30 October 2011

எரிமலையின் திரிகளில் தீ வைத்து...


அவள் கேட்டாள்,
பனித்தாமரையாய் உங்கள் கவிதை முகம்
ஏன் கருகியிருக்கிறது?
உங்கள் கண்களில் பார்வை இறந்து கிடப்பது ஏன்?
இப்போதெல்லாம் சிரிப்பதை நிறுத்திவிட்டீர்கள்,
என்ன நேர்ந்தது உங்களுக்கு?
ஏன் மௌனத்தை மட்டுமே
மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

நான் பேசவில்லை,
ஒரே ஒரு புன்னகை மட்டும்
என் உதட்டின் ஒரு கோடியில் பிறந்து
மறு கோடியில் இறந்தது.
உனக்கென்ன!


எரிமலையின் திரிகளில் தீ வைத்துவிட்டுப்
பொழுது போகவேண்டுமென்று
பூப்பரித்துக் கொண்டிருக்கிறாய்!
எனக்குத்தானே தெரியும்,
இதயம் வெடித்து எங்கெங்கே சிதறுகிறதென்று!

கண்ணீரில் வாழ்க்கை செலவழிக்கப்படுகிறது
காதலில்தான் சம்பாதிக்கப் படுகிறது.
விளக்கணைந்தால் மட்டும்தான் இருள் வருமா?
அவள் விலகிச் சென்றாலும் வருகிறதே!


இந்தக் கவிஞர்களெல்லாம்
காதலிகளைவிடக் காதலை அதிகமாய் நேசிக்கிறவர்கள்

இந்தக் கவிதைகள் ரசிப்பதற்குத்தான்; 
வசிப்பதற்கில்லை.

இன்றைய பொன்மொழி
"பொறுமையாக இல்லாதவனுடைய வாழ்க்கைதான் முதலில் சோதனைக்குள்ளாகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புங்கள், எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுகிறீர்கள். கிருமியிலேயே செத்துப் போகிற உயிர்களும் உண்டு. இதயத்தில் துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்து வாழ்க்கையை ஓட்டியவர்களும் உண்டு".


29 October 2011

என்னைப் பிடிக்கவில்லையா?

 
ஒரு போராட்டத்திற்குப் பிறகு உன் தோட்டம் வந்து
உன்னிடம் பூக்களை யாசித்தேன் – நீயோ
என் எடைக்கு எடை விறகு கொடுக்கிறாய்.
இந்தப் பாலைவனத்திற்கு மேல்
ஒரு மேகம் மையமிட்டது – அது
மழை விழுதுகளை இறக்கும் என்று பார்த்தால்
இடியை அல்லவா இறக்கிவிட்டது.

காதலைக் கூட பௌரிகமாய் இரசாயணமாய்ப்
பார்க்கக் கூடாது பெண்ணே!
கண்ணீர் எங்கிருந்து வருகிறது என்றேன் நான்!
கண்ணீரில் உப்பு எங்கிருந்து வருகிறது என்றாய் நீ!

என்னைப் புரியவில்லையா?
அல்லது உனக்குப் புரிந்துவிட்டது என்பது
எனக்குப் புரியவில்லையா?
என் தாகத்திற்கு ஒரு குவளை நீர் கேட்டேன்.
நீயோ இந்துமகா சமுத்திரத்தின் நீள அகலம் பேசுகிறாய்.

என் கண்கள் பொங்குவதை அவள் கவனித்தாள்.
கண்கள் இதயத்தின் ஜன்னல்களாம்.
அந்த ஜன்னல்களுக்கும் நீர்த்திரை போட்டு
இப்படி மறைத்தால் எப்படி?
உண்மையைச் சொல்!
உனக்கு காதலைப் பிடிக்கவில்லையா?
அல்லது என்னைப் பிடிக்கவில்லையா?


வெற்றி!
வெற்றி என்பது 98 சதவிகிதம் வியர்வை சிந்தும் உழைப்பு, 2 சதவிகிதம் காரியத்தை முடிக்க வேண்டும் என்ற ஊக்கம். ஒருவனுக்குக் கிடைக்கும் புகழ், செல்வம், மதிப்பு போன்றவைகள் அவனுடைய புத்திசாலித்தனமான உழைப்பைப் பொறுத்துதான் அமையும்.

ஒரு விலைமகள் போதும்!


அவசரமாய் ரோஜாவை நீட்டி ஐ லவ் யூ என்றேன்.

அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை!
நீட்டிய ரோஜாவை வாங்கிக் கொண்டு
நிதானமாய் நன்றி என்றாள்.
அதிர்ச்சி அவனுக்குத்தான்!

நீ... நீயும்தானே... தப்புத்தப்பாய் தந்தியடித்தேன்.

அவள் சிரித்தாள்... நீளமாய்ச் சிரித்தாள்!
என்னைப் பார்த்து ஐ லவ் சொன்ன
ஆட்களின் வரிசையில்
நீங்கள் கடைசியில் நிறகிறீர்கள்!

ஏன் காதல் என்ற தத்துவத்தில் உனக்கு
நம்பிக்கை அல்லையா?
காதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம்
அதை உடல் சார்ந்ததாகவே உடர்கிறது.
ஆனால் உண்மையில் காதல் என்பது
பாச உணர்ச்சியும் பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி
ஜடை போட்டுக் கொள்கிற சம்பவம்!

பாச உணர்ச்சி மட்டுமே காதல் என்றால்
ஒரு பிராணி போதும்!
பாலுணர்ச்சி மட்டுமே காதல் என்றால்
ஒரு விலைமகள் போதும்!
ஆனால் இந்த இரண்டும்
எந்தப் புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனவோ
அந்தப் புள்ளிதான் காதல்!

இப்போது சொல்லுங்கள்,
நீங்கள் அந்தப் புள்ளியில் நிற்கின்றீர்களா?!


அன்பு!
அன்பு கண்கூடாக வெளிப்படும் சந்தர்ப்பமே பணி என்பது. அன்போடு செய்யும் பணியின் மூலம், கலப்பற்ற பெருமிதத்தை அடையும் பெருந்தன்மையான மனிதனாக உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

24 October 2011

சொல்லிவிட வேண்டும்!


முன்பெல்லாம் எழுதவே தோன்றாது;
நிறைய கவிதை வரும்!
இப்போது நிறையக் கவிதை வருகிறது;
எழுதத்தான் முடியவில்லை
இதுவரை என் தட்டில் உணவு மட்டுமே
பரிமாறப் பட்டிருக்கிறது.
அதில் உணர்வையும் பரிமாறியவள்
இவள் மட்டும்தான்!
காதல் என்ற பருவக்காற்று இப்போது
என் திசையில் வீசப் பார்க்கிறதா?
இல்லை, வீசிக்கொண்டிருக்கிறதா?
இந்த அனுபவம் எனக்கொன்றும்
புத்தம் புதியதில்லை!
நானும் சில பெண்மையின்
பிரம்மாண்டங்களில்
தூரத்து ரசிகனாய்த் துடித்தவன்தான்.
பிரபஞ்சத்தின் ரகசியத்தைப்
பெண்மையில் கண்டறிய நினைத்தவன்தான்.
ஆனால்-எந்தப் பெண்ணும் எனக்குள்
பௌதிக மாற்றங்களை நிகழ்த்தியதில்லை.
சில பெண்கள் என்னையும்,
சில பெண்களை நானும்
கடந்து போனதுண்டு.
அப்போதெல்லாம் கிளி உட்கார்ந்து போன
கிளையாய்...
என் இலைகள் ஆடியதுண்டே தவிர,
என் வேர்கள் ஆடியதில்லை.
என் ஆணி வேரில் அபாயச்சங்கு ஒலித்தது
இவள் வந்தபிறகுதான்.
சொல்லிவிட வேண்டும்!
இந்த மண்ணில்தான்
நல்ல காதல்களும், நல்ல மருத்துவங்களும்
சொல்லப்படாமலேயே தூர்ந்து போயிருக்கின்றன.
சொல்லிவிட வேண்டும்!
அவளுக்குள் என் அதிர்வு பதிவாக வேண்டும்.

23 October 2011

கலைந்து போ! கரைந்து போ! காணாமல் போ!


கலைந்து போ! கரைந்து போ! காணாமல் போ!
இதுதான் காதலுக்கும் கலைக்கும்
பொதுவான தேசியகீதம்
ஏன்? நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
யாரிடமாவது சொல்லத்துடிக்கிற -ஆனால்
சொல்ல முடியாத சக உளைச்சல்.

என் கால்கள் ஒரு கால் நூற்றாண்டு
சகாராவைக் கடந்து வந்தனவே!
இந்த நிழலில் ஒதுங்கத்தானா?
இத்தனை காலம் என் வாலிப நதி
நுரைக்க நுரைக்க ஓடி வந்ததே!
இந்த கடல் மடியில் வந்து கலக்கத்தானா?

யாரும் இப்படி என் மனசை ஆணியடித்து
மாட்டியதில்லையே!
இதற்கு முன்னால் என் புலன்கள்
இப்படி பூப்பூத்ததில்லையே?!
அவள் புன்னகையை எடுத்து பூசிக்கொண்டேன்;
என் காயங்கள் ஆறுகின்றன.

அவள் பார்வை பற்றிப் பரவியதில்
என் சோகங்கள் எரிந்து விட்டன.
நேற்று என் நெற்றி தொட்டாள்
அந்த சித்தர விரல்களின் சீதளத்தில்
அத்தனை உணர்வுகளும்
ஆவியாகிவிட்டன!

அவள் தொட்டால் உச்சிச் சூரியனே உறைந்து விடுமே!
உடற்சூடு எம்மாத்திரம்?!

- வைரமுத்து.

வாழ்க்கையில் உற்சாகம் வேண்டுமா?
தனியாக ஒரு அறைக்குள் உங்களை அடைத்துக்கொண்டு, இன்று நான் உற்சாகமாக இருக்கப் போகிறேன்; உற்சாகமாக வேலை செய்யப்போகிறேன். என் சம்பளம் ஜீரணமாகும் வண்ணம் புன்முறுவலுடன் உற்சாகமாக இன்று முழுக்கப் பணியாற்றப் போகிறேன், என்று உரக்கச் சப்தம் போட்டுச் சொல்லிவிட்டப் புறப்படுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வாழ்க்கையை!

22 October 2011

ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பெண்ணுக்கு விருது!

ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் சட்ட வல்லுனர் அமைப்பும், பெண் சட்ட வல்லுனர் சங்கமும் இணைந்து வழங்கும் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது 2011க்காக வழக்கறிஞர் டாக்டர்.சந்திரிகா சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞருக்கு இவ்விருது பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். டாக்டர் சந்திரிகா சுப்ரமணியன், 2009 ஆண்டில் இது போலவே சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருதுக்குத் தெரிவாகிய முத‌ல் தமிழ்ப் பெண் ஆவார். டாக்டர்.சந்திரிகா சுப்ரமணியன் பிளக்டவுன் சிட் வெஸ்ட் பல்லின பல் கலாச்சார சேவை நிலையத்தில் இலவச சட்ட சேவையை வழங்குகிறார். 

இந்தியாவிலும் இலங்கையிலும் பத்திரிகையாளராகவும், ஊடகத்துறையில் ஆய்வாளராகவும், சென்னைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணி செய்தவர் ஆவார். இதுவரை 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989ம் ஆண்டு இவர் எழுதிய 'மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்' என்ற நூலுக்குத் தமிழக அரசு விருது கிடைத்துள்ளது.


1997ம் ஆண்டு சிட்னியில் குடியேறிய பின்னர், பிற நாடுகளில் இருந்து அங்கு குடியேறியவர்களுக்காக சேவை நிலையங்களில் பணி புரிந்தார். பின் மைக்ரோசாஃப்ட் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் மென் பொருள் பணி பயிற்சியாளராகவும், இரட்டை கலாச்சாரத் துறையில் சிறப்பு பயிற்சியாளராகவும் பணி புரிந்து பின் சமூகத்தில் பெண் பழக்கறிஞர் தேவையை உணர்ந்து சட்டம் பயின்றார்.


தற்போது பரமற்றாவில் சக்ஸஸ் லாயர்ஸ் அண்ட் பாரிஸ்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரிகளில் சட்ட ஆசிரியராகவும் பணி புரிகிறார். இவரது சோமா இலவச சட்ட சேவை அமைப்பு மூலம் வாரந்தோறும் இலவச சட்டச் சேவையை மேற்கு சிட்னியில் வாழும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காக செய்து வருகிறார். 


பெண்களுக்கு சட்டத்துறையின் மூலம் சிறந்த சேவை, பயிற்சி மற்றும் உதவிகளை வழ‌ங்கும் தனி திறமைக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்படுகிறது. அவரது முயற்சிகள் தமிழர்களுக்கெல்லாம் முன்னோடி ஆகும்.

20 October 2011

மீண்டும் உன்னை சந்திக்காமலா போய்விடுவேன்?


உனக்கென்ன...! பெயர் மட்டும் சொல்லி விட்டு
முகவரி சொல்லாமல் போய்விட்டாய்.
ஆனால் மழை நின்ற பிறகும் மலர்கள் நடுங்குவதுபோல்
எனக்குள்... ஏன் இத்தனை அதிர்வுகள்?
உன்னோடு நேர்ந்த அனுபவத்துக்கு
என்னோடு என்ன அடையாளமிருக்கிறது?
என்ன ஆனது எனக்குள்
ஒரே நாள் மழையில் ஏரி நிறைவது மாதிரி
உன் ஒரே பார்வையில் என்
வெறுமை நிறைந்து விட்டதே!
என் ஜன்னல்களை பெண்கள் உரசிப்போனதுண்டு
மேகங்கள் மாதிரி – ஆனால்
உரசிப்போன வேகத்தில் உட்கார்ந்து
மழை பெய்தவள் நீதானடி!
உன் நினைவுகளை அங்குலம் அங்குலமாக
அசைபோட்டுக் கொண்டேயிருகிறேன்.
உன் கருத்துக்களை என்னால் ஏற்க முடியாது
ஆனால் உன் கண்களை என்னால் மறக்க முடியாது.
உன்னை மீண்டும் சந்திக்காமலா போய்விடுவேன்?
வானத்தில் எறியப்பட்ட கல்
விண்ணுக்கு வெளியே சென்று விழுந்துவிட முடியமா?
சந்திப்பேன் நிச்சயம் சந்திப்பேன்.

- வைரமுத்து.

16 October 2011

கள்ளக்காதல்களால் ஏற்படும் கொலைகள்


கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு, குந்தலா அணைக்கட்டின் அருகே, கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம். யாரென அனைவரும் அதிர்ந்து நிற்க, அருகில், புதுப்பெண்ணான மனைவி வித்யாலட்சுமி. தேனிலவு வந்த இடத்தில், யாரோ அனந்தகிருஷ்ணனை கொன்றுவிட்டு, நகைகளை பறித்துச் சென்றதாக அவர் கூற, போலீஸ் விசாரணையும், மொபைல் போன் குறுந்தகவல்களும் உண்மையை வெளிக்கொண்டுவந்தன.

அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்... திருமணமான ஏழே நாளில், அனந்தகிருஷ்ணன் கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயாத நிலையில், கள்ளக்காதலன் ஆனந்துடன் சேர்ந்து, வித்யாவே கணவனை கொன்றது அம்பலமானது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்த இதுபோன்ற விஷயங்கள், தற்போது, தினசரி செய்தியாக மாறிவிட்டன. கணவனுக்கு தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன், மற்றொருவருடன் உறவு வைத்திருப்பது, சாதாரணமாகிவிட்டது.

334
கொலைகள்: மேற்கத்திய மோகமும், தகவல் தொழில்நுட்பக் கலாசாரமும் தமிழகத்தில் ஊடுருவத் துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த வரிசையில், கள்ளக்காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில், உடல் ரீதியான ஈர்ப்பு, பிரதான இடம் பிடித்துவிட்டது.

வீட்டில் கணவன், மனைவியின் தேவைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பூர்த்தியாகாதபோது புதிய துணையைத் தேடுகின்றனர். இந்த விவகாரம் பழைய துணைக்கு தெரியாதவரை பிரச்னை ஏற்படுவதில்லை. தெரிந்துவிட்டால், ஆண், பெண் யாராக இருந்தாலும், கண்டிப்பவரை, "காலி செய்யும்' அளவிற்கு துணிந்து விடுகின்றனர். கடந்தாண்டு மட்டும், 334 கொலைகள் நடந்துள்ளன.

கடந்த 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் 143 ஆண்களும், 120 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவர்களது மனைவிமார்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
காதலில் பல வகைகள் இருப்பதைப் போல், கள்ளக்காதலிலும் மூன்று, நான்கு பிரதான வகைகள் உள்ளன.

கவனத்தில் வராத மனைவியர்: முதல் வகைக்கு பலியாகுபவர்கள், பணமே பிரதானமாகக் கொண்ட ஆண்கள். இவர்களுக்கு, மனைவியிடம் காதலைக் காட்டுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இத்தகைய கணவன்மார்களின் மனைவிகளுக்கு, பக்கத்து வீட்டுக்காரனின், "ஹலோ! சவுக்கியமா?' என்ற குசல விசாரிப்பு கூட, மிகப் பெரிய குதூகலத்தைக் கொடுத்துவிடுகிறது. குசல விசாரிப்பு, "குஜால்' வரை சென்றுவிடுகிறது.

இத்தகைய பெண்களுக்கு, தன்னோடு பழகும் ஆணின் அழகோ, அறிவோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கணவனை விட சுமாரான அழகு, அந்தஸ்து என இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டுகிறான் என்ற எண்ணமே, அவர்கள் பக்கம் இவர்களை விழ வைத்துவிடுகிறது. இது கணவன்மார்களுக்கு தெரியும் போது, முதலில் கண்டிப்பு, அடுத்த கட்டம், கொலை. இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர்கள் ஏராளம் என்கிறது போலீஸ் தரப்பு.

"
மாஜி' காதல்: அடுத்த வகை, திருமணமான பின், கணவனது நடவடிக்கைகள் பிடிக்காமல், முன்னாள் காதலனுடன் கள்ளக்காதல் கொள்வது. பெற்றோர் விருப்பம், நிர்பந்தத்திற்காக காதலித்தவனை விட்டு வேறு ஒருவரை கரம் பிடிக்கும் பெண்கள், சில நேரங்களில் முன்னாள் காதலனை பார்க்கும் போது, மீண்டும் உள்ளிருக்கும் காதல் துளிர்க்கிறது. காதலனோ, பழைய காதலியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள, கள்ளத்தனமாக காதல் வளர்கிறது. 

இதில், பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக உணர்வதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்களிலும், சில நேரம், கட்டுப்படுத்துபவர் உயிர், "கட்டுப்பட்டுப்' போகிறது. இதற்கு, மூணாறு ஹனிமூன் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர, சென்னையில், பள்ளி ஆசிரியை ஒருவர் முன்னாள் காதலனால், கொலை செய்யப்பட்ட சம்பவமும், கள்ளக்காதல் கொலை பட்டியலை உயர்த்தியது.

ஐ.டி., காதல்: ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், பெரும்பாலும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கணவன், மனைவியை தவிர மற்ற உறவினர்களிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலையில், வேலை பளுவும் கூடும் போது, குடும்ப வாழ்க்கை பின்தங்குகிறது. இந்த நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் சகஜமாக பழகுவதால், பல தொடர்புகள் ஏற்படுகின்றன.

மேலும், ஐ.டி., நிறுவனங்களை தவிர, பல வீடுகளில் கணினி வசதி உள்ளதால், "சாட்டிங்' கலாசாரம் மூலமும் கள்ளக்காதல் விவகாரங்கள் பெருகியுள்ளன. பல நாட்கள் சாட்டிங் மூலம் பழகும் சிலர், நேரில் பார்க்கும் போது பிடித்துப் போனால், காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இதில், சிலர் "வீடியோ சாட்டிங்' மூலம், பாலியல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஜாலிக்காக கள்ளக்காதல்: இதைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுக்காக அல்லது செக்ஸ் தேவைக்காக மட்டும் சிலருடன் உறவு வைத்திருப்பதை, "பேஷனாக' கருதுபவர்களும் உண்டு. திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் இந்த வகையில் உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதில் இருவரும், தங்களது உண்மை துணைகளுக்கு ஒருபோதும் துரோகம் செய்வதில்லை; இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர். கள்ளக்காதல் இன்று நேற்றல்ல; பல ஆண்டுகாலமாக இருக்கிறது. முன்பு கள்ளக்காதல் பாவம், துரோகம்; இன்று எல்லாம் சகஜம்.

"
டிவி' தொடர்களும் ஒரு காரணம்: கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக, மனநல நிபுணர் நம்பி கூறியதாவது:
கிராமங்களில் அரசல் புரசலான விஷயங்கள், நகர்ப்புறத்தின் வளர்ச்சியால் தற்போது அதிகரித்துள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால், தொடர்புக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறத்தில், அடுத்த வீட்டில் யார் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு யார் வந்து செல்கின்றனர் என்பதே பலருக்கு தெரியாது. இதனால், ஆணோ, பெண்ணோ தவறு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.

தாம்பத்ய வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகரிக்கும் போதும், கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும் போதும், பிறரது தொடர்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடுகிறது. ஏமாற்றம், விரக்தியில், தேடுதல் உணர்வும் அதிகரிக்கிறது. இதை, ஊடகங்களும் அதிகளவில் ஊக்குவிக்கின்றன. "டிவி' சீரியல்கள் இது போன்ற விஷயங்களை நியாயப்படுத்துவதுடன், இப்படியெல்லாம் செய்யலாம் என்று தூண்டுகின்றன. கணவன்மார்களிடம் இருக்கும் குடிப்பழக்கம், பெண்களிடம் இருக்கும் அறியாமை ஆகியவை, இருதரப்பையும் அரவணைப்பை தேடச் செய்கிறது.

சிங்கப்பூரில், தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த போது, தற்கொலை செய்திகள் வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்குப் பின், தற்கொலை சம்பவங்களே குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர்கள் சிலரும், இது போன்ற கள்ளத்தொடர்பு விஷயங்களை தவறானதில்லை என்று நியாயப்படுத்துகின்றனர். இதை சட்ட விரோதமான உறவு என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு நம்பி கூறினார்.

ஒழுக்கம் தான் ஒரே வழி: இந்த சம்பவங்களில் நடவடிக்கை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடும்ப நல மையங்களில் முதலில், இது தவறு என்று கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. மீறி தவறு செய்யும் போதும், புகார் வரும் போதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், தனி மனித ஒழுக்கம் என்பது முக்கியம். அனைத்து மதங்களிலும், இந்த விஷயம் தவறு என்பது உணர்த்தப்படுகிறது. அதற்கான தண்டனையும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், யாரும் அவற்றை மதிப்பதில்லை.

இந்த விஷயங்களுக்கு ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன. சமூகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படுபவர்கள் மட்டுமே, இந்த விஷயத்தில் சற்று தள்ளி நிற்கின்றனர். கலாசார சீரழிவுக்கு, இந்த விஷயம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாண்டுகளில் அதிகளவில் கள்ளக்காதல் கொலை நடந்த நகரங்கள்:

1.
தர்மபுரி -38
2.
கிருஷ்ணகிரி-27
3.
நாகப்பட்டினம்-23
4.
வேலூர்-20
5.
தேனி-14.
இந்த ஐந்து பகுதிகளும் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சம்பவங்கள்: 

* 2006
ஜூன்: தேனிலவுக்காக மூணாறு சென்ற போது, மனைவி வித்யாலட்சுமியின் ஏற்பாட்டின்படி, கணவன் அனந்தகிருஷ்ணன் கொல்லப்பட்டது.
* 2010
ஜூலை: தண்டையார்பேட்டையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியை, முன்னாள் காதலனால் கொல்லப்பட்டது.
* 2010
ஜூலை: தன் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கச் செய்ததற்காக, கள்ளக்காதலன் ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை, காதலி பூவரசி கொன்று, சூட்கேசில் வீசியது.
*2011-
சார்லஸ் என்பவர், நண்பனின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளத் தொடர்பு காரணமாக கொலையுண்டது.
* 2011
பிப்ரவரி- சிந்தாதிரிப்பேட்டையில் சிரஞ்சீவி என்பவர் மனைவி, கணவனின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதற்காக தீக்குளித்தது.
* 2011
செப்டம்பர்- சூளைமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு, காதலனுடன் சென்று, மூன்று மாதம் கழித்து திரும்பி வந்தது.

நன்றி: தினமலர்.

13 October 2011

ஒரு பொம்பளை அப்படிச் செய்வாளா?!


பெண்களுக்கு நான் எதிரியில்லை. ஆனால் சில விமர்சனங்களை முன்வைத்தே ஆகவேண்டியிருக்கிறது. சமீபகாலமாகப் பாருங்கள் பெண் குற்றவாளிகள் அதிகரித்திருக்கிறார்கள். ஆண்கள் ஈடுபடும் எல்லா வேலைகளுக்கும் இப்போது பெண்களும் போட்டி போடுகிறார்கள். அரசியலிலும் சரி மற்ற எந்த வேலைகளானாலும் சரி.

மாற்றம் வேண்டும். உரிமை எனபது அனைவருக்கும் பொதுவானது. ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் பெண்கள் தாங்களாகவே உரிமைகளை எடுத்துக்கொண்டு செயல்பட முடிவதில்லை.கணவனின் அல்லது பெற்றோரோரின் அனுமதியோடுதான் பொதுவாழ்வில் ஈடுபடமுடியும். இல்லையென்றால் எதற்கும் துணிந்தவர்களாக, எந்த அவதூறுகளுக்கும் செவிசாய்க்காதவர்களாக, குடும்பம் என்ற கட்டுத்தளை இல்லாதவர்களாக, அப்படி குடும்பம் இருந்தாலும் அதிகாரம் தன்கையில் உள்ளவர்களாக, இல்லாத பட்சத்தில் விவாகரத்து செய்துகொண்டு தனியே வாழத்தலைப்பட்டவர்களாகத்தான் இருந்தாக வேண்டும்.


அரசியலை எடுத்துக்கொண்டோமானால் இந்திராகாந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, உமா பாரதி, நம்மூர் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் எல்லாமே குடும்பம் என்ற வளையத்துக்குள் சிக்கவில்லை. அல்லது எவருடைய கட்டுப்பாட்டின் கீழும் இல்லை. தன்னிச்சையாக செயல்படவும், சிந்திக்கவும், முடிவெடுக்கவும் துணிந்தனர். இது எப்படி? முடிந்தது.

அதிகாரமும் பதவியும் கையிலிருந்தால் ஆணென்ன, பெண்ணென்ன? எல்லாம் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் ஆண் அரசியல்வாதிகளைவிட பெண் அரசியல்வாதிகள் மிக பலம் பொருந்தியவர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருந்தனர். இருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு அதிகார பீடங்களைக் கைப்பற்றியவர்கள் எல்லாம் ஆரம்பத்தில் கணவருடைய கைப்பாவையாகவே செயல்பட்டனர். ஆனால் போகப்போக அதிகார பதவியின் ருசியை சுவைக்கத் தொடங்கியவுடன் பெண் அரசியல்வாதிகளும் அப்படியே மாறிப்போயினர். சம்பாதிப்பது ஒன்றே அவர்களின் இலக்கு.

இப்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவதிலும், கள்ளக்காதல் விவகாரங்களிலும் பெண்களின் பெயர்கள் அதிக அளவில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. எப்படியும் பணம் சம்பாதிக்கலாம். இருக்கிறவரை அனுபவித்துவிட்டுப்போ என்ற புதிய நச்சு சிந்தனை எல்லா மட்டங்களிலும் பரவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விபச்சாரமும், திருட்டு, கொலைக்குற்றங்களும் அதிகரித்து வருகிறது. 

இதில் பெண்களின் பங்கும் இருப்பதுதான் வேதனை. ஆனால் சமூகத்திலோ பெண்ணுக்கு பரிதாபம் இரக்கம், சட்டச்சலுகைகள் என்ற பாதுகாப்பு அரண்கள் நிறைய. சுலபமாக ஒரு பெண் இப்போது எந்தக்காரணமுமே இல்லாமல் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கணவன் மீதோ கணவன் குடும்பத்தார் மீதோ வழக்குத்தொடுக்க முடியும். நீதி, நியாயம் பேசுபவர்கள் எல்லாம் பழைமைவாதிகளாகி விட்டனர்.

இந்தச் செய்தியைப் பாருங்கள்........

காரைக்குடி:வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும், பலரிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை, "அபேஸ்' செய்த, "மோசடி' பெண்ணிடம், காரைக்குடியில் போலீசார் விசாரணை நடத்தினர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 42. பரத நாட்டிய கலைஞரான இவர், ஆறுமுகம் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். பரதம் தெரிந்ததால், நாட்டிய பள்ளியையும் நடத்தி வந்தார்.சென்னையில், "கலைமாமணிகள் நடராஜ் சகுந்தலா' என்ற பெயரில், அறக்கட்டளை நடத்தினார். நாட்டியம், அறக்கட்டளை வைத்திருந்ததால் வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., என வசதி படைத்தவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு புவனேஸ்வரிக்கு கிடைத்தது.

பல லட்ச மோசடி: உறவினர் ஒருவர் அமைச்சராக இருப்பதாகவும், அவரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி மதுரை, தேனி, தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் சிலரிடம், 2 லட்சம் முதல், 16 லட்ச ரூபாய் வரை வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள், அரசு வேலை கிடைத்துவிடும் என காத்திருந்தனர். ஏமாந்த சிலர், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அவரது மொபைலும், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததால், பணம் கொடுத்தவர்கள், போலீசில் புகார் செய்தனர்.

போலீசில் புகார்: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரைச் சேர்ந்த பாலமுருகனிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். புவனேஸ்வரி சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி, செப்., 27ல், மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பாலமுருகன் புகார் கொடுத்தார்.மோசடி பெண் புவனேஸ்வரியை, கடந்த 29ம் தேதி கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் புவனேஸ்வரியை காரைக்குடிக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்: விசாரணையில், பாலமுருகனை போன்று தமிழகம் முழுவதும் பலரிடம் பல கோடி ரூபாய் வரை நகை, பணத்தை மோசடி செய்த விவரம் போலீசாருக்கு தெரிந்தது. புவனேஸ்வரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கடந்த, 10 மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியது, குழந்தைகளுக்கு பரத நாட்டியம் கற்றுக்கொடுத்தது, பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும், வங்கியில் கடன் வசதி ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரது தகவலின்படி, காரைக்குடி வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். ஏற்கனவே பணம், நகை கொடுத்து ஏமாந்தவர்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு கருதி போலீசார் புவனேஸ்வரியை வீட்டிற்குள் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும், புவனேஸ்வரி, சென்னை கொண்டு செல்லப்பட்டார்.

நகை, பணம் இழந்தவர்கள் பட்டியல்:காரைக்குடி வி.வி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் மரகதம், 56. இவரது மகள் சுதாவிற்கு ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி, இவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் மற்றும் 7 சவரன் நகை.திருச்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டேவிட், மனைவி நவனீதபோஸ்கோசகாயம் என்பவரிடம் ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி, 7 லட்ச ரூபாய்.காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்த ஆறுமுகம், நடராஜன் சகோதரர்களிடம் பழைய விலையில், "கார்' வாங்கி தருவதாகவும் ஒரு லட்ச ரூபாய்.புவனேஸ்வரி குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடமே, 2.5 லட்ச ரூபாய் வரை பணத்தை, "அபேஸ்' செய்தது தான் ஹைலைட்டான விஷயம்.  

தவிர, சிறு குழந்தைகளுக்கு நடனம், பாட்டு கற்றுத்தருவதாகவும் கூறி அவ்வப்போது, 10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். காரைக்குடியில் மட்டும் ஆட்டோக்காரர்கள் முதல் வி.ஐ.பி., அனைவரும் கோடி கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தது விசாரணையில் தெரிய வந்தது.
 
பெண்களை ஏமாற்ற நாடகம்:அமைச்சர் எனக்கு நெருங்கிய உறவினர் எனக்கூறி பலரிடம் தன் கைவரிசையை காட்டியுள்ளார் புவனேஸ்வரி.கணவனுக்கு தெரியாமல் குழந்தையின் கொலுசு, செயினை அடமானம் வைத்து பல பெண்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.ஒரே குடும்பத்தில் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் பணம் கொடுத்து ஏமாந்து தான் பெரிய விஷயம்.

இப்படி யார் யாருக்கோ நெருக்கம் என்று கூச்சமில்லாமல் கூறித்திரியும் விலைமாதர்களிடமெல்லாம் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை வீண் செய்யும் வீணர்களின் கூட்டத்தை என்ன சொல்வது?