19 November 2009

மூக்குக்கண்ணாடி வாங்கப்போகிறீர்களா?

            நல்ல லென்ஸ்கள் விலை சற்று கூடுதலாகத்தான் இருக்கும். அப்படி வாங்கும் போது தரத்திற்கான உத்தரவாதச் சீட்டை கேட்டு வாங்க வேண்டும். சில கண்ணாடிகளில் நீங்கள் வாங்கும் வகை அதிலேயே பதிக்கப்பட்டிருக்கும். அதைப்பார்த்து வாங்கலாம்.

           விலை குறைவான, மட்டமான கண்ணாடிகள் உங்கள் கண்களால் பார்த்து வாங்க முடியாவிட்டாலும் அதை கண்ணில் போட்டவுடன் அதிலுள்ள குறைகளை கண்ணானது சட்டென உணர்ந்து பிரதிபலிக்க ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட கண்ணாடியைப் போட்டதுமே சிறிது நேரத்தில் அதை கழற்றி வைக்கத் தானாகவே தோன்றும். சில சமயம் கண்களில் நீர் வரும்... லேசான தலைவலி இருக்கும். எரிச்சலான உணர்வு கூட ஏற்படும்... இப்படிப்பட்ட நேரங்களில் மீண்டும் கண்ணையும் கண்ணாடியையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
  
              இப்போதெல்லாம் கண்ணாடியில் நாம் செய்யும் வேலைகளுக்கேற்ப பல வகைகள் வந்துள்ளன. கணிணி முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ANTI GLARE LENS இதை சுருக்கமாக ஏ.ஆர்.சி. எனவும் சொல்வார்கள்... தவர, பைஃபோக்கல் போடுபவர்களுக்கு ப்ரக்ஸிவ் லென்ஸ்... வெளியில் சுற்றுபவர்களுக்கு போட்டோ க்ரோ மேட்டி லென்ஸ்கள்-இவை வெளிச்சத்திற்கேற்ப குளிர்ச்சியாகவும், சாதாரணமாகவும் தானாகவே மாற்றிக்கொள்ளும். டின்டட், கீறல் விழாத வகைக் கண்ணாடிகளும் உள்ளன.
நம்மில் பலர் கண்ணாடிக்கு அதிக செலவழிக்க யோசிப்பதற்கு முதல் காரணம், அதை பராமரிப்பதில், பாதுகாப்பதில் உள்ள பிரச்சனைதான். அதற்காக மட்டமான கண்ணாடிகளை வாங்கி நம் கண்ணை நாமே கெடுத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல.

நன்றி-குமுதம் வார இதழ்.

‘என்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி, நான் போகிற ஊரைப் பற்றி, அங்குள்ள பறவைகள், மிருகங்கள், மரங்கள், ஆறுகள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்... எனவே உங்களைச் சுற்றி இருப்பவர்களின் மேல் அக்கறை செலுத்துங்கள். அன்பு செலுத்துங்கள். மனிதர்களை இயற்கையை ஓயாமல் படியுங்கள்’.
- எஸ். ரமகிருஷ்ணன்.

ஃப்ரிட்ஜ்


அடுப்பில்லாத வீட்டைக்கூட பார்க்கலாம் ஆனால் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடு உண்டா? அன்றாடத் தேவைக்கான பால், காய்கறிகள், பழங்கள், குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள், ஏன் சில மருந்துப் பொருட்கள் உட்பட எல்லாவற்றையும் பாதுகாத்து குளிர்ச்சியைத் தந்து நம்மை மலர்ச்சியடையச் செய்யும் ஃப்ரிட்ஜ், கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒரு அஙுகமாகவே ஆகிவிட்டது.

ஆனால் இப்படி பல விதங்களில் பயன்படும் ஒரு சாதனத்தை மாதக்கணக்கில், ஏன்... ஆண்டுக்கணக்கில் கூட பராமரிக்காமல் பலரும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.


புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:-

புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கும்போது நமக்குப் பிடித்த கம்பனியை தேர்வு செந்து வாங்குவோம். ஆனால் முன்பக்கம் நட்சத்திர (ஸ்டார்) முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம். 

இந்த முத்திரை ஒரு நட்சத்திர குறியீட்டிலிருந்து துவங்கி ஐந்து நட்சத்திரம் வரை குறியீடு உண்டு. ஃப்ரிட்ஜ்களுக்காக அரசு கொடுத்திருக்கும் தர அங்காகாரம் தான் இந்த நட்சத்திரக் குறியீடு. அதாவது மின்சாரம் குறைந்த அளவே தேவைப்படும் வகையில் தயாரிக்கப்படும் 200 லிட்டர் முதல் 400 லிட்டர் வரையிலான ஃப்ரிட்ஜ்களுக்கு இந்த நட்சத்திர முத்திரைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

ஐந்து நட்சத்திர தரச்சான்றிதழ் கொண்ட ஃப்ரிட்ஜ்கள் பார்ப்பதற்கு அழகாகவும் நேர்த்தியாகவும் இருப்பதுடன், அத்தனை உள் வேலைகளையும் கனகச்சிதமாக செய்யுமளவுக்கு வடிவமைக்கப்படிருக்கும். பால் பாக்கட், ஐஸ்க்ரீம், காய்கறி, பழங்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தட்டுக்கள் (ட்ரேக்கள்) இருக்கும். பொதுவாக ஃப்ரிட்ஜ் என்றால் பால் பாக்கட்டை ஃப்ரீஸரில் வைத்து, பிறகு தண்ணீரில் போட்டுவிட்டு காத்திருக்க வேண்டும். ஆனால் இதில் அந்த அவசியம் இருக்காது என்பதுதான் தனிச்சிறப்பு. அதாவது ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த பாலை சில நிமிடங்களிலேயே பயன்படுத்தும் அளவுக்கான தட்பவெப்பநிலையை (டெம்ப்பரேச்சர்) இருப்பதுபோல் வடிவமைத்திருப்பார்கள்.

இருவர் மட்டுமே புழங்க்கூடிய வீட்டில் 165 லிட்டர் கொள்ளளவுள்ள ஃப்ரிட்ஜ் வாங்கினால் போதுமானது. வீட்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டைப் பொறுத்தே ஃப்ரிட்ஜ்ஜை தேர்வு செய்யுங்கள்.
தரமான ஸ்டெபிலைசர்கள் வாங்குவது அவசியம். ஆனால் ஃப்ரிட்ஜ் விற்கப்படும்  அங்காடிகளில் பெரும்பாலும் தரமான கம்பனி முத்திரையுடன் கூடிய ஸ்டெபிலைசர்களை விற்கத்தயங்குவார்கள். ஏனென்றால் அதில் அவர்களுக்குக் கிடைக்கும் வருதானம் மிகக் குறைவு. 

அதே சமயம் தரமில்லாத ஸ்டெபிலைசர்களை விற்கும்போது அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர்களிடம் பேசிப்பேசியே தரமற்ற ஸ்டெபிலைசர்களை தலையில் கட்டிவிடுவதும் உண்டு. எனவே தரமானதையே கேட்டு வாங்குங்கள்.

ஃப்ரிட்ஜ்ஜை ஒருதடவை அணைத்துவிட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக்கூடாது. இதனால் ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ஃப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதன் உள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணம். மேலும் ஃப்ரிட்ஜ்ஜை அணைத்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். அந்தப்பைப்பில் காற்றும் போகாது. எனவே குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் ‘ஆன்செய்யவேண்டும். அப்போதுதான் ஃப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும்.

ஃப்ரிட்ஜ்ஜை வாங்கியவுடன், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால், என்னென்ன பொருட்களையெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்ற வழிமுறைகளை எழுதியிருப்பார்கள். முதலில் அதை தெளிவாகப் படியுங்கள். சம்பந்தப்பட்ட கம்பனி ஆட்களோ, கம்பனியிலிருந்து பழுது பார்க்க வரும் ஆட்களோ கூட இதைப்பற்றியெல்லாம் சொல்ல மாட்டார்கள். நீங்களாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஃப்ரீசரில் பொருட்கள் நன்றாக உறைந்து விட்டால், அவற்றை எடுப்பதற்காக கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது. ஃப்ரீசர் அமைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருத்தப்பட்டிருக்கும். கூரான பொருட்கள் பயன்படுத்தீனால், இந்த டப்பாவைக்கீறி, அதன் கீழே இருக்கும் அலுமினியக்காயிலின் மீது படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி படும்போது, ‘டப் என்று வெடித்து உள்ளிருந்து கேஸ் வெளியேறி, உங்கள் உடம்பில் பட்டுவிடலாம். இதனால் பெரும் விபத்து ஏற்படவாய்ப்பு இருக்கிறது. சுவாசிப்பதால் பாதிப்பு இல்லை என்றாலும், உடம்பில் படும்போது பாதிப்புகள் ஏற்படும்.

ஃப்ரீஸரிலிருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது, டீஃராஸ்ட் பட்டனை அழுத்துங்கள். இதனால் ஃப்ரிட்ஜில் உள்ள அதிகப்படியான கேஸ் கரைந்து, அதன் பின்புறமிருக்கும் ட்ரேவில் விழுந்துவிடும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்வதால் ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடையாமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜ் பழுதானாலோ.... தொடர்ந்து மின்சாரம் தடைபட்டாலோ... அதனுள் இருக்கும் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை வெளியே எடுத்துவிடுங்கள். இல்லை என்றால் அது அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கும். பழுதான ஃப்ரிட்ஜை ஈரத்துணியால் நன்றாக துடைத்து, எலுமிச்சம் பழத்தை வெட்டி ஃப்ரிட்ஜினுள்ளே ஆங்காங்கே வைத்துவிடுங்கள். கதவையும் திறந்து வையுங்கள். இதனால் துர்நாற்றம் அடிக்காது.

ஃப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப் பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரியாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும். அந்த இடத்தில் குளுமையான காற்றும் வீசாததால் கிருமிகள் மெதுவாக ஃப்ரிட்ஜின் உட்பகுதியில் பரவும் அபாயமும் நேரலாம். அது பல வியாதிகளுக்கு வழிவகுக்கலாம். கேஸ்கட் சரியாகப் பொருந்தியிருக்கிறதா? இடைவெளி இருக்கிறதா என்று அடிக்கடி கவனியுங்கள்.

சாதாரண சோப்புத் தண்ணீரினால் ஃப்ரிட்ஜின் உள் வெளி பாகங்களில் துடைத்தாலே போதுமானது. எந்த பாதிப்பும் வராது.

ஃப்ரிட்ஜின் வாழ்நாள் என்பது அதிகபட்சம் 12 ஆண்டுகள்தான். அதற்குமேல் அதன் செயல்பாடுகள் தொய்வடைந்து விடும். எந்த விதத்தில் அதனால் தீங்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே 12 ஆண்டுகள் ஆகிவிட்டால் உடனே டிஸ்போஸ் செய்து விடுவது நல்லது.

ஃப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான ‘எர்த் சரியாக இருக்கிறதா என்று எலக்ட்ரிஷியனை வைத்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
வெளியூர் சென்று இரண்டு நாளில் திரும்பும் பட்சத்தில் ஃப்ரிட்ஜை ‘ஆனில் வைத்துச்செல்லலாம். ஆனால் 10 நாட்கள் ஆகும் என்றால் பொருட்களை வெளியே வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து விட்டு போவதுதான் நல்லது.

ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறைந்தது 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது அதனை நன்கு சுத்தம் செய்துவிடுங்கள்.


ஃப்ரிட்ஜ் முக்கால்வாசி காலியாக இருப்பது நல்லதல்ல. முழுக்க உணவுப்பொருட்கள் மற்றும் வேறு அயிட்டங்களை வைப்பது சிறந்தது.

ஃப்ரிட்ஜில் எதை வைத்தாலும் அதை நன்றாக மூடி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கதவைத்திறக்கும் போது தயிர், சாம்பார், மருந்து வாசனை எல்லாம் கலந்து வயிற்றை குமட்ட ஆரம்பித்துவிடும்.

காய்கறிகளை வைக்கும் போது சுத்தமாக கழுவிவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்தால் தன்மை மாறாமலிருக்கும்.

பழைய ஒற்றைக் கதவுள்ள ஃப்ரிட்ஜாக இருந்தால் பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது ‘டி ஃப்ராஸ்ட்’ செய்ய வேண்டும்.

ஃப்ரிட்ஜின் பின்புறம் உள்ள ‘டிரைன் ட்ரே’ ஐ எடுத்து மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்வது நல்லது. விட்டுவிட்டால் துர்நாற்றம் வீட்டைச்சுற்றும்.

பல வீடுகளில் பெண்கள் ஃப்ரிட்ஜிலிருந்து பொருளை எடுத்துவிட்டு, ரொம்ப சாவகாசமாக ஐந்து நிமிடம் கழித்து மூடுவதைப் பார்த்திருக்கலாம். ரொம்ப தப்பு. ஐந்து விநாடிகளுக்கு மேல் ஃப்ரிட்ஜ் திறந்திருக்கக்கூடாது.

நன்றிஅவள் விகடன்

வாஷிங் மெஷின்
இப்போது எல்லோருமே ஆட்டோமேடிக் வைத்திருப்பதால் கோளாறுகள் வருவது கம்மி. மெஷினைத் திறந்து தினமும் சுத்தம் செய்வது அவசியம். என்ன கொள்ளளவோ அதற்குமேல் துணிகளைப் போடக்கூடாது. மிக அதிகமான துணிகளை அடைக்கும் போது மோட்டாரில் பாதிப்பு வரும். பலர் துணிகளைத் தரம் பிரிப்பதே இல்லை. பெட்ஷீட் டெம்பரேச்சரும், சட்டை டெம்பரேச்சரும் வேறு வேறானது. ஸ்டாண்ட் மீது மெஷினை வைத்தால் துருப்பிடிக்காமல் பாதுகாக்கலாம்.

ஏ.சி
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பழுதை சரிபார்ப்பது ஏ.சி.யைப்பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. அடுத்தது பத்து நாட்களுக்கு ஒரு முறை அது விண்டோ ஏ.சி யாக இருந்தாலும், ஸ்பிலிட் ஏ.சி யாக இருந்தாலும், ஏர் ஃபில்டரை எடுத்து சுத்தம் செய்துவிட்டுப் போட வேண்டும்.
ஸ்பிலிட் ஏ.சி ஓடும்போது ஃபேன் போடக்கூடாது. காரணம் ஃபேன் காற்றை ஏ.சிக்கே திருப்பி அனுப்பிவிடும். ஏ.சி, ஃபேன் இரண்டும் ஓடும்போது அறையின் குளிர்ச்சி பரவலாக இருக்காது. முகத்திற்கு நேராக ஏ.சி காற்று படக்கூடாது. சளித்தொந்தரவு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இன்னொரு முக்கியமான விஷயம், ஏ.சி ஓடும்போது வாசனை திரவியங்கள், முகப்பவுடர் போடக்கூடாது. அறையையும் சுத்தம் செய்யக்கூடாது. காரணம் எல்லா தூள்களையும் ஏ.சி உறிஞ்சிவிடும். விளைவு குளிர்ச்சி குறைந்துவிடும். மின்சார நுகர்வும் அதிகமாகும்!
ரிமோட்டால் ஏ.சியை நிறுத்தினால் மட்டும் போதாது. ஏ.சி ஸ்விட்சையும் அணைக்க வேண்டும்.

மைக்ரோ வேவ் அடுப்பு
உலகெங்கிலும் கைப்பேசிக்கு அடுத்தபடி மைக்ரோவேவ் அடுப்பு தவிர்க்க முடியாத உபகரணமாகிவிட்டது. 1985-ல் உலகில் 20 சதவிகிதம் பேர்தான் அதைப்பயன் படுத்தினார்கள். இன்று 70 சதவிகிதம்!
சாதா அடுப்பில் ஏற்படும் வெப்பம் இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சு. மைக்ரோ அடுப்பு – எலக்ட்ரோ மேக்னட்டிக் வெப்பம். சாதா அடுப்பில் சூடு, உணவுக்கு வெளியிலிருந்து உள்ளுக்குள் பரவுகிறது. மைக்ரோ ஏற்படுத்தும் சூடு நேர் எதிர். ஆகவே கண்ணுக்கு ரம்மியமாக இருக்கும் அந்த முறுகல் (அல்லது காந்தல்) மைக்ரோ அடுப்பில் கிடைக்காது! இதை ஆங்கிலத்தில் Browning என்பார்கள்.

'பேசுவதற்கு தகுதியானவர் என்று தெரிந்தும் பேசாமலே இருந்துவிட்டால் நீ ஒரு நல்ல மனிதனை இழந்து விடுகிறாய். பேசுவதற்கு தகுதியற்றவர் என்று புரிந்தும் நீ பேசிவிட்டால் உன் வார்த்தைகளை இழந்து விடுகிறாய். அறிவுள்ளவன் வார்த்தைகளையும் இழப்பதில்லை, மனிதர்களையும் இழப்பதில்லை'.
- கன்ஃபூஷியஸ்.

15 November 2009

மொழி


உலகில் உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912
இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516
உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ்
அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்)
அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)
குறைந்த சொற்களை கொண்ட மொழி : டாகி டாகி (Taki Taki) (340 சொற்கள்)
நம் தமிழ் மொழி!
செம்மொழி என்ற தகுதியால் உலகின் ஐந்து மொழிகளில் ஒன்று என்ற தகுதியைப் பெறுகிறது தமிழ். மற்ற மொழிகள் – லத்தீன், கிரீக் ஹீப்ரு, சமஸ்கிருதம், தமிழ், அரபிக்
இந்திய மக்கள் தொகை அடிப்படையில் இந்தி, வங்காளி, பஞ்சாபி, தெலுங்கு, மராட்டி என்ற வரிசையில் 6-ஆம் இடம் அடைகிறது தமிழ். உலக மக்கள் தொகை அடிப்படையில் 17-ஆம் இடத்தில் நிற்கிறது தமிழ். பலர் அச்சப்படுவது போன்று தமிழுக்கு அழிவு ஒருபோதும் வராது என்று நாமும் நம்புவோம்.
ஆக, இனத்தின் எண்ணிக்கையும் இலக்கிய ஆளுமையும் கூடித்தீர்மானிக்கின்றன ஒரு மொழி உட்காரும் நாற்காலியை. இந்த தகவல் தொழில்நுட்பக் காலத்தில் ஒரு மொழி தெரிந்தவன் ஊமையாக இருப்பதற்குச் சமம்! நல்ல வேலை கிடைக்கணும்னா குறைஞ்சது நாலு மொழி தெரிஞ்சிருக்கணும். மொத்ததில் மொழி ஒரு இனத்தின் அடையாளம் மட்டுமில்ல, ஓர் இலக்கை அடைவதற்கான வழியும் கூட. 
இந்த தமிழ் மொழித்தகவலோடு என் பதிவுகளை ஆரம்பிக்கிறேன்.


“YOU HAVE AN OPTION; EITHER YOU CAN READ HISTORY OR MAKE HISTORY!” சரித்திரம் படிப்பது அல்லது சரித்திரம் படைப்பது இந்த இரண்டில் எதைத்தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில்தான் இருக்கிறது. இப்போ புரியுதா ஏன் இந்த வலைப்பதிவுன்னு!