோழியின் அந்தரங்கங்கள் உங்களுக்குத் தெரியாதல்லவா?
உங்கள் சூழல், உங்கள் கணவனின் நல்ல குணங்கள் இவற்றைப் புரிந்து கொள்ளுங்கள். பொறாமைக்கு இடம் வேண்டாமே.
9. கணவன் சினிமா ஹீரோ இல்லை.
ஆண் என்றால் சினிமா கதாநாயகன் போல் சண்டை போட வேண்டும், கார், ஸ்கூட்டர் ரிப்பேர் ஆனால் தானே சரி செய்து ஓட்டத்தெரியவேண்டும் என்றெல்லாம் கனவு காணாதீர்கள். நிஜத்தில் அவரும் ஒரு சராசரி மனிதர். இதை மறந்து விடாதீர்கள்.
வாழ்க்கை வேறு, சினிமா கதைகள் வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

இந்த அறிவுரைகள் மனைவிகளுக்கு மட்டும்தான் என்றில்லை. மனைவியை சரியாகப் புரிந்து கொள்ளக் கணவர்களுக்கும் இவை பொருந்தும்.

7 January 2010

பொங்கலோ பொங்கல்
கிணற்று நீரில் குதித்து
விளையாட
வரப்பில் ஓடி வழுக்கிவிழ
மார்கழிக் குளிரில் நெருப்பு
மூட்டிக் குளிர்காய
‘ஏய்யா கண்ணு துரும்பா
இளைச்சுட்ட...?
விசாரிப்புக்கேனும்
இந்தப் பொங்கலுக்கு
சொந்த ஊருக்குச் சென்று
வரவேண்டும்!

வெள்ளையடிக்க
தென்னைமட்டை வெட்டப்போவோம்
வாழைக்கன்னு வெட்ட
கழனிக்காட்டுக்குப் போவோம்
மாவிலைப் பறிக்கிற சாக்கில்
மரக்குரங்கு விளையாடுவோம்
மாடு குளிப்பாட்ட
மந்தைவெளிக்குப் போவோம்
மஞ்சள் செடி பிடுங்க
மாமாவின் தோட்டம் போவோம்
கரும்புக்கிடைக்கு கால் கடுக்க
நடப்போம்!
பொங்கல் வைக்கும் பானைக்காக
அக்காவோடு அரப்பாக்கம் போவோம்!
ம்...
எல்லாம் தனித்தனிக் கதைகள்!
எதுவுமில்லாத இந்தத்
தலைமுறையோ
கதையும் தெரியாமல்
கலாச்சாரமும் புரியாமல்
எப்படிச்சொல்லும்
‘ஹாப்பி பொங்கல்’!

ஊதிய உயர்வுக்கு 5 வழிகள்.1. சம்பள உயர்வு பற்றி உங்கள் முதலாளியிடமோ, உயரதிகாரியிடமோ கேட்பதற்கு முன் அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? எந்த வகையில் நீங்கள் உங்கள் அலுவலகத்துக்கு முக்கியமானவர்? என்பதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். இப்ப நாம இருக்கிற தகுதிக்கு சம்பளம் கொடுக்கிறதே பெரிசு. இதுல சம்பள உயர்வெல்லாம் கேட்பது உங்களுக்கே அதிகபட்சமாகத் தோன்றினால் அந்த கோரிக்கையையே விட்டுவிடுங்கள். இல்லை... வாங்கும் சம்பளம் குறைவு என்று கருதினால் மட்டும் கேளுங்கள்.

2. நீங்கள் செய்யும் வேலைக்கு மற்ற அலுவலகங்களில் எந்த அளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். சம்பள உயர்வு விவாதத்துக்கு இது உதவும்.

3. அலுவலகத்தின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அது லாபமாக இயங்குகிறது. முதலாளியும், உயர் அதிகாரிகளும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே இது பற்றி பேசுங்கள்.

4. எனக்கு சம்பள உயர்வு வேண்டும் என்று முதலாளியிடமோ, உயரதிகாரியிடமோ முதலிலேயே கேட்காதீர்கள். அதற்கு முன்பாக உங்கள் வேலைத்தரம், அதை உயர்த்த மேற்கொண்டும் நீங்கள் செய்ய வேண்டியவை ஆகியவற்றைப்பற்றி விவாதியுங்கள். அதன் பிறகே சம்பள உயர்வு பற்றி பேசுங்கள். இது அவர்களைக் கவரும்.

5. எல்லாம் செய்தும் நினைத்தபடி சம்பள உயருவு கிடைக்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். வேலை செய்வதையும் குறைத்துக் கொள்ளாதீர்கள். முன்பைவிட கடுமையாக வேலை செய்யுங்கள். ‘சே இவருக்குப்போய் குறைந்த சம்பளம் கொடுக்கிறோமே’ என்ற உணர்வு உங்கள் உயரதிகாரிக்கு நிச்சயம் வரும். பிறகென்ன நிச்சயம் சம்பள உயர்வுதான்!

நன்றி; நாணயம் விகடன்