26 March 2011

மாதம் அரை லட்சம் தரும் சி.ஏ.படிப்பு




CA மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகள்...

மதுரை : "" பிளஸ் 2 முடித்து, நான்காண்டுகள் சி.ஏ., படித்தால், 21வயதில் மாதம் 60ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்,'' என தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். சி.ஏ., / ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ படிப்புகள் குறித்து ஆடிட்டர் ஜி. சேகர் பேசியதாவது: பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரி முடித்தவர்கள் மட்டுமே சி.ஏ., படிக்க முடிந்தது. தற்போது பிளஸ் 2 முடித்த உடனேயே சி.ஏ., நுழைவுத் தேர்வு எழுதலாம். இதில் ஏழு பாடங்கள் இருக்கும். மார்ச் 31க்குள் பதிவு செய்ய வேண்டும். அனைத்தும் கொள்குறி வகை வினாக்களாக இருக்கும். ஜூன் 19ல் தேர்வு நடக்கும். 200 மதிப்பெண்கள். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறையும். இதில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ., படிக்கலாம்.

சி.ஏ., படிப்புக்கென தனியாக கல்லூரி கிடையாது. வீட்டிலிருந்து தான் படிக்க வேண்டும். படிக்கும் போது, ஆடிட்டரிடம் உதவியாளராக சேர்ந்து மாதம் 3000 ரூபாயிலிருந்து உதவித்தொகை பெறலாம். சி.ஏ., முடித்த உடனேயே பி.எச்டி., படிப்பில் சேரலாம். மற்ற படிப்புகளுக்கு இந்த சலுகை கிடையாது. தேர்ச்சி பெற்ற பின், நிறுவனங்கள் வீடு தேடி வந்து வேலை வாய்ப்பை வழங்கும். வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் தனியாக பயிற்சி செய்யலாம். இந்தியாவில் சி.ஏ., படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவை. தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. சி.ஏ., போலவே ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ., படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

நான்காண்டு கடின உழைப்பு வாழ்க்கை பாதையை வசதியானதாக மாற்றிவிடும். 24 மணி நேரம் என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான சொத்து. அதை பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடாமல், படிப்புக்காக மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தால், பொழுதுபோக்குகளை தள்ளிவிட வேண்டும். 17 வயதில் படித்து 21 வயதில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் கிடைக்கும் ஒரே படிப்பு சி.ஏ., தான், என்றார்.


சிஏ (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) படிக்கும் மாணவர்களுக்கான சிறப்பு படிப்புகளை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. சிஏ மாணவர்களுக்காக இப்பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் தலா 14 இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகள், 14 பிரிவுகளில் எம்பிஏ, 11 முதுநிலைப் பட்டயப் படிப்புகள், 8 பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் (ஐசிஏஐ), தேசிய பங்குச் சந்தை நிறுவனம் மற்றும் தொழில் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு தொழில்சார் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஐசிஏஐ அமைப்புடன் இணைந்து சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மாணவர்கள், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பை முடித்தவர்களுக்காக இளநிலை, முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது.

இளநிலை வணிகவியல் பிரிவில் பி.பி.ஏ., பி.காம்., படிப்புகளும், முதுநிலை வணிகவியல் பிரிவில் எம்.காம்., எம்.பி.ஏ. படிப்புகளும் வழங்கப்படுகின்றன. சிஏ படிப்பவர்கள் கூடுதலாக ஒரு பட்டப் படிப்பை படிக்கும் வகையில் இத் திட்டத்தை ஐசிஏஐ அமைப்புடன் இணைந்து பாரதியார் பல்கலைக்கழகம் வழங்குகிறது. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மாணவர்களுக்கு சில சலுகைகளுடன் இப் படிப்புகள் தரப்படுகிறது. 

பி.காம்.,: சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்புக்கு ஐசிஏஐ நடத்தும் அடிப்படைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்லது ஐசிஏஐ நடத்தும் இன்டர்மீடியட் நிலையிலான தேர்வில் வெற்றி பெற்றோர் பிகாம் படிப்பில் சேரலாம். 

மூன்று ஆண்டு படிப்பில் ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 5 பாடங்கள் இருக்கும். இவற்றில் சிஏ படிப்பில் ஐசிஏஐ நடத்திய தேர்வில் இருக்கும் பாடங்களை மீண்டும் பி.காம்., தேர்வில் எழுதத் தேவையில்லை. ஆங்கில வழியில் மட்டுமே பாடங்கள் இருக்கும். 

பி.பி.ஏ.,: இப்படிப்பில் சேர பி.காம்., படிப்புக்கான அதே தகுதிகள் தான் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டுக்கும் தலா 5 பாடங்கள் உள்ளன. இவற்றில் 2 மற்றும் 3 ஆண்டுகளில் மட்டும் ஐசிஏஐ தேர்வில் இருக்கக் கூடிய பாடங்கள் வருவதால் அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

எம்.காம்.,: ஐசிஏஐ நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பில் இறுதி நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஐசிஏஐ மூலமாக பாரதியார் பல்கலை.யில் பி.பி.ஏ., பி.காம். பட்டம் பெற்றவர்கள் எம்.காம்., படிப்பில் சேரத் தகுதி உடையவர்கள். 

2
ஆண்டுகள் கொண்ட இப்படிப்பில் தலா 5 பாடங்கள் இருக்கும். இவற்றில் சிஏ இறுதி நிலை தேர்வில் இருக்கும் பாடங்களில், எம்.காம். முதலாண்டில் 2 பாடங்களும், இரண்டாம் ஆண்டில் 5 பாடங்களும் வருகின்றன. இவற்றை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.

எம்.பி.ஏ.,: எம்.காம்., படிப்புக்கான தகுதிகளே எம்.பி.ஏ.,-வில் சேருவதற்கும் பின்பற்றப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கொண்ட இப் படிப்பில் முதலாண்டில் 7 பாடங்களும், இரண்டாம் ஆண்டில் 8 படிப்புகளும் இடம் பெறுகின்றன. ஐசிஏஐ-யின் சிஏ இறுதி நிலை தேர்வில் வரக்கூடிய பாடங்களை எம்.பி.ஏ., தேர்வில் எழுத வேண்டியதில்லை.

இந்த 4 படிப்புகளுக்கும் செப்டம்பர் மற்றும் மே மாதங்களில் தேர்வு நடத்தப்படுகின்றன. இப் படிப்புகள் குறித்த மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர், பாரதியார் பல்கலைக்கழகம்- ஐசிஏஐ படிப்புத் திட்டம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை- 46 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 0422-2428400.


வாதாடுங்கள்!


எதிர்த்துப் பேசாதவரையில் எந்த மனிதனும் உங்களுக்கு புதியதொரு கருத்தைச் சொல்வதில்லை. ஒவ்வொரு புதுக்கருத்தும் உங்களிடம் சேருகிற சொத்து! அதனால் எந்த ஒரு விஷயத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன் நிறைய வாதாடுங்கள்.

24 March 2011

சக்கரவள்ளிக்கிழங்கு




 கூட்டுவண்டி
கட்டிக்கொண்டு
வருவார்கள்
அசலூர் விவசாயிகள்...
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
விற்க.

‘நெல்லு-சோளம்
கம்பு-வரகு
ஒரு வல்லத்துக்கு
ஒரு தூக்கு...
கெழங்கு கெழங்கோய்...

தெருத்தெருவாய்
கூவிப்போவான்
ஏவாரி.

ஏதேனுமொரு
தானியத்தோடு
கிழங்கு வச்டியை
மொய்க்கும்
புட்டிகள்.

கடந்து செல்வோரின்
கிழங்கு மெல்லும் ஓசை
மனசைப் பிசைய...
வைத்து
காக்காக்கடி கடித்து
கூட்டாளி கொடுத்த
கிழங்கின் ருசி
இச்சையை மடங்காக்க...
அம்மாவைப் பார்க்கிறேன்.

‘அதுலாம்
வவுத்துக்கு ஆவாதுப்பா...
என்பாள். ஆனாலும்

‘இந்தாடியம்மா
ஒம்புள்ளகிட்ட குடுன்னு
ஒன்றிரண்டு
கிடைக்குமென்பதற்காகவே

ராத்திரியில்
சிநேகிதி வீட்டில்
நெடுநேரம்
பேசிக்கொண்டிருக்கும்
அம்மா.
அப்படியும்
கிடைக்காதபோது
நான்
உறங்கினபிறகுதான்
வீட்டுக்கு வரும்.
-          ---- கார்முகில்.
   எது வளர்ச்சி?
   எனக்கு அனுபவம் முக்கியம். புதுப்புது அனுபவங்கள் முக்கியம். உலகில் எந்த இயக்கமும், எந்த பாலிசியும், எந்த தத்துவமும் முடிவான முடிவல்ல. வாழ்க்கை நடந்து கொண்டே இருப்பது. வளர்ந்து கொண்டே இருப்பது. எப்போதும் வளரமுடியும். வளர்ச்சி எது. மாறுதலே வளர்ச்சி. மாறாதது வளராது. எது மாறும். உயிருள்ளது அனைத்தும் மாறும்.
 -பாலகுமாரன்.