7 January 2012

எய்ட்ஸ் எப்படிப் பரவுகிறது? - அறியாத தகவல்கள்


 இது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. 

எய்ட்ஸ் பற்றிய ஒரு விரிவான நூல் A THIEF IN THE NIGHT’  விஷ்வாஸ் கைத்தொண்டே என்பவர் எழுதியிருக்கிறார். புத்தகத்தில் எய்ட்ஸ் பல விஷயங்கள் நம் சிந்தனைக்குரியவை.

தற்செயலான தொடுகைகளாலும், கைகுலுக்கல், அணைத்துக்கொள்ளுதல், ஒரே அறையில் அவர்களுடன் தங்குதல் போன்ற செயல்களால் எய்ட்ஸ் பரவாது. எய்ட்ஸ் உள்ளவர் தயாரித்த உணவை உண்பதால் வியாதி பரவாது. லேசான போஸ்ட் ஆஃபீஸ் முத்தத்தால் பரவாது. அதாவது, உதடுகளை மூடிக்கொண்டு ஒத்தும் வாத்சல்ய முத்தமிடுவதால் பரவாது.

வாயைத் திறந்து எதிராளியைச் சாப்பிடும் ரேஞ்சுக்குச் செல்லும் ‘ஃப்ரெஞ்ச் கிஸ் வகை முத்தம் இருக்கிறதே.... அது ஆபத்து. எச்சில், பல் ஈறில் ரத்தம், திறந்த புண்கள் மூலம் பரவ வாய்ப்பு இருக்கிறது. அந்தரங்கப் பாகங்களில் முத்தமிடுவதும் ஆபத்து. முத்தத்துக்குப் பொது விதி – முத்தமிடும் இடத்தில் சருமம் திறந்திருகக் கூடாது.


ரத்தம் கலக்கும் எந்தச் சமாச்சாரமும் நோ... நோ...! அதைப்போல போதைப் பொருள்களும் அதற்குப் பயன்படுத்தும் கறை படிந்த ஊசிகளும் கடவுள் வேறெதற்கோ கொடுத்திருக்கும் துவாரங்களைத் தப்பாகப் பயன்படுத்துவதும் பேராபத்து.

எய்ட்ஸ் நோயாளிகளின் துணியிலிருந்தோ, அவர்கள் பயன்படுத்திய டெலிஃபோன், டாய்லெட், இருக்கைகள், பாத்திரங்கள், அவர்கள் எழுதிய கவிதைகள்.... இவற்றால் எய்ட்ஸ் பரவாது. எய்ட்ஸ் நோயாளிகளைப் பராமரிக்கும் நன்னெஞ்சத் தாதர், தாதியர் யாருக்கும் இது வருவதில்லை. ஈ மொய்ப்பதால், மூட்டைப்பூச்சி, கொசு போன்றவை அவர்களைக் கடித்துவிட்டு நம்மைக் கடிப்பதால் எய்ட்ஸ் பரவுவதில்லை.

குறிப்பாக கொசுவை விசாரித்ததில், ‘ஒரு ஆளைக் கடித்துப் போதுமான ரத்தம் கிடைத்ததும் மூணு நாள் மறு ஆளைக் கடிக்கமாட்டேன்என்று உறுதியாகச் சொல்கிறது. அதற்குள் எய்ட்ஸ் அபாயம் விலகிவிடும். எய்ட்ஸ் வைரஸ் கொசுவில் உயிர் வாழ முடியாது. கொசுவிற்கு எய்ட்ஸ் கிடையாது.


எச்.ஐ.வி. பாஸிட்டிவ் ஆசாமியுடன் சேர்க்கை வைத்துக்கொள்பவர்கள் நேரடியாக எய்ட்ஸ் பற்றிக்கொள்ளும் அபாயத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களின் கணவரோ, மனைவியோ, பிறக்கும் குழந்தைகளோ மறைமுகமாக எய்ட்ஸ் அபாயத்துக்கு உள்ளாகிறார்கள்.

இந்த எக்ஸ்போஷர் நிலையில் கூட, உடனே எய்ட்ஸ் வியாதி வந்துவிடும் என்றில்லை. ஆனால் சாத்தியக்கூறு பன்மடங்கு அதிகமாவது, அடிக்கடி தகாத உறவை நாடும்போதும் அடிக்கடி எய்ட்ஸ் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ளும்போதும்.

கி.பி. 2000 –த்தின் இறுதியில் ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. உள்ளவர்கள் இரண்டு கோடியே ஐம்பத்து நான்கு லட்சம். ஆசிய நாடுகளில் ஏழு லட்சத்து என்பதாயிரம் பேர் எச்.ஐ.வி. க்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆசியாவில் உள்ள மொத்தம் ஐம்பத்தெட்டு கேஸ்களில், இந்தியாவில் மட்டும் முப்பத்தெட்டு லட்சம் பேர் இந்த வியாதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இந்த இணைப்பில் சரியான மற்றும் தற்போதைய தகவல்களைப் பெறலாம். எய்ட்ஸ் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வெஸ்டர்ன் ப்ளாட், லிசா, அதிரடி எலிசா – இந்த மூன்று முறைகளும் பிரதானமாக உள்ளன.
இதுவரை எய்ட்ஸூக்குச் சரியான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம் எய்ட்ஸ் வைரஸ் பலவிதமான ம்யூட்டேஷன்கள் மூலம் அடிக்கடி வேஷமும் மாறுகிறது. உயிரணு என்னும் செல்லுக்கு எச்.ஐ.வி வைரஸ் வந்தால் ஒழித்துக்கட்டு என்று சொல்லிக்கொடுக்கும் மருந்துகளையும் பரிசோதித்து வருகிறார்கள்.

ஜீன் என்னும் மரபணுவின் சுபாவத்தை மாற்றும் ஜீன் தெரபியும் ஓடிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் பரிசோதனை முயற்சிகளாக  இருக்கையில், பத்திரமான உத்தரவாதமான தடுப்பூசி –

‘அறன்வரையான் அல்ல செயினும் பிறன் வரையான்
பெண்மை நயவாமை நன்று.

என்று திருக்குறள் காலத்திலிருந்தே இருக்கும் அறிவுறை. பாலியல் தொழிலாளிகளிடம் போகாமல் இருப்பது. 


காண்டம் கூட பத்திரமல்ல. அலோபதி அல்லாத மற்ற வைத்திய முறைகளில் எய்ட்ஸூக்கு முழு சிகிச்சை இருப்பதாகச் சொல்லப்படுவதும் நம்பகமில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் எஸ்.பி. தியாகராஜன், பிரிட்டிஷ் ஒத்துழைப்புடன் கீழாநெல்லியின் எய்ட்ஸ் தடுப்பு குணத்தை ஆராய்ந்து வருகிறார். அதேபோல் மஞ்சள், கசப்பு நார்த்தங்காய், சில காளான்கள், பூண்டு போன்றவற்றிலும் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் போலி வைத்தியர்கள்தான் அதிகம். அலோபதியில் சிகிச்சை இல்லாத நிலையில், நோயாளிகள் இவர்களை நாடுகிறார்கள். அவர்களிடம் எழுபதாயிரம் வரை பணம் பறித்து, இவர்கள் கொடுக்கும் மருந்துகள் சிலவற்றில் பாதரசம் போன்ற கன உலோகங்கள் கலந்திருக்கலாம்.

இந்த மருந்துகளை எலிசா டெஸ்ட் எடுக்கும்போது மழுப்பித் தற்காலிகமாக எச்.ஐ.வி. இல்லை என்று காட்டும். இறுதியில் கிட்னியைத் தாக்கி ஆளை அடித்துவிடும்.

இம்மாதிரி டாக்டர்களிடம் செல்லும்போது, அவர்கள் டிகிரி அல்லது லைசன்ஸைப் பார்க்கவும். எத்தனை வருஷம் அனுபவம் உள்ளவர்கள் என்பதைப் பார்க்கவும். இதே மருந்து சாப்பிட்டுக் குணமானதாகச் சொன்னவர்களைத் தேடிச்சென்று, அந்த ஆள் உயிருடன் இருந்தால் விசாரிக்கவும், யார் சிபாரிசு செய்தார்கள் என்றும் விசாரிக்கவும். 

ஒருவருக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று தவறில்லாமல் கண்டுபிடிக்க இரண்டு முறை, இரண்டு தனித்தனி ‘ஆண்ட்டிஜென்கள்மூலம் டெஸ்ட் எடுத்து, எச்.ஐ.வி. பாஸிட்டிவ் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

எய்ட்ஸ்வந்துவிட்டதன் அடையாளங்கள் இவை;


காரணமில்லாமல் பத்து சதவிகிதத்துக்குமேல் எடை குறைவது, மாதம் பூரா வயிற்றுப்போக்கு, டி.பி. காசநோயின் சில வகைகள், நரம்புத் தளர்ச்சி, ஒரு மாதத்துக்குமேல் காரணமில்லாமல் ஜூரம் – இதெல்லாம் இருந்தால் எச்சரிக்கை பல்ப் எரிய வேண்டும்.

ஆறுதல் செய்தி; தீவிரத்தைப் பொறுத்து, எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆறு மாதத்திலிருந்து பதினேழு வருஷம் வரை உயிர் வாழ்கிறார்கள்.


சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும் –லிருத்து..

No comments:

Post a Comment