26 December 2011

சென்டிமெண்ட் மனிதர்கள்!


ஒவ்வொரு முறையும்
வீட்டில்
குப்பைகளை ஒழிக்கும்போது,
தொண்டை எரிச்சலும்
தும்மல்களுமே மீதமாகின்றன!

பழம்புடவை, நைந்த கொசுவலை,
உடைந்த குடை, சக்கரமில்லா
பொம்மைக் கார்கள்,
இடமடைக்கும் சைக்கிள்,
சுவாசமிழந்த வி.சி.டி.பிளேயர்,
அடுக்கடுக்காய் புத்தகங்கள்...
இன்னும் இன்னும்
இண்டு இடுக்குகளிலும்
ஏராள அடைசல்கள்!

பத்தடி அகல அறையில்
புழங்குதல் என்பது
புழுங்குதல்!

ஒவ்வொரு முறையும்
உற்சாகமாய் ஆரம்பிக்கும்
குப்பை ஒழிப்பு;
குப்பைகளின் பழங்கதை பேசி
இதமாக நகர்கிறது.

இற்று வெளுத்த பிங்க் நிற சட்டை;
கழித்துக் கட்ட நினைக்கும்போது;
'கல்யாண சட்டைங்க....
இருக்கட்டும்... இருக்கட்டும்...'
என்பாள் என்னவள்.

உடைந்த குடையை
எடுத்து வீசினால்,
'நீங்க துபாய் போனப்போ
வாங்கினது...
இருக்கட்டும்... இருக்கட்டும்...!
என்பாள் மீண்டும்!

சக்கரம் ஒடிந்த
காரை எடுத்தால் -
'அப்பா அதை வீசாதே...
விளையாட வேணும்...'
என்பாள் சின்ன வாண்டு.

பயன்படா தலைகிளிப்,
ரிப்பன், கவுன்களைத் தொட்டால்,
கண்களில் நீர் காட்டி
கலங்க வைப்பாள் தலைச்சன் மகள்.
இப்படி ஒவ்வொரு
குப்பைக்குப் பின்னாலும்
தடைகளாய் நிற்கிறது சென்டிமெண்ட்.

வீட்டை ஒழித்து முடிக்கும்போது,
குப்பைகள்
இடம் மாறுகிறதே தவிர,
ஒழிவதே இல்லை!

ஆஸ்துமா, அலர்ஜி தும்மல்களோடு
குப்பையோடு குப்பையாகவே
வாழ்ந்து மடிகிறார்கள்!
சென்டிமெண்ட் மனிதர்கள்!

நன்றி; பெ. கருணாகரன்

No comments:

Post a Comment