28 November 2011

இளைஞர்களும் வேலைவாய்ப்புப் பிரச்னைகளும்


நான் எழுதிய இந்தக் கட்டுரை ‘தினமணி வாசகர் மன்றம் பகுதியில் செப்டம்பர் 2, 1989 அன்று வெளியானது.


நாட்டில் வைலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்காக சுய வேலைவாய்ப்புத் திட்டம் முதல், தற்போதைய ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் வரை அரசின் புதுப்புது திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதியின்படி திட்டங்கள் அறிமுகப் படுத்தப்படுவதாலேயே அவை முழுவதும் செயல்படுத்திவிட்டதாக ஆட்சியாளர்கள் சாதனைத் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.

நாடு 21-ம் நூற்றாண்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது; நாடு தன்னிறைவு அடைந்துவிட்டது; உலக வல்லரசு நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. அக்னி ஏவுகனை சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது – இவைகள் செய்திகள். இவைகள்தான் நாடு முன்னேறிவிட்டதற்கான அடையாளங்களா? உண்மை நிலை என்ன? வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் சதம் என்ன? படித்தவர்களின் சதம் என்ன? படிக்காத படிக்க வசதியில்லாத பாமர மக்களின் சதம் என்ன? படித்து பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்கள்? இவர்களில் எத்தனை லட்சம் பேர்கள் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளனர்? இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது? அரசின் அனைத்து திட்டங்களும் இவர்களைப்போய்ச் சேருகின்றனவா? எங்கே இவைகளுக்கு புள்ளிவிவரக் கணக்குகள்?

திட்டங்களைப் பாருங்கள! ‘ஓர் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலையாம்; யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழி போல் கடந்தகால தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன இளைஞர்களுக்கு உதவித்தொகை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயலாக்கியது. தற்போதைய அரசோ அதே உத்தியின்படி உதவித்தொகையை சற்று உயர்த்தி வயது வரம்பை மேலும் இரண்டு ஆண்டுகள் தளர்த்தியிருக்கிறது. இதனால் என்ன நன்மை உண்டாகப்போகிறது? கவர்ச்சி திட்டங்களால் மேலும் கவலையைத்தான் அதிகமாக்குகின்றன இந்த அரசுகள்.

இளைஞர்களே வேலை கிடைக்கவில்லையா? சுய தொழில் தொடங்குங்கள், பிரதமரின் திட்டங்கள் உங்களுக்காகவே – எங்கு பார்த்தாலும் வாசகங்கள், மேடைப் பேச்சுகள். அரசின் திட்டங்கள் முறைப்படி மக்களைப் போய்ச்சேருகின்றனவா என்று எந்த அரசாவது இதுவரை ஆராய்ந்ததுண்டா?

வேலை வாய்ப்பகங்கள் தங்கள் வேலையைச் சரிவரச்செய்கின்றனவா? இல்லையே! அங்கும் கூட வேலை செய்ய போதுமான ஆட்கள் இல்லை என்ற நிலை அல்லவா இருக்கின்றது. இந் நிலையில் அரசு வேலைகளையே நம்பியிராமல் தனியார் நிறுவனங்களில் சென்று வேலை செய்யும் இளைஞர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

ஒரு சில நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்கள் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, குறைந்த சம்பளம் கொடுத்து, தாற்காலிகமாகவே ஊழியர்களை வைத்துக் கொண்டுள்ளன. என்றைக்காவது ஒருநாள் நாம் நிரந்தரமாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உழைத்து ஓடாய்த் தேயும் இளைஞர்களும், நிரந்தரம் பற்றிக் கேட்பவர்களை உடனே வீட்டிற்கு அனுப்புவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இவற்றையெல்லாம் இந்தக்கால இளைஞர்கள் சகித்துக்கொண்டு போவதற்கு காரணம் இந்த வேலையாவது கிடைத்ததே என்ற அற்பத் திருப்திதான். இதற்கு நேர்மாறாக ஏதோ உழைப்பதினால் உடம்பிலுள்ள சக்தியெல்லாம்  வீணாகிவிடுவதைப்போல், உற்பத்தியைப் பற்றி சிறிதும் எண்ணாமல் வேலைக்குச் சென்று ஆஜரானால் போதும் என்ற நிலையில் இயங்கும் அரசு நிறுவனங்கள்! ஏன் இவைகள் நஷ்டத்தில் இயங்காது?

இதைத் தவிர்த்து சுய தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்களின் நிலை என்ன? எப்படிச்செய்வது? யாரிடம் அணுகுவது? வழிகாட்டி யார்? என்ற வினாக்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு சிக்கித்தவிக்கும் இளைஞர்களுக்கு யார் உதவுகிறார்கள்? நாம் பயின்று வருகின்ற கல்வி என்ன அனைத்தையும் அறிந்து கொள்கின்ற வகையிலா அமையப்பெற்றுள்ளது? கிராமப்புற இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையும், அரசு அலுவலகங்களின் மெத்தனப்போக்கும் மலைப்பையே உண்டாக்குகின்றன.

சம்பந்தப்பட்ட துறைகளிடம் சென்று கேட்டால் உடனடியாக பதில் வருகின்றதா? இல்லை, அவர்களுக்கு உதவுகின்ற மனப்பாங்குதான் இருக்கின்றதா? கடமையைச் செய்ய காசு கேட்கிறார்களே!

எண்ணற்ற கடன் வசதிகள்- வியாபாரக்கடன், சுயதொழில் கடன், நகர்ப்புற வேலையற்றோரின் தொழில்கடன், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சிக்கடன், மாவட்ட தொழில் மையக்கடன் போன்ற வசதிகள் இருந்தும் இதை நாட்டு மக்களில் எத்தனை சதம் பேர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்? அதற்கு எத்தனை இடைத்தரகர்கள்? வேண்டப்பட்டவர்களுக்கே இவ்வசதிகள் கிடைக்கச் செய்கின்ற அநியாயங்கள்.

வேலையில்லாமல் சோம்பித்திரியும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வேலை கிடைக்காத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க திட்டங்கள் மட்டும் அறிவித்தால் மட்டும் போதாது. அவைகள் முழுமையாக செயல்படுத்தப்பட இளைஞர்களுக்கு எல்லா வழிவகைகளும் செய்து தரப்படவேண்டும். அப்போதுதான் நாடு தன்னிறைவு கொள்ளும். முன்னேற்றம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் விளங்கும்.

எம்.ஞானசேகரன்,


சுய மதிப்பீடு
நம்மைப் பற்றிய சுய மதிப்பீடு, நல்லவன், திறமைசாலி என்ற எண்ணம் நம் உள்ளத்திற்கும், உடலுக்கும், நம் வாழ்க்கைக்கும் நல்லது. வெளியே கிளம்பும்போது ஒரு நல்ல சட்டையைப் போட்டுக் கொள்ளுங்கள்; குளித்துவிட்டுக் கிளம்பிப் பாருங்கள். கொஞ்சம் பூ வாங்கித் தலையிலோ (பெண்களுக்கு), சட்டைப் பையிலோ (ஆண்களுக்கு) வைத்துக்கொண்டு புறப்படுங்கள். நம் மனத்தில் ஒரு மகிழ்வும் நிறைவும் உலவுவதைக் காணலாம். சூழ்நிலையே மணம் வீசத்துவங்கும். உலகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

17 November 2011

நூலகம் மூடல்! நம் மனப்போக்கு எப்படி?


நம்புங்கள்!!!............அதிமுக ஆட்சியின் முடிவிற்கு எதிரான ஒரு கட்டுரை தினமலரில்..........நம்ப முடியவில்லை.


காவல் நிலையம் இருப்பது, அப்பகுதியில் குற்றவாளிகள் இருப்பதற்கு அடையாளம். மருத்துவமனைகள் இருப்பது, அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதன் அடையாளம். நூலகங்கள் இருப்பது, அவ்விடம் புத்தக ஆர்வலர்கள் இருப்பதன் அடையாளம். இவற்றுள் ஆரோக்கியமான அடையாளம், நூலகங்கள்தான்.

ஒரு பெரும் நூலகத்தை இடம் மாற்றி, அப்பெரு நூலகம் இருந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வருவது சரியான செயலா? சில மாதங்களுக்கு முன், செம்மொழிக்காக அமைக்கப்பட்ட பழைய சட்டசபை நூலகம் மூடப்பெற்று, இடம் மாற்றப்பட்டது.கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் படை எடுத்தபோது, தீப்ஸ் என்ற நாட்டை வென்றார். அப்படை எடுப்பு நடக்கும் போது, அந்நாட்டில் கிரேக்க கவிஞர் பிண்டார் என்பவருடைய இல்லம் இருந்தது. கிரேக்க வீரர்கள், நகரையே நாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அது கவிஞரது இல்லம் என்று, மகா அலெக்சாண்டரிடம் சொன்னவுடன், "அந்த அறிவாளியின் இல்லத்தைத் தீண்டாதீர்கள்' எனத் தடுத்து ஆணை போட்டார். 

தமிழக வரலாற்றில், பகை அரசர்களால் சோழ நாட்டின் ஒரு பகுதி வெல்லப்பட்டபோது, அவ்வூரில் இருந்த ஓர் இல்லம், உருத்திரங்கண்ணன் என்ற புலவனுடையது என்று சுட்டிக்காட்டப்பட்டது. "அப்புலவனின் இல்லத்தை ஒன்றும் செய்து விடாதீர்கள்' என்று அரசன் ஆணையிட்டான்.

பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நம் மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களில், நூலகம் வைத்துப் பராமரிக்கப்பட்டது. அந்நூலகத்தில் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட நம்முடைய இதிகாசங்களும், காப்பியங்களும், தேவார, திருவாசகங்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும், ஓலைச் சுவடிகளில் கைவலிக்க எழுத்தாணியால் எழுதப்பட்டு, பத்திரப் படுத்தப்பட்டிருந்தன. 

அக்காலத்து அரசர்களும், செல்வந்தர்களும், பழைய ஓலைச்சுவடிகளை, புதிய ஓலைச்சுவடிகளில் எழுதி, பத்திரப்படுத்துவதற்காக நன்கொடைகள் வழங்கினர்.அந்நன்கொடைகள், "சாத்திர தானம்' என்று அழைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்ட இடம், சரஸ்வதி பண்டாரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

முதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவியின் மகன் என, இருவருக்கும் இடையே நடந்த சகோதரச் சண்டையால், தமிழகம், டில்லி இஸ்லாமியருக்குச் சரணாக்கப்பட்டு, அதன் விளைவாக, மாலிக்காபூர் என்ற இஸ்லாமியத் தளபதி, தமிழகத்தின் மேல், 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தான். தமிழகத்தையே நிர்மூலப்படுத்தினான். 

கண்ணில் பட்ட கோவில்களை எல்லாம், அடித்து நொறுக்கினான்.ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் முதலான இடங்களில் இருந்த பெரும் கோவில்கள், மாலிக்காபூர் எனும் இஸ்லாமியப் படைத்தளபதியால் மண் மேடாக்கப்பட்டன. ஆனால், அவன் செய்த ஒரு நல்ல காரியம், "கோவில்களில் பத்திரப்படுத்தப்பட்ட சரஸ்வதி பண்டாரத்திற்கு, எந்தவித ஊறும் செய்யக் கூடாது' என ஆணையிட்டான்.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாகக் கருதப்படும் ஒரு பெரும் நூலகம் மூடப்பட்டு மருத்துவமனையாக்கப்படுவது, வரவேற்கத்தக்கதா என அனைவரும் சிந்திக்க வேண்டும். அவ்வாணையை, மறுபரிசீலனை செய்வது தான் அறிவு தர்மம்.இந்திய நூலகத்தின் வரலாறு, மிகத் தொன்மை வாய்ந்தது. புகழ் பெற்ற அரசர் அக்பர் காலத்தில், அவராலேயே ஒரு நூலகம் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக் கழகத்தில் அழகான நூலகம் நிர்வகிக்கப்பட்டது. 

தர்மபாலன் பிறந்த காஞ்சிபுரத்தில், புத்த சமயம் சார்ந்த நூலகம் இருந்தது. தமிழை வளர்ப்பதில் முன்னணியில் இருந்த பாண்டியர், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து, நூல் அரங்கேற்றத்தை முறைப்படுத்தி இருந்தனர்.தஞ்சாவூரை மகாராஷ்டிர சரபோஜி மன்னர்கள் ஆண்டபோது, உலகிலேயே புகழ் பெற்ற பழமை வாழ்ந்த சமஸ்கிருத ஓலைச் சுவடிகளையும், தமிழ் ஓலைச் சுவடிகளையும் பெற்று, பத்திரப்படுத்தி வைப்பதற்காகவே சரஸ்வதி மஹால் நூலகம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தில், 1925க்குப் பிறகு நூலக உணர்வும், எண்ணங்களும் மிகுதியாக வெளிப்படத் தொடங்கின. 1928 ஜனவரி, 30ல், கிருஷ்ணசாமி அய்யர் என்பவரின் தலைமையில், சென்னை மாகாணத்தில், நூலக இயக்கத்தைப் பரப்ப, சென்னைப் புத்தகாலய சங்கம் அமைக்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர், அறிஞர் எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆவார். இச்சங்கம், தன் சீரிய செயல்பாட்டால், மக்களுக்கு பல நூலக நன்மைகளைச் செய்தது. 

உள்ளாட்சிகள், 1948ல், சொத்து வரி மற்றும் வீட்டு வரியின் மீது, ஒரு ரூபாய்க்கு, 3 காசுகள் நூலக வரி பெற வழி வகுத்தது. பின், 1972ல் அது, 5 காசாக உயர்த்தப்பட்டது. 1993 முதல் அது, 10 காசுகளாக உயர்ந்தது. இதன் வழி, தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. இப்பணம் முற்றுமாக, நூல்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. மிகக் குறைந்த சதவீதத் தொகையே, நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. 

எஞ்சியத் தொகை, நூலக ஊழியர்களுக்காகவும், நூலகக் கட்டட வாடகைக்காகவும், செலவழிக்கப்படுகிறது.இந்நிலையில் தான், நூலகத்திற்கு என, சொந்தமாக ஒரு கட்டடம், 172 கோடியில் கட்டப்பட்டது. தற்போது, இதுவும் பறிபோகிறது.

இந்தியாவில் நூலகத் துறையில் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகப் போராசிரியராகவும் இருந்த, எஸ்.ஆர்.ரங்கநாதன், "கோலன் பகுக்கும் முறை' என, நூல் அடுக்கு முறையை முதன் முதல் வகுத்துக் காட்டினார். தமிழகத்தில், நூலகங்கள், வெள்ளைக்கார அரசாட்சியிலேயே தொடங்கி, சுதந்திரம் பெற்ற பின், ஒரு பேரியக்கமாக வளர்ந்தது. தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயில, வாய்ப்பாக பொது நூலகங்கள் அமைக்கப்பட்டன. 

இந்தியாவில் புத்தகங்களை வெளியிடுவதிலும், ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதிலும் கேரளாவும், மேற்கு வங்கமும் முன்னிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம், போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. வாசிக்கும் பழக்கமும் போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் அரசுக்கும், சமுதாயத்திற்கும் தலையாயக் கடமை. 

அதற்கு ஒரு பெரும் வழி, பொது நூலகங்களை விரிவுபடுத்துவது, வசதிப்படுத்துவது. அதற்குச் சரியான எடுத்துக்காட்டு, சென்னையில் புகழ்பெற்ற அண்ணாசாலையில் நாம், நம் மக்களின் மனப்போக்குக்கு தக, திரைப்பட அரங்கைக் கட்டினோம். அதை, "ஏசி' ஆக்கினோம். அதற்கு நேர் எதிரில் அமெரிக்க தூதரகம் ஒரு நூலகத்தைக் கட்டியது. அதை முழுதும், "ஏசி' ஆக்கியது. நம் மனப்போக்குக்கு இதைவிட வேறு சான்று காட்டத் தேவையில்லை.

க.ப. அறவாணன்

புத்தகம்
உங்கள் வீட்டில் எந்த அறையிலும் புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அழகிற்காக அல்ல. ஆன்மாவுக்காக.14 November 2011

மின்வெட்டு - தீர்வுதான் என்ன?தமிழகத்தில் ஆறு மின் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகளால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால், மின்வெட்டு நேரம் ஐந்து மணி நேரமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.


தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு தினமும், 10 ஆயிரம் முதல் 11,500 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் வழக்கமாக, 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது, காற்று வீசும் சீசன் குறைந்து, மழை மற்றும் பனிக்காலம் வந்ததால், காற்றாலை மின் உற்பத்தி, "ஜீரோ' நிலைக்கு வந்து விட்டது. 

காற்று வீசும் நிலைமைக்கு ஏற்ப, 10 மெகாவாட், 20 மெகாவாட் என, விருப்பம் போல் காற்றாலைகளில் உற்பத்தியாகிறது.நேற்று முன்தினம் அதிகாலையில், பூஜ்யம் மெகாவாட்டும், நேற்று காலையில், 10 மெகாவாட்டும் காற்றாலை மின்சாரம் உற்பத்தியானது. அனல் மின் நிலையங்கள் மூலம், 2,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.அதே நேரம், பல மின் நிலையங்களில், பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் கோளாறு காரணமாக ஒரு யூனிட்டும், வருடாந்திர பராமரிப்புக்காக, ஒரு யூனிட்டும் மூடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

ஊத்தங்கரையிலுள்ள தனியார் எஸ்.டி.சி.எம்.எஸ்., நிலையத்திலும் பணிகள் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து, 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குத்தாலம், பேசின்பிரிட்ஜ், வழுதூர் ஆகிய, காஸ் மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றால் கூடுதலாக மொத்தம், 970 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க, வெளிச்சந்தையிலும், டெண்டர் மூலமும், 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. மீத தட்டுப்பாட்டை சமாளிக்க, கூடுதலாக மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கடந்த இரு தினங்களாக, சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற நகரங்களில் நான்கு மணி நேரமும், கிராமப் பகுதிகளில், ஐந்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதில், வழக்கமான மூன்று மணி நேரம் போக, கூடுதல் நேரத்திற்கு, சுழற்சி முறையில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்ற கணக்கில், மின்வெட்டு அமலாகிறது.
மேலே உள்ளது இன்றைய செய்தி.

தலையாய பிரச்னையான இதில் எந்த அரசுமே தொலை நோக்குப் பார்வையில் செயல்படவில்லை என்பதே நிதர்சனம். மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மிக எளிதில் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொடுக்கும் இதில் எல்லா அரசுகளுமே கையாலாகாமல்தான் இருக்கின்றன.

ஏழைகளுக்கு இலவச திட்டங்களை அறிவித்து ஓட்டைத்தான் அறுவடை செய்ய நினைக்கிறார்களே தவிர, அவர்களின் இல்லங்களில் இருள்நீக்கும் மின்தட்டுப்பாட்டைப் பற்றி கவலையே கொள்வதில்லை. சென்னை மக்கள் மட்டும் புன்னியம் செய்தவர்களாம். ஏனென்றால் அவர்களுக்கு மட்டும் ஒரே ஒரு மணிநேரம் மின்வெட்டாம். தமிழகத்தின் பிற பகுதிளுக்கு 4 லிருந்து 5 மணி நேரமாம்.

பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என எல்லோருக்குமே இனி பிரச்னைதான். கற்காலத்திற்கே இனி நாம் போக வேண்டியதுதான். அரசு இதைப்பற்றி ஏனோ வாயே திறப்பதில்லை.

22 வருடங்களுக்கு முன்பு (28.02.1989) 'தினமணி'யில் மின் பற்றாக் குறையை முன்வைத்து எழுதப்பட்ட 'கார்முகிலின் ஒளிவிளிம்பு' என்ற தலையங்கத்திற்கு நான் எழுதிய வாசகர் கடிதம் உங்கள் பார்வைக்கு.....


             கார்முகிலின் ஒளிவிளிம்பு


08.02.1989 தினமணியில் ‘கார்முகிலின் ஒளிவிளிம்பு என்ற தலையங்கம் படித்தேன். தற்போது ஏற்பட்டிருக்கும் மின் உற்பத்தியின் கடும் நெருக்கடியினால் முதலில் பாதிக்கப்படுவோர் விவசாயிகள்தாம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில்லாமல் தங்குதடையின்றி மின் விநியோகம் கிடைத்துவந்தது. பதவியேற்றதும் எதிர்பாராதவிதமாக அவப்பெயருக்கு ஆளாகும் நிலையில் உள்ளது தற்போதய அரசு என்பதை மறுக்கமுடியாது. எண்ணூர் அனல் மின்நிலையத்தினை உடனடியாகச் சீர் செய்யாததின் மெத்தனப் போக்கும், அணுமின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் கோளாறுகளும்தான் இதற்குக் காரணம் என்று பாமரர்கள் நினைக்க வாய்ப்பில்லை.

பயிர்த்தொழிலில் ஈடுபடும் விவசாயி இரவு-பகல் பாராது இனி மின் விநியோகத்திற்குத் தகுந்தவாறு செல்லவேண்டும் என்று கவலையுற்று இருக்கும்போது, டி.வி. அந்தோனி, டி.வி.யில் இராமாயணம், மகாபாரதம் பார்க்கும் நேரங்களில் தடை இருக்காது என்று கூறியிருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

குளு குளு வசதியையும், பகல் சினிமாக் காட்சியையும் நிறுத்தி மின் ஆற்றலை மிச்சப்படுத்தலாம் என்பது அருமையான யோசனை. கல்பாக்கம் அணுமின் உலையின் உற்பத்தித் திறனில் ஏற்படும் இந்தக் கோளாறுகளினால், இனி ஏற்படுத்தப்போகும் அணுமின் உலைகளை அறவே தவிர்த்து, எண்ணெய், நிலவாயு இவற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய அரசு முன்வரவேண்டும். இதை மக்கள் முழு மனதோடு ஆதரிப்பார்கள்.

எம் ஞானசேகரன்.
நாராயணபுரம்.


பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!
உங்களுடைய வாழ்க்கையில் பிரச்னைகளே இல்லாவிட்டாலும் அவற்றை உண்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த ஆலோசனை கொஞ்சம் வேடிக்கையாக இருக்கலாம். எந்த முயற்சியும் செய்யாதவருக்கு பிரச்னைகளே தோன்றுவதில்லை. இதன் பொருள் ‘செயல்படுங்கள்என்பதாகும்.13 November 2011

முளை தானியம் எனும் அற்புத உணவு!

மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.

போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர். இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே.


பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி, 8 மணி நேரம் ஊற வைத்து, பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், 8 - 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். (இப்போது இந்த வேலையைச் செய்யும், "ஸ்பிரவுட்ஸ் மேக்கர்' என்ற பிளாஸ்டிக் டப்பாக்கள் விற்கப்படுகின்றன). இப்படி தயாரான இந்த தானியத்துடன் விருப்பம் போல தேங்காய், வெல்லம், தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள் ஆகியவைகளை சேர்த்தோ, சேர்க்காமாலோ சாப்பிட வேண்டியதுதான்.

இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும், அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான, உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால், கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த முளை தானியத்தில் இருந்து முளை தானியக் கஞ்சி, சப்பாத்தி, தோசை, அடை போன்ற உணவுகளையும் தயாரித்து, சாப்பிடலாம்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன், விட்டமின் ஏ, பி1, பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.
முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால், புற்றுநோய் மட்டுப்படும். 

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். 


முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறையும், மூட்டுவலி தீரும்.இன்னும், இன்னும் இப்படி எத்தனையோ மகத்துவத்தை செய்யவல்லதுதான் முளைவிட்ட தானியங்கள். இப்படி நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல, எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. இருந்தும் இந்த முளைவிட்ட தானியம் மக்களிடம் பிரபலமடையாத தற்கு காரணம், வேகமான உலகில் நாம் இருப்பதுதான். 

இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், அதற்கு யாரும் தயாராக இல்லை. ஒரே வார்த்தைதான், நீங்கள் உங்கள் உடலின் நண்பன் என்றால் மெனக்கெடலாம். இல்லை, எதிரி என்றால் விருப்பம் போல இருந்து கொள்ளுங்கள்.

இந்த முளைவிட்ட தானியங்களின் அருமையை உணர்ந்த சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர், இதை, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளார். ஒரு வேளை உணவாக சிறு, சிறு பாக்கெட்டுகளில் போட்டு, அதில் கூடுதல் சுவைக்காக நெல்லி, கேரட் போன்றவைகளை கலந்து வெறும், ஏழு ரூபாய்க்கு விற்று வருகிறார் 

.உங்கள் வீட்டு விசேஷம் என்றால் வித்தியாசமாக இந்த இயற்கை உணவை பரிமாறவும் இவர் தயார். அல்லது நேரில் வந்து இயற்கை உணவு பற்றி சொல்லுங்கள் என்று போன் போட்டு சொன்னாலும் (93674 21787) உங்கள் இருப்பிடத்திற்கே வந்து சொல்லித் தரவும் தயார். 

எப்படியா வது வரும் தலைமுறை இந்த இயற்கை உணவை சாப்பிட்டு, கொண்டு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். இது, அவருடைய லட்சியம் மட்டுமல்ல; நம்முடையதும்தான். 

நன்றி; தினமலர்

எதை முதலில் செய்யவேண்டும்?
வாழ்க்கையில் நீ முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியதென்ன தெரியுமா? எது அவசியமான நல்ல விஷயம் என்பதல்ல; அவசியமான நல்ல விஷயங்கள் பலவற்றுள்ளும் எதை முதலில் செய்ய வேண்டும், எதை இரண்டாவதாகச் செய்ய வேண்டும், எதைப் பின்னர் செய்ய வேண்டும் என்பதே!