24 October 2011

சொல்லிவிட வேண்டும்!


முன்பெல்லாம் எழுதவே தோன்றாது;
நிறைய கவிதை வரும்!
இப்போது நிறையக் கவிதை வருகிறது;
எழுதத்தான் முடியவில்லை
இதுவரை என் தட்டில் உணவு மட்டுமே
பரிமாறப் பட்டிருக்கிறது.
அதில் உணர்வையும் பரிமாறியவள்
இவள் மட்டும்தான்!
காதல் என்ற பருவக்காற்று இப்போது
என் திசையில் வீசப் பார்க்கிறதா?
இல்லை, வீசிக்கொண்டிருக்கிறதா?
இந்த அனுபவம் எனக்கொன்றும்
புத்தம் புதியதில்லை!
நானும் சில பெண்மையின்
பிரம்மாண்டங்களில்
தூரத்து ரசிகனாய்த் துடித்தவன்தான்.
பிரபஞ்சத்தின் ரகசியத்தைப்
பெண்மையில் கண்டறிய நினைத்தவன்தான்.
ஆனால்-எந்தப் பெண்ணும் எனக்குள்
பௌதிக மாற்றங்களை நிகழ்த்தியதில்லை.
சில பெண்கள் என்னையும்,
சில பெண்களை நானும்
கடந்து போனதுண்டு.
அப்போதெல்லாம் கிளி உட்கார்ந்து போன
கிளையாய்...
என் இலைகள் ஆடியதுண்டே தவிர,
என் வேர்கள் ஆடியதில்லை.
என் ஆணி வேரில் அபாயச்சங்கு ஒலித்தது
இவள் வந்தபிறகுதான்.
சொல்லிவிட வேண்டும்!
இந்த மண்ணில்தான்
நல்ல காதல்களும், நல்ல மருத்துவங்களும்
சொல்லப்படாமலேயே தூர்ந்து போயிருக்கின்றன.
சொல்லிவிட வேண்டும்!
அவளுக்குள் என் அதிர்வு பதிவாக வேண்டும்.

No comments:

Post a Comment