19 December 2009

எப்படி உருவாகிறது பெட்ரோல்?


              
                
              லத்தீன் மொழியில் ‘பெட்ரா’என்றால் பாறை. ‘ஓலியம்’ என்றால் எண்ணெய். ஆக பாறைக்குள் இருக்கும் எண்ணெய் என்ற பொருளில் தான் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ‘நான் அசைவத்தைக் கிட்டே சேர்க்க மாட்டேன்’ என்பவர்கள் பெட்ரோலியத்தைப் பயன்படுத்தவே கூடாது. ஏனென்றால், உயிரினங்கள் இல்லை என்றால் பெட்ரோலியம் இல்லை.
கடலில் இறந்த நுண்ணுயிர்கள் கடலின் அடிவாரத்திலோ அல்லது கடலுக்கருகே இருக்கும் மணல் பகுதியிலோ புதைந்து விடுகின்றன. நூற்றாண்டுகள் நகர நகர பூமியின் வெப்பம், மேற்புறத்தில் அளிக்கப்படும் அழுத்தம், பாக்டீரியாவின் கைவண்ணம் இவை எல்லாம் சேர்ந்து இந்த உயிரினங்களை எண்ணெய் போன்ற திரவமாக மாற்றி விடுகின்றன. அந்த திரவம் மூக்கைத் துளைக்கும் வாசம் கொண்டதாக, கொழ கொழவென்று இருக்கும். அதுவே பெட்ரோலியம்!

                      பொதுவாக ஆக்ஸிஜனே இல்லாத பகுதிகளில்தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. எனவே, பெட்ரோலியக் கிணறுகள் கடல் ஆழத்தில் காணப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. நிலத்தில் பெட்ரோலியக் கிணறுகள் இருக்காதா? இருக்கலாம். ஆனால், ஒரு காலத்தில் அந்தப்பகுதி கடலால் சூழப்பட்டதாக இருந்திருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.!
நிலத்திலிருந்து கச்சா எண்ணெயை எடுத்து, பைப் வழியாகவோ, கப்பல் வழியாகவோ சுத்திகரிப்பு மையத்திற்கு அனுப்புவார்கள. அங்கே கச்சா எண்ணெயிலிருந்து (பெட்ரோல் உட்பட) பல பொருட்கள் பிரித்தெடுக்கப்படும். 42 காலன் கச்சா எண்ணெயிலிருந்து எவ்வளவு பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும் தெரியுமா? சுமார் 44 காலன்! ஆம் கச்சா எண்ணெய் அளவை விட அதிக அளவில் அதிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும். எல்லாம் சுத்திகரிப்பு முறையின் காரணமாகத்தான். சின்ன சோளத்தை வெப்பத்தில் வாட்டி எடுத்தால் பெரிய சைஸ் பாப்கார்ன் கிடைப்பதில்லையா, அது போல!

                   பொதுவாக பிரிட்டனிலும் அது ஆட்சி செய்த நாடுகளிலும் ‘பெட்ரோல்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கனடா போன்ற சில நாடுகளில் அது இல்லை. வட அமெரிக்காவில் அதன் பெயர் ‘காஸோலின்’. சுருக்கமாக ‘கேஸ்’. நாம் பெட்ரோல் பங்க் என்று குறிப்பிடும் இடங்கள் அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ‘கேஸ் ஸ்டேஷன்!.
பெட்ரோலியத்தின் ஒரு பகுதாதான் பெட்ரோல். பெட்ரோலியத்தில் வேறு என்னென்ன பொருள்கள் உண்டு? எரிபொருள் எண்ணெய் (FUEL OIL) என்பது பெரிய தொழிற்சாலைகளில் உள்ள பாய்லர்களில் பயன்படுத்தப்படுகிறது. கரியைவிட இது சிறந்தது. ஏனென்றால், இது எரிந்த பிறகு மிச்சம் என்று எதுவும் இருப்பதில்லை. டீசல் நமக்குத் தெரிந்ததுதான். பேருந்துகள், ரயில்கள், கப்பல்கள், மின்சார ஜெனரேட்டர்கள் ஆகியவற்றில் பயன்படும் திரவம். மண்ணெண்ணெய் கூட பெட்ரோலியத்தின் ஒரு வடிவம்தான். மிகவும் தரமான மண்ணெண்ணெய்தான் விமானங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

                    பெட்ரோலிய வாயு, லூப்ரிகேட்டிங் எண்ணெய், பாரஃபின் மெழுகு, அஸ்ஃபால்ட் (சாலைகளின் மேற்பரப்பில் பயன்படுத்தப்புவது) இப்படிப் பல வடிவங்கள் உண்டு பெட்ரோலியத்துக்கு. ஒவ்வொரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒவ்வொரு பொருள் உருவாகிறது. உதாரணத்திற்கு பெட்ரோலின் கொதிநிலை 40-லிருந்து 170°C வரை. தவிர ஒவ்வொரு பொருளிலும் கார்பன் இருக்கிறது. எவ்வளவு கார்பன்கள் கொண்டவை என்பதைப் பொறுத்தும் இப்பொருள்கள் தீர்மானிக்கப் படுகின்றன. பெட்ரோலில் 5-லிருந்து 10 கார்பன் அணுக்கள். மண்ணெண்ணெயில் 10-லிருந்து 12.

“முதல் தொலைபேசி’
சென்னை நகரில் முதல் தொலைபேசி நிலையம் 1883-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி இயங்கத் தொடங்கியது.

No comments:

Post a Comment