24 October 2010

கோடி கோடியாய் கொட்டும் 'பிச்சை' பிசினஸ்

மும்பை: மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க பிச்சைபிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500.
நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் உருவாவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பிச்சை எடுப்பது எப்படி என்பதை கற்றுத்தரும் பயிற்சி மையத்தை பற்றி சொன்னால் மூக்கின்மேல் விரலை வைக்கத் தோன்றுகிறது.


இந்தியாவின் வர்த்தக நகரம் என்றழைக்கப்படும் மும்பையில் இதுதான் இப்போதைய டாப் பிசினஸ். 1999-ம் ஆண்டு பிச்சை தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் மும்பையில் தட்டும் கையுமாக அலைந்தவர்களை போலீசாரும், அதிகாரிகளும் ஓடி ஓடி பிடித்தனர். அவர்களை மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லை குறைந்தபாடியில்லை. புதிதுபுதிதாக வர ஆரம்பித்தார்கள்.
இவர்கள் எங்கிருந்து உருவாகி வருகிறார்கள்? யார் இவர்களை உருவாக்குவது என்பதை அறியும் முயற்சியில் இறங்கினார் ஒரு பத்திரிகை உளவாளி. அழுக்குத் தலை, கிழிந்த சட்டையுடன் பிச்சைக்காரர்களுடன் ஊடுருவினார். மாறு வேடத்தில் சென்று திரட்டிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சித் தகவல்: மும்பை தாராவி, மால்வானி பகுதிகளில் பிச்சை எடுப்பது எப்படி என்று பயிற்சி தர ஒரு கும்பலே இருக்கிறதாம். இந்த கும்பலின் தலைவர்கள் குருஎன்று அழைக்கப்படுகின்றனர். எச்சைக் கையால காக்கா ஓட்டாத கருமியாக இருந்தாலும் அவரை விடாப்பிடியாக சுற்றிவந்து பிச்சை வாங்குவது எப்படி என்ற டெக்னிக்தான் இங்கு அளிக்கப்படும் முதல் பயிற்சி.

 
போலீசோ அல்லது வேறு யாராவதோ துரத்தினால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற தற்காப்பு கலையும் கற்றுத்தரப்படுகிறது. அப்ரன்டிஸ்டுகளாக சேர்பவர்கள், முதலில் சாப்பாடு கூடையைத்தான் தூக்க வேண்டும். நிரந்தரமாக ஒரு இடத்தில் அமர்ந்து பிச்சை எடுக்கும் தங்கள் கூட்டத்தை சேர்ந்தவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில் முழுக்க முழுக்க பயிற்சிதானாம். மாற்றுத் திறனாளிகளுக்கு நடுரோட்டில் பரிதாபமாக உருண்டு புரண்டு பிச்சை எடுக்க பயிற்சி தரப்படுகிறது.
பயிற்சிக்கு முடிந்ததும் ஏதாவது ஒரு சாலையை அவர்களுக்கு ஒதுக்குவார்கள். அங்கு சுற்றித் திரிந்து பிச்சை எடுக்க வேண்டும். ஓடி, உருண்டு, கத்திக்கத்தி சேர்த்த பணத்தை பைசா குறையாமல் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். ரகசிய கேமராக்கள் மாதிரி, ஆங்காங்கே சில கண்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும். வசூலில் ஏதாவது சுருட்ட நினைத்தால் அவ்வளவுதான்.
பச்சிளம் குழந்தைகளுக்கு இங்கே ஏக கிராக்கி. சில பெண்கள் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கு அனுப்புகின்றனர். ஒரு மாத கைக்குழந்தை என்றால் ஒருநாள் வாடகை ரூ. 100. ஒரு வயது குழந்தையென்றால் ரூ. 50, மூன்று முதல் 5 வயது வரை ரூ. 30 வாடகையாக தரப்படுகிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்தால் வசூல் கொட்டுகிறதாம். மாலையில் கைநிறைய காசோடு திரும்பும்போது பயிற்சி மையத்தில் ஏக வரவேற்புதான். வசூலாகும் தொகையை எல்லாரும் கொண்டுவந்து தந்ததும் எண்ணும் பணி நடக்கிறது.

 
அதில் ஒரு பகுதியை போலீஸ், உள்ளூர் ரவுடிகளுக்கு மாமூல் தர ஒதுக்கி வைக்கப்படுகிறது. மும்பை முழுவதும் சிக்னல்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் பிச்சை எடுக்கின்றனர். இவர்களுக்கு ஒருநாள் கூலியாக தலா ரூ. 500 தரப்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து மாதத்துக்கு ரூ. 15 கோடியை வசூலித்து குருவின் காலில் கொட்டுகின்றனர். முதலீடே இல்லாமல் தர்ம பிரபுக்களின் தயவால் கோடி கோடியாக சம்பாதிக்கும் தொழிலதிபர்களைபோலீசாரும் கண்டுகொள்வதில்லை. ‘‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மூலம் ஏராளமானவர்களை பிடித்து பாதுகாப்பு இல்லங்களில் அடைத்தோம். ஆனாலும் புற்றீசல்போல் இந்த கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது’’ என்கின்றனர் போலீசார்.

ஆதாரம்; தினகரன். 

நானும் மனிதன் தானே!
ஒவ்வொரு மனிதனும் ஏதாவது மிருகத்தனமான காரியத்தைச் செய்வதற்கு முன் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற சமாதானம் வேடிக்கையானது – ‘நானும் மனிதன் தானே!.
 

14 October 2010

உடலின் வாதை


நீ என்னிடம் பேசும்
ஒரு நீண்ட வாக்கியத்தில்
திடீரென ஒரு சொல் மறைந்து
அதன் வெற்றிடத்தில் காற்று ஓலமிடுகிறது.

உன் சந்திப்புகளில்
சில முகங்களை
அதன் திட நிலை கலைத்து
மங்கிய நிழல்களாக்குகிறாய்.

உன் வழித்தடங்கள்
பற்றிப் பேசும்போது
ஒரு பாதையை மட்டும்
வரைபடத்திலிருந்து
சாதுர்யமாக நீக்குகிறாய்.

ஒவ்வொரு முறையும்
மூடப்பட்ட கைகளை
அப்படியொரு நம்பிக்கையுடன் பிரிக்கிறேன்
அதிலிருந்து கண்ணுக்குத் தெரியாத
ஏதோவொன்று பறந்து செல்கையில்
ஏதோவொன்று முறிந்து விழுகிறது

பாதி சொல்லப்பட்ட கதைகளின் வாதை
பாதி வெளிப்படுத்திய உண்மைகளின் வாதை
பாதியே வைக்கப்பட்ட நம்பிக்கயின் வாதை
பாதியே ஏற்க முடிந்த ஒரு நேசத்தின் வாதை

இவையெல்லாம்
உன் நோக்கங்களற்ற நாடகத்தில்
பாதி சிதைக்கப்பட்ட
ஓர் உடலின் வாதையாகின்றன.
-மனுஷ்யபுத்திரனின் பழைய கவிதை


எது ஒதுக்க முடியாத விஷயம்
உறவுகள், உறவுப்பிணக்குகள். உறவுச்சுகங்கள். ஏன்? மனிதன் கூடி வாழும் இயல்பினன். அவன் இயந்திரம் போல தான் மட்டுமே என்று வாழ முடிவதில்லை. அவனுக்கு எதிரியும் வேண்டும், இணைபவரும் வேண்டும். இணைபவர் எதிரியாதலும், எதிரியானவர் இணைதலும் நடப்பதுதான் உலகம்.
--பாலகுமாரன்.

13 October 2010

பழைய துணிகள் பீரோவில் தூங்குகிறதா?





உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? 
நண்பர்களே "சந்தோஷ் பக்கங்கள்" வலைப்பக்கத்தில் இந்தப்பதிவைப் பார்த்தேன். "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார், ரொம்ப நல்ல விஷயம் எனவே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு இந்த தகவல் போய்ச்சேரும்.

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? 

 நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால்... 
"இந்த சுட்டியில்" 
(
https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0
உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.
இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க ப்ளீஸ். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஐந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!
குறிப்பு: உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த, உடைந்த பொருட்களை தருகிறார்கள், உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை, கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து,  அயன் செய்து   உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள். இல்லையென்றால் சும்மா இருங்கள். யாரும் உங்களை குறை 
சொல்ல மாட்டார்கள்.
எது சந்தோஷம்?
எது சந்தோஷம்? என்ற கேள்விக்கு பதில் புதிரானது. சந்தோஷத்தை அளவுகோல் வைத்தெல்லாம் அளந்து பார்க்காதீர்கள். இருக்கிற மகிழ்ச்சியும் காணாமல் போய்விடும்.

12 October 2010

தண்ணீர் தண்ணீர்


ஒரு மனிதன் சாப்பாடு இல்லாமல் ஒரு வாரம் பத்து நாள் கூட இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாள் கூட இருக்கமுடியாது! உண்ணா நோன்பு இருப்பவர்கள் 30-40 நாட்கள் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் இடையிடையே தண்ணீர், எலுமிச்சை சாறு குடிப்பார்கள். ஏனென்றால் தண்ணீர் குடிக்காமல் மூன்று நாளைக்கு மேல் இருக்க இயலாது! நமது உடலே தண்ணீரால் ஆனதுதான். உடல் எடையில் 80% தண்ணீர்தான்.

இரத்த ஓட்டத்திற்கு தண்ணீர் வேண்டும். இரத்தம் ஓடாவிட்டால், இதயம் நின்றுவிடும். தோல் சுவாசிக்கவும் (ஈரம்) தண்ணீர் வேண்டும். தண்ணீர் இல்லையென்றால் தோலில் வெடிப்பு ஏற்படும். நாம் சாப்பிடுவது செரிக்கவும் தண்ணீர் வேண்டும்.

இப்படியாக உடல் இயக்கத்துக்கு நாள்தோறும் குறைந்தது 6-7 தம்ளர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால்தான் நாள்தோறும் குறைந்தது ஏழு தம்ளர் தண்ணீர் குடியுங்கள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

தண்ணீர் பஞ்சம்


ஆனால் அந்த அளவுக்கு நமக்கு தண்ணீர் கிடைக்கிறதா? இல்லை! உலக நாடுகளில் ஒவ்வொரு ஆளுக்கும் எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது என்று ஐ.நா சபை 150 நாடுகளில் ஒரு கணக்கு எடுத்தது. இதில் இந்தியாவுக்கு 133 வது இடம்! இந்தியாவில் அவ்வளவு தண்ணீர் பஞ்சம்! 1955 ல் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5,277 கன மீட்டர் தண்ணீர் கிடைத்தது. இது 2000 ல் 1970 கன மீட்டராக குறைந்தது. 2003 ல் 1880 கன மீட்டர் மட்டுமே கிடைத்தது. இப்போதைய புள்ளி விபரம் தெரியவில்லை.


வரவர உலகில் வெயில் அதிகமாகிறது. துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளெல்லாம் கூட இதனால் மிக அதிக அளவில் உருகிக்கொண்டிருக்கிறது. மழை குறைகிறது. மக்கள் தொகை பெருகுகிறது. இதனால் தண்ணீர் கிடைபது சுருங்கிக்கொண்டே வருகிறது. அடுத்த பத்தாண்டில் நம் நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

குடிதண்ணீர்

அந்தக் கணக்கு-குடிக்க, குளிக்க, துவைக்க, வீடு கழுவ, காடு கழனிகளுக்கு நீர்ப்பாய்ச்ச, ஆடுமாடுகள் குளிப்பாட்ட என்று எல்லாப் பயன்பாட்டுக்கும் சேர்த்தது. மனிதர்கள் குடிக்க மட்டும் பயன்படுத்தும் தண்ணீர் எப்படி இருக்கிறது?


குடிக்க தண்ணீர் கிடையாது. ஆறு, குளம், கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டியிருக்கிறது. அந்த தண்ணீர் சுத்தமாக இருப்பதில்லை. உப்பு கரிக்கும்! குடி தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று 122 நாடுகளில் உலகநாடுகள் சபை கணக்கெடுத்தது. இதில் இந்தியாவுக்கு கடைசி இடம் 119 வது இடத்தில்! இந்திய மக்கள் அவ்வளவு மோசமான தண்ணீரைக் குடிக்கிறார்கள்! இப்போது நகர்ப்புற வாசிகள் ‘மினரல் வாட்டர் என்று தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்குடிக்கும் அவல நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த்த் தண்ணீரும் 50% தான் சுத்தமாக இருக்கிறது என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்!

காய்ச்சிக்குடியுங்கள்

பெரும்பாலான நோய்கள் தண்ணீர் வழியேதான் மனிதர்களுக்குப் பரவுகின்றன. வாந்தி, பேதி, டைபாயிடு, மஞ்சள் காமாலை போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் தண்ணீர் வழியே பரவக்கூடியவை. அசுத்தமான நீரைக் குடிப்பவர்களுக்கு இந்த நோய்கள் வரக்கூடும். நோய்க்கிருமிகள் தண்ணீரில் கலந்திருப்பதே இதற்குக் காரணம். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடித்தால்தான் இந்த நோய்களிலிருந்து தப்ப முடியும். நீரைக்கொதிக்க வைத்து வடிகட்டி, ஆற வைத்து அதன் பின் குடித்தால் இந்த பாதிப்பிலிருந்து மீளலாம்.

தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதனுடன் ஒரு பிடி சீரகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்த சீரகத் தண்ணீர் பல நோய்களுக்கு மிகவும் நல்லது, மேலும் உடம்பில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெருக்கும்.


சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம். விபரம் வேண்டுமா? இந்த வலைப்பதிவைப் போய்ப்பாருங்கள். 
ஆங்கிலத்தில் படிக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்


இதில் நீங்கள் யார்?


முட்டாள் மன்னிக்கவும் மாட்டான், மறக்கவும் மாட்டான். சராசரி புத்தி கொண்டவன் மன்னிப்பான் – மறப்பான்! அதிபுத்திசாலி மன்னிப்பான், ஆனால் மறக்கமாட்டான்.

29 April 2010

ஐஎஸ்பிஎன்


                  ISBN (ஐஎஸ்பிஎன்) என்கிற எழுத்துக்களையும் அதற்கான எண்களையும் பல மேல்நாட்டுப் புத்தகங்களில் பார்த்திருப்பீர்கள். INTERNATIONAL STANDARD BOOK NUMBER (சர்வதேச நிலையான புத்தக எண்) உலகில் உள்ள அத்தனை புத்தகங்களையும் பட்டியலிடவும், கணிப்பொறியாக்கம் செய்யவும் ஏற்பட்ட எண் இது. 


              அது போல யுபிஸி என்று ஒன்று உண்டு. யுனிவர்ஸல் ப்ராடக்ட் கோட். இதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான சரக்குப் பொருட்களின் மேல் பார்த்திருப்பீர்கள். பட்டை பட்டையாக கறுப்பு வெள்ளைக் கோடுகள்.  இது பதினோரு இலக்க எண்ணிக்கை. கறுப்புக்கோடு 0, வெள்ளைக்கோடு 1 என்று சம்பிரதாயம். இரண்டு அல்லது மூன்று பூஜ்ஜியம் சேர்ந்தால் பட்டை தடித்ததாகும். முதல் இலக்கம் பொருளின் வகை, அடுத்த ஐந்து இலக்கங்கள் தயாரிப்பாளர் யார், அடுத்த ஐந்து நிறம், எடை, அளவு போன்ற விவரங்கள். இதில் இல்லாதது ஒன்றே ஒன்று விலை!

             இப்போது எல்லா சூப்பர்மார்கட்டுகளிலும் இந்தப் பட்டைக் கோட்டை ஓர் ஒளிப்பேனாவால் வருடினால் போதும். கணிணி அதைப்படித்து என்ன பொருள், என்ன விலை என்று கண்டுபிடித்து பில் போட்டுவிடும்.




டைவர்ஸ்
உன்னை அவனும்
அவனை நீயும்
முழுமையாக
புரிந்து கொண்டபோது!

28 April 2010

அவளுக்கு ஓர் ஆடை - சில்க் ஸ்மிதா


வாலிப வசந்தங்களின்
திருவிழா தேவதையே!
செப்பனிடப்படாத சொப்பனமே!


மர்மம் சூழ்ந்த உன்
மரண வாசலில்
உனக்கு
மலர் தூவுகிறது!


வறுமையின் கோரப் பிடியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக்கொள்ள முடியவில்லை!
வசதியின் வாழ்க்கைப் படியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக்கொள்ள முடியவில்லை!



அணிந்து மகிழ்வதற்காகவே ஆடைகள்...
உன் ஆடைகளின் கதையோ
சோகமானது...
அவை அவிழ்ப்பதற்காகவே...
அணிவிக்கப்பட்டவை...


'நடிகை' என்று உன்னை
நாடு அழைத்தது!
எங்கள் முன்
ஒரு கேள்வியை
எறிந்தது உன் வாழ்க்கை!
'நடிக்காதவர்' யார்?


நீ தாலி கட்டாமல்
வாழ்ந்தது கூட
தவறல்ல-ஒரு
வேலி கட்டி வாழ்ந்திருக்கக் கூடாதா?


-மு. மேத்தா.
(சில்க் ஸ்மிதா இறந்த போது)

படித்ததில் பிடித்தவை!

பெண்களை வெறும் உடம்பாக நோக்காமல், அவர்களுடைய வீட்டோடும், அவர்கள் பின்புலத்தோடும், அவர்கள் அறிவோடும், அவர்கள் குணாதிசியங்களோடும் சுவீகரித்து நினைத்துக்கொள்ள வேண்டும். பொய் சொல்லாத பெண்ணாகவும், புறங்கூறாத நேர்மையாளியாகவும் பெண் இருந்தால் பழகுங்கள். இல்லையெனில் நீ எனக்கு முக்கியமில்லை என்று அந்நியப்படுத்துங்கள். பெண் என்பவள் அறிவு. பெண் என்பவள் அன்பு, பெண் என்பவள் அக்கறை, பெண் என்பவள் ஆதரவு என்று நின்த்துக்கொண்டால் உடம்பு பற்றிய சிந்தனை உடனே உறைந்து போகும்.                                                                                                    --- பாலகுமாரன். 

எனக்குப் பிடித்த கவிதை


நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை.

அவசரப் படாமல்

‘அனுபவிக்கத்’ தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்

சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை

அவசியத்துக்குக் கூடக்

கோபப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்

தெரியும் என்ற

வாய்ச் சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை.

- கல்யான்ஜியின் ‘முன்பின்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.


படித்ததில் பிடித்தவை !

‘உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க
புத்திசாலித்தனம் தேவையில்லை.
அமைதியாக இருக்கத்தான்
புத்திசாலித்தனம் தேவை’.



இரக்கம்

கதவைத் திறக்கும்போது
காதல் சந்நிதானத்தையே
பிடித்துவிடுகிறது.

9 March 2010

நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது எப்படி?


ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய இரண்டு முக்கியமான தருணங்கள் இருக்கின்றன. முதலாவது திருமணம்... அதற்கும் முன்னதாக இருப்பது இன்டர்வியூவில் கலந்து கொள்வது!




உண்மைதான்... திருமணத்துக்கு நிகரான முக்கியத்துவம் கொண்டதுதான் வேலைக்காக நாம் செல்லும் இன்டர்வியூ. இல்வாழ்க்கையைப் போலவே, இதிலும் பல சூட்சுமங்கள் இருக்கின்றன. என்னதான் படித்திருந்தாலும், தங்க மெடலே வாங்கியிருந்தாலும் இன்டர்வியூவில் தனது திறமையைக் காட்டாவிட்டால் பயனில்லாமல் போய்விடும்.

‘ஒரு நேர்முகத்தேர்வை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமலே இருப்பதும் தேர்வாகாததற்கு முக்கிய காரணம்’ என்கிறார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி. இன்டர்வியூவில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது எப்படி? என்பது பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்துவதில் பத்தாண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்.

ஒரு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது பற்றி அவர் சொன்னவற்றிலிருந்து.....

‘தெளிவாகப் பேசுவதுதான் இதில் முக்கியமான விஷயம். கம்யூனிகேஷன் திறனைச் சோதிப்பதுதான் அதில் பிரதானமாக இருக்கிறது. எந்த இன்டர்வியூவாக இருந்தாலும் முதல் கேள்வி, உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்’ என்பதாகத்தான் இருக்கும். அதற்குச் சொல்லும் பதிலில் இருந்தே ஒருவரைப்பற்றி எளிதாகக் கணித்து விடலாம். அதோடு அந்த முதல் கேள்விக்குச் சொல்லப்படும் பதிலில் இருந்துதான் அடுத்த கேள்விகள் பெரும்பாலும் எழும். அதனால் உங்களைப் பற்றிச் சொல்லும்போது முழுக்கவனத்துடன் பதில் சொல்லுங்கள்.

சொந்த ஊர், படித்த விபரங்கள் அதிகமாகச் சொல்லி, குடும்பம் பற்றிய தகவல்களைக் குறைத்து, செய்திருக்கும் பிராஜக்ட்டுகள் பற்றியும், தனக்கு ஆர்வம் உள்ள ஏரியாக்கள் பற்றியும் தெளிவுபடுத்தி கோர்வையாகச் சொல்லவேண்டும்.

இதில் தெரிந்த சப்ஜக்டை மட்டுமே குறிப்பிட வேண்டும். தெரிந்த்தைப்போல காட்டிக்கொண்டு பதில் சொன்னால் மாட்டிக் கொள்ள நேரிடும். அடுத்து வேலை கொடுக்கும் நிறுவனத்தின் இணைய தளத்தில் ஒருமுறை பார்வையை ஓட்டி, அவர்களுக்கு எங்கெல்லாம் கிளைகள் உள்ளன, என்னென்ன தயாரிக்கிறார்கள் என்பன போன்ற தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது நம்மீது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

கூடுமானவரையில் இன்டர்வியூவிற்கு உங்களை உயர்வாக்காட்டும் வகையில் உடையணிந்து செல்ல வேண்டும். பூப்போட்ட சட்டை, அடிக்கிற வண்ணங்களில் சட்டை, பேன்ட் என்று செல்லாமல் மிதமான வண்ணங்களில் மெல்லிய கோடுகள் கொண்ட சட்டை, உறுத்தாத வண்ணங்களில் பேன்ட் அணிந்து செல்லலாம். டை கட்டுவதில் கூட சில வழிமுறைகள் உள்ளன. அரைக்கை சட்டை அணிந்து சென்றால், உங்களுடைய டை பட்டையாகவும், அகலமாகவும் இருக்கவேண்டும். அதுவே முழுக்கை சட்டை என்றால், டை அகலக் குறைவாகவும், நீளமாகவும் அணிந்து செல்ல வேண்டும்.

பெண்களும் பளபளா வண்ணங்களில் உடைகளை அணியாமல், மென்மையான நிறங்களில் சுடிதாரோ, புடவையோ அணிந்து செல்லலாம். மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்து செல்வது நல்லதல்ல.

எந்த இன்டர்வியூவாக இருந்தாலும் ஆடை அணிந்திருக்கும் விதம்தான் பாதி வெற்றியைத் தீர்மானிக்கிறது. நடந்துகொள்ளும் விதம் அடுத்ததாகவும், சொல்லும் பதில் கடைசியாகவும்தான் இடம் பெறுகிறது.

இன்டர்வியூ நடக்கும் அறையில் நுழையும்போது அனுமதி பெற்று நுழைவது, அனுமதி பெற்ற பிறகு நாற்காலியில் சரியாக அமர்வது, ஏதாவது குறிப்புகள் சொன்னால் எழுதிக்கொள்வதற்கு பேப்பரும் பேனாவும் கொண்டு செல்வது, சிரித்த முகத்துடன் பதில் சொல்வது என்று பழகிப்போன விஷயங்கள்தான் என்றாலும் சலிப்பிலாமல் செய்ய வேண்டும்.

எதைப் பேசும்போதும் உதாரணங்களோடு விளக்கமாகப் பேச வேண்டும். வித்தியாசமாக சிந்திப்பவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்து பதில் சொல்ல வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வேலை நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு இன்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் என்கிறார் ஜெயபிரகாஷ் காந்தி.

நன்றி; நாணயம் விகடன்.


படித்ததில் பிடித்தவை !
லட்சியம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
அடையக்கூடியதாக!

வாழ்க்கை என்பது…?
கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள் சேர்க்கும் போராட்டம்.

8 March 2010

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

     
      மனசிலிருந்து கொட்டும் கவிதை மாதிரிதான் பெண்களும். ஆண்களின் வாழ்வில் எல்லாப் பக்கங்களையும் தங்கள் அன்பால் ஆதி அனாதி காலம் முதல் எழுதிக்கிட்டிருப்பது பெண்களே! நம்மோட வாழ்க்கையை உயிர்ப்போட வச்சிருக்கிறது பெண்கள்தானே!


 "எல்லா மகளிருக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"

மிகப்பெரிய மரம்

          உலகத்திலேயே மிகப்பெரிய மரங்களில் ஒன்றான இம்மரத்தின் அடிப்பகுதி பாட்டில் வடிவத்தில் உள்ளது. இது இருக்கும் இடம் கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தில் ‘சாவனூர்என்ற ஊரில் அமைந்துள்ளது. கன்னடத்தில் ‘தொட்ட உன்ஷே மரம் என்று அழைக்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் புளியமரத்திற்கும் இதற்கும், கிளை, இலை, காய்களில் நிறைய வித்தியாசமிருக்கிறது.

          
          அடிமரத்தின் சுற்றளவுதான் பெரியதாக இருக்கிறதே தவிர உயரம் அதிகமில்லை.மூன்று மரங்கள் அருகருகே அமைந்திருக்கிறது.
இந்த மரம் பாம்பூகேஷியா என்ற குடும்ப வகையைச்சேர்ந்தது. 

          அடிப்படையில் இது ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாக சொல்கிறார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தார் என்ற கதையும்உண்டு. 

          இந்தியாவில் இந்த மாதிரி தாவரங்கள் மிகக்குறைவு. இந்த மரத்தின் காய் மருத்துவ குணம் வாய்ந்தது. இதனுடைய நிழலில் ஏதாவது உணவுப்பொருள் இட்டாலும் அது கெட்டுப் போவதில்லையாம்.

          பலவருடங்களாக இது இருக்கிறது என்று சொல்கிறார்களேயொழிய இதன் வயது பற்றிய தகவல்களோ, கின்னஸ் உலக சாதனைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்கிற தகவலோ இல்லை.

மரம் 1:     அடிமரத்தின் சுற்றளவு (Girth)      - 15.70 மீட்டர்
                உயரம் (Ground height)        -  18. 50 மீட்டர்

மரம் 2:    அடிமரத்தின் சுற்றளவு(Girth)       - 12.92 மீட்டர்
                உயரம் (Ground height)        -  16. 40 மீட்டர் 


மரம் 3:    அடிமரத்தின் சுற்றளவு (Girth)      - 12.63 மீட்டர்
                உயரம் (Ground height)        -  17. 50 மீட்டர்