19 December 2009

எப்படி உருவாகிறது பெட்ரோல்?


              
                
              லத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெய் என்ற பொருளில் தான் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ‘நான் அசைவத்தைக் கிட்டே சேர்க்க மாட்டேன்’ என்பவர்கள் பெட்ரோலியத்தைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், உயிரினங்கள் இல்லை என்றால் பெட்ரோலியம் இல்லை.
கடலில் இறந்த நுண்ணுயிர்கள் கடலின் அடிவாரத்திலோ அல்லது கடலுக்கருகே இருக்கும் மணல் பகுதியிலோ புதைந்து விடுகின்றன. நூற்றாண்டுகள் நகர நகர பூமியின் வெப்பம், மேற்புறத்தில் அளிக்கப்படும் அழுத்தம், பாக்டீரியாவின் கைவண்ணம் இவை எல்லாம் சேர்ந்து இந்த உயிரினங்களை எண்ணெய் போன்ற திரவமாக மாற்றி விடுகின்றன. அந்த திரவம் மூக்கைத் துளைக்கும் வாசம் கொண்டதாக, கொழ கொழவென்று இருக்கும். அதுவே பெட்ரோலியம்!

                      பொதுவாக ஆக்ஸிஜனே இல்லாத பகுதிகளில்தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. எனவே, பெட்ரோலியக் கிணறுகள் கடல் ஆழத்தில் காணப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. நிலத்தில் பெட்ரோலியக் கிணறுகள் இருக்காதா? இருக்கலாம். ஆனால், ஒரு காலத்தில் அந்தப்பகுதி கடலால் சூழப்பட்டதாக இருந்திருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.!
நிலத்திலிருந்து கச்சா எண்ணெயை எடுத்து, பைப் வழியாகவோ, கப்பல் வழியாகவோ சுத்திகரிப்பு மையத்திற்கு அனுப்புவார்கள. அங்கே கச்சா எண்ணெயிலிருந்து (பெட்ரோல் உட்பட) பல பொருட்கள் பிரித்தெடுக்கப்படும். 42 காலன் கச்சா எண்ணெயிலிருந்து எவ்வளவு பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும் தெரியுமா? சுமார் 44 காலன்! ஆம் கச்சா எண்ணெய் அளவை விட அதிக அளவில் அதிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும். எல்லாம் சுத்திகரிப்பு முறையின் காரணமாகத்தான். சின்ன சோளத்தை வெப்பத்தில் வாட்டி எடுத்தால் பெரிய சைஸ் பாப்கார்ன் கிடைப்பதில்லையா, அது போல!

                   பொதுவாக பிரிட்டனிலும் அது ஆட்சி செய்த நாடுகளிலும் ‘பெட்ரோல்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கனடா போன்ற சில நாடுகளில் அது இல்லை. வட அமெரிக்காவில் அதன் பெயர் ‘காஸோலின்’. சுருக்கமாக ‘கேஸ்’. நாம் பெட்ரோல் பங்க் என்று குறிப்பிடும் இடங்கள் அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ‘கேஸ் ஸ்டேஷன்!.
பெட்ரோலியத்தின் ஒரு பகுதாதான் பெட்ரோல். பெட்ரோலியத்தில் வேறு என்னென்ன பொருள்கள் உண்டு? எரிபொருள் எண்ணெய் (FUEL OIL) என்பது பெரிய தொழிற்சாலைகளில் உள்ள பாய்லர்களில் பயன்படுத்தப்படுகிறது. கரியைவிட இது சிறந்தது. ஏனென்றால், இது எரிந்த பிறகு மிச்சம் என்று எதுவும் இருப்பதில்லை. டீசல் நமக்குத் தெரிந்ததுதான். பேருந்துகள், ரயில்கள், கப்பல்கள், மின்சார ஜெனரேட்டர்கள் ஆகியவற்றில் பயன்படும் திரவம். மண்ணெண்ணெய் கூட பெட்ரோலியத்தின் ஒரு வடிவம்தான். மிகவும் தரமான மண்ணெண்ணெய்தான் விமானங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

                    பெட்ரோலிய வாயு, லூப்ரிகேட்டிங் எண்ணெய், பாரஃபின் மெழுகு, அஸ்ஃபால்ட் (சாலைகளின் மேற்பரப்பில் பயன்படுத்தப்புவது) இப்படிப் பல வடிவங்கள் உண்டு பெட்ரோலியத்துக்கு. ஒவ்வொரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒவ்வொரு பொருள் உருவாகிறது. உதாரணத்திற்கு பெட்ரோலின் கொதிநிலை 40-லிருந்து 170°C வரை. தவிர ஒவ்வொரு பொருளிலும் கார்பன் இருக்கிறது. எவ்வளவு கார்பன்கள் கொண்டவை என்பதைப் பொறுத்தும் இப்பொருள்கள் தீர்மானிக்கப் படுகின்றன. பெட்ரோலில் 5-லிருந்து 10 கார்பன் அணுக்கள். மண்ணெண்ணெயில் 10-லிருந்து 12.

“முதல் தொலைபேசி’
சென்னை நகரில் முதல் தொலைபேசி நிலையம் 1883-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி இயங்கத் தொடங்கியது.

வேலையை ராஜினாமா செய்வது எப்படி?


தலைப்பு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்... நீங்கள் ஒரே நிறுவனத்தில் நாற்பதாண்டுகள் பணி செய்து மாலை மரியாதையுடன் பணிஓய்வு பெறுவதுதான் நல்ல பணியாளருக்கு அழகு என்று நினைப்பவர்களாக இருந்தால்...!
அதுவே வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கோண்டு வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வது நியாயம்தான் என்று நினைப்பவராக இருந்தால் நீங்கள் யதார்த்தவாதி.
தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி நமக்கு கற்றுத்தந்திருக்கும் முக்கியமான பாடம் ‘உழைப்பவர்களுக்கு எல்லா திசைகளிலும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிற வேலையை ராஜினாமா செய்வதில் தவறில்லை என்பதுதான்.’!
எந்தச் சூழ்நிலையில் ராஜினாமா முடிவை எடுக்கலாம் என்பது பற்றி சில குறிப்புகள்.
பலரும் இரண்டாயிரம் ரூபாய் அதிகம் கிடைக்கிறது என்று தாவுவார்கள். கடைசியில் பார்த்தால், புதிய நிறுவனத்தில் போக்குவரத்திற்கே மாதம் இரண்டாயிரம் ரூபாய் அதிகமாக செலவாகும். அதனால் சம்பள உயர்வை உங்கள் செலவுகளோடு பொருத்திப்பாருங்கள். அதேபோல வேலை பார்க்கும் சூழ்நிலையையும் கூட மிக முக்கியமானது. அய்ந்தாயிரம் ரூபாய் அதிகம் சம்பளம் கிடைக்கலாம்... ஆனால் புதிதாக அமைகிற மேலதிகாரி அல்லது முதலாளி, தொல்லை கொடுக்கிறவராக அமைந்துவிட்டால் நிம்மதி பறிபோய்விடும். அதனால், அமைதியான பணியிடச்சூழலையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கால்கடுதாசியை நீட்டிவிட்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறுவது நல்ல பணியாளருக்கு அழகல்ல. இன்றைக்கு உலகம் கைக்குள் அடங்கும் அளவுக்குச் சுருங்கிவிட்டது. நாளைக்கே மீண்டும் ஒரு நல்ல வாய்ப்போடு முன்பு பணியாற்றிய நிறுவனத்திற்கே திரும்பவேண்டிய சூழல் வரலாம். அப்போது நெருடல் இல்லாமல் பணியாற்ற ஏதுவான சூழ்நிலையை ராஜினாமா செய்யும்போதே உருவாக்கி வைக்கவேண்டும்.
பெரும்பாலானோர் வேலையை விட்டு விலக ‘உயரதிகாரியுடன் கருத்து வேறுபாடு, வேலையில் திருப்தியின்மை, எதிர்கால வளர்ச்சி’ என்ற மூன்று காரணங்களைத்தான் சொல்கின்றனர். நிர்வாகத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டு, ‘அவர்கள் நம்மை விலக்கும் முன்பு நாமே போய்விடலாம்’ என நினைத்து ராஜினாமா செய்வதும், பல்வேறு காரணங்களால் நிர்வாகமே ஒரு நபரை ராஜினாமாவை நோக்கித்தள்ளுவதும் வேறு வகையானது. அவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. உயர் அதிகாரியோடு கருத்து வேறுபாடு என்பதும், வேலையில் திருப்தியின்மை என்பதும் நிர்வாகத்துக்கே தெரிந்தவையாக இருக்கும். ஆனால் எதிர்கால வளர்ச்சியைக் கருதி வெளியேறுவதாகச் சொன்னால், சில கேள்விகளை நிர்வாகம் கேட்கத்தான் செய்யும். அவற்றை எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருக்க வேண்டும்.
அந்தக் காரணத்தைச் சொல்லி நீங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுக்கும்போது, ஒருவேளை உங்களை நிறுவனம் இழக்க விரும்பவில்லை எனில், நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ‘நாங்களும் அதே அளவுக்கு சம்பளம் தருகிறோம்’ என்றோ, பதவி உயர்வு தருகிறோம் என்றோ, சொல்லக்கூடும். அந்தச்சமயத்தில் குழப்பக்கூடாது. அதை ஏற்றுக்கொள்வதா மறுப்பதா என்பதையெல்லாம் முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள வேண்டும்.
எதைச் சொன்னாலும் மேலதிகாரி உங்களை சமாதானப்படுத்தத்தான் முயற்சிப்பார். அப்போது உங்கள் திட்டத்தை நிதானமாக, தெளிவாகச் சொல்ல வேண்டும். பேசும்போது உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாகப் பேசுங்கள்.
பேசுவதற்கு முன்பு, விலகுவதற்கான கடிதத்தைக் கொடுத்துவிட வேண்டும். அந்தக்கடிதம் குறைவான வார்த்தைகளில் நிறைய விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். எந்தத்தேதியில் விலக விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறுவனம் தனக்குச் செய்த உதவியையும் குறிப்பிட்டுக் காட்டலாம். சூழ்நிலையைப் பொருத்து, உங்களுடைய பதவிக்கு வேறு யாரை நியமிக்கலாம் என்ற பரிந்துரையையும் கடிதத்தில் சொல்லலாம். இப்போதெல்லாம் நிறுவனம் வேலையை விட்டுப்போகிறவர்களிடம், ‘எக்ஸிட் இன்டர்வியூ’ என்பதை வைக்கிறார்கள். இதில் ‘என்ன காரணத்துக்காக விலகுகிறீர்கள், நிறுவனத்தில் நீங்கள் எதிர்பார்த்தது என்ன?’ என்பன போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். அவற்றுக்கு எதிர்மறையாக பதில் சொல்லாமலிருப்பது நம் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.
எந்த நிலையில் வேலையை விட்டு நின்றாலும் பிறரைக் குற்றம் சாட்டாதீர்கள். நிர்வாகத்தையும், உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் குறை சொல்வதை விட்டுவிடுங்கள். வேலையிலிருந்து விலகுவது என்ற முடிவை முதலில் உங்கள் மேலதிகாரிக்குத் தெரியப்படுத்தி ‘சம்மதம்’ வாங்கிய பிறகே சக ஊழியர்களிடம் சொல்ல வேண்டும்.
பதவி விலகுவதற்கு நிறுவனத்தில் என்ன மாதிரியான விதி முறைகள் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்குத்தகுந்தபடி நடந்து கொள்ளுங்கள். ஒரு சில நிறுவனங்கள், ‘ஒரு மாதத்திற்கு முன்பாக பதவி விலகல் கடிதத்தை கொடுத்துவிடவேண்டும்’ என்று விதிமுறை வைத்திருப்பார்கள். அதனால் கவனமாக இருங்கள்.!
விலகுவதற்கு முன்பு, உங்களிடம் நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களை ஒப்படைத்துவிடுங்கள். சிலர்,பழைய நிறுவனத்திலிருந்து ஏதாவது மென்பொருளை (Software) எடுத்துவந்து புதிய அலுவலகத்தில் பயன்படுத்திக்கொண்டு, அதைப்பற்றி பெருமையாக வேறு சொல்வார்கள். இது நிச்சயமாக அந்த நபரைப்பற்றிய தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும்.
அதுபோலவே பழைய நிறுவனத்தின் நிறை, குறைகளை புதிய நிறுவனத்தில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அதுவும் உங்களைப்பற்றிய தேவையற்ற பிம்பத்தை உருவாக்கும். உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை, அலுவலக கணிணியில் பதிந்து வைத்திருந்தால் அவற்றை அழித்துவிடுங்கள். முடிந்தால் வேலையை விட்டு விலகும்போது மேலதிகாரிகளை அழைத்து சிறிய ‘விருந்து’ (Party) கூடக்கொடுக்கலாம்.
பணியாளருக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான உறவின் தன்மை இப்போது முற்றாக மாறிவிட்டது. ‘விசுவாசம்’ என்பது வேலையில் தேவையில்லை என்றாகிவிட்ட காலமிது! அதனால், ராஜினாமா செய்வது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் கொள்ளத்தேவையில்லை.
வேலையில் சேர்வது மட்டுமில்லை... வேலையை விடுவதும் ஒரு கலைதான். அதற்காக, ‘ராஜினாமா செய்ய வாழ்த்துக்கள்’ சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்க முடியுமா என்ன...?
நன்றி: நாணயம் விகடன்.

தலைமைப் பதவி வேண்டுமா?
கடின உழைப்பு, கொடுத்த வேலையை சாமர்த்தியமாக முடிக்கும் திறன், டீம் ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் திறமை, இத்துடன் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் குணம் இவைதான் தலைமைப் பதவியைப் பிடிக்க உதவும் நான்கு படிகள்.