31 December 2011

கவலை இல்லாத முதலமைச்சர் ?



இந்தியாவில் சில மாநகரங்கள் பெயர் மாறியதைப் போல் ஒரிஸா மாநிலம் இப்போது ‘ஒடிஸாவாகியிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் கடந்த 5 ஆண்டுகளாக நான் பணிபுரிந்து வருகிறேன். கல்வி அறிவு அதிகம் இல்லாததால் சூதுவாது தெரியாமல் இருந்தவர்கள் தற்போது விழித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நான் இங்கு கிரகித்த, பார்த்த சில விஷயங்களை உங்களோடு சில பதிவுகளில் பகிர ஆசையாயிருக்கிறேன். அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை போட்டியே இல்லாமல் நவீன் பட்நாயக் முதல்வராக தொடர்கிறார். அவரைப் பற்றிய ஒரு தமிழ் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையை முதல் அறிமுகமாக இங்கே பகிர்கிறேன்.

சற்று அயர்ந்தால் நம் கழுத்து அறுபடும் அரசியல் சூழ்நிலையிலிருந்து ஒரிஸாவும் வேறுபட்டதல்ல. ஆனால் இப்படிப்பட்ட சூழலிலும் கவலையே இல்லாமல் மூன்றாவது முறை முதல்வராக 12வது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறார் நவீன் பட்நாயக். கண்படும் தொலைவில்கூட எதிரிகள் யாரும் அவருக்கு இல்லை. பிஜு பட்நாயக்கின் செல்வாக்கிலிருந்து முதன்மை பலன் பெற்றவர் நவீன். சர்ச்சைகள் இல்லாதவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் சந்தித்த பிரச்னைகளை வேறுயாராவது சந்தித்திருந்தால் அவர்கள் அரசியலிலேயே இருந்திருக்கமாட்டார்கள்.

*** சுரங்கத்துறையில் 14 ஆயிரம் கோடி ஊழல் வெளியானது.
*** போலி தொழில் நிறுவனங்களுக்கு மானியத்தில் கிடைக்கும் நிலக்கரியை கொடுத்து 1.25 பில்லியன் ரூபாய் இழப்பு.
*** மொச்சை ஊழலில் மிகப்பெரிய அவமானத்தை சம்பாதித்தது. ஆனால் நவீன் மீது குற்றம் ஏதுமில்லாமல் வெளியே வந்தார்.
*** வேதாந்தா பல்கலைக்கழகத்துக்காக இடம் கையகப்படுத்தியது தொடர்பாக ஒரிஸா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில அரசுக்கு மிகப்பெரிய கெட்டப்பெயரை உருவாக்கியது.

ஒரிஸா முதலமைச்சரை சுற்றி இத்தனை சேறு ஓடினாலும் அவர்மீது ஒன்றும் படியாமல் இருப்பது எப்படி?
டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியாவின் உறுப்பினரான பிஷ்வஜித் மொஹந்தி விண்ணப்பித்த தகவல் அறியும் மனு நவீன் பட்நாயக்குக்கு மிகப்பெரிய அசௌகரியத்தை உருவாக்கியுள்ளது. அந்த மனு மூலம் சாதாரண குடிமகனின் குறைகளை கேட்க அவருக்கு நேரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

2000மாவது ஆண்டில் மிகப்பெரிய பரபரப்புடன் தொடங்கப்பட்ட முதலமைச்சர் குறைகேட்கும் பிரிவுக்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை சரமாரியாக குறைந்துவிட்டதன் காரணம் பற்றி டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் உறுப்பினர்கள் அந்த மனுவில் கோரியிருந்தனர். பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் ஊழியர் நிர்வாகத்துறை இந்த மனுவுக்கு அளித்த பதிலில் முதலமைச்சர் குறைகேட்கும் பிரிவு 2004 முதல் 2007 வரை கிட்டத்தட்ட இயங்காத நிலையிலேயே இருந்தது என்பதை தெரிவித்துள்ளது. 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் இரண்டே இரண்டு கூட்டங்கள்தான் நடந்துள்ளன.

மற்ற அரசியல்வாதிகள் போல நவீன் பட்நாயக் ஊடகத்தினருடன் சரியான உறவை மேற்கொண்டதில்லை. அவரது 12 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2000த்தில் மட்டுமே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அத்தனை கூச்சலுக்கு பிறகும் நவீனின் வாய்ப்புகள் ஏதும் பாதிக்கப்படவே இல்லை.


ஒரிஸா சட்டசபையில் நடந்த சமீப கூட்டத்தில் பருப்பு ஊழல் பிரச்னை மிகப்பெரிதாக வெடித்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் சம்மதித்தது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மதிய உணவு திட்டத்திற்காகவும் கூடுதல் உணவூட்ட திட்டத்திற்காகவும் வாங்கப்பட்ட பருப்பு தரமற்றது என்றும் கெட்டுப்போனதாய் இருந்ததும் தெரியவந்தது. 

ஆனால் சந்தை விலையைவிட இந்த பருப்பு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பருப்பு கொள்முதல் தொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் செய்த புலனாய்வின் வழியாக இந்த ஊழலில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்பு இருந்தது தெரியவந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஊழல் குற்றச்சாட்டில் நவீன் பட்நாயக் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

ஒரிஸா உயர்நீதிமன்றமும் இந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள பருப்பு ஊழலில் நவீன் பட்நாயக்கை விசாரிக்க வேண்டும் என்று வந்த பொதுநல வழக்கை அனுமதித்தது. இதையடுத்து அரசு குற்றச்சாட்டுகளை சமாளிப்பதற்காக பருப்பு கொள்முதல் முறையை சீரமைத்து தனியார் ஒப்பந்ததாரர்களை அகற்றியது. இதன் மூலம் நவீன் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பினார்.


சுரங்கத்துறையை பொறுத்தவரை ஒரிஸா அதிக தாதுவளம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். உலகளாவிய நிறுவனங்களில் பிரம்மாண்டமான முதலீடு ஒரிஸாவில்தான் உள்ளது. நவீனின் முதலமைச்சர் பதவிக்காலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 5000 ஹெக்டேர் நிலம் சுரங்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவான பிரசாத் ஹரிசந்திரன், "தகவல் அறியும் மனுவின் மூலம் கூறப்பட்டதில் 12க்கும் மேற்பட்ட முன்னணி சுரங்க எஃகு நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக இரும்பு, குரோமைட் மற்றும் மாங்கனீசு தாதுக்களை விதிமுறைகளுக்கு மாறாக எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரிஸா மாசுகட்டுப்பாட்டு துறை, இந்திய சுரங்கத்துறை, மாநில சுரங்கத்துறை, வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அலட்சியமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது" என்கிறார். 

ஒரிஸாவிலிருந்துஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தாதுக்களை போலியான அனுமதி சீட்டுகளை கொண்டு எடுத்து செல்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அனுமதி சீட்டுகளை குறிப்பிட்ட வர்த்தகர்களே அச்சிட்டுக்கொள்ளலாம் என மாநில அரசு அனுமதித்துள்ளதால் அரசுக்கு அதிகபட்சமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சுரங்க துறையின் உயரதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதிலும் முதலமைச்சர் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. மாநில அரசு வட்டாரத் தகவல்களின்படி, சுரங்க ஊழல் தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் மீது குற்றப்பத்திரிகைகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத சுரங்க தொழிலால் அரசுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு துறை மூலம் சட்டவிரோதமாக சுரங்கத்தொழிலில் ஈடுபட்டதாக 2823 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் மூலம் தண்டத்தொகையாக 16 கோடியே 73 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது.


ஒரு முதலமைச்சராக நவீன் பட்நாயக்கின் பணியை பார்ப்பவர்கள் தனது நேர்மையான பிம்பத்துக்கு பங்கம் வந்தால் யாரையும் தண்டிக்க தயங்கமாட்டார் என்பதை உணர்வார்கள். இதுகுறித்து யாருக்கும் மாற்று அபிப்ராயம் இல்லை. முறைகேடு செய்த தனது அமைச்சரவையின் உறுப்பினர்கள் யாரையும் அவர் தண்டிக்க தயங்கியதே இல்லை. 2001 ஆம் ஆண்டு தனது முதல் ஆட்சி காலத்திலேயே மூன்று செல்வாக்கு மிக்க அமைச்சர்களை வெளியேற்றினார்.


நவீன் அந்த விஷயத்தையும் புன்னகையுடனேயே செய்வார். தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் 12 அமைச்சர்களை ஊழல், முறைகேடு மற்றும் திறனின்மைக்காக நீக்கினார். "ஊழல் தொடர்பான சகிப்பின்மை என்பதெல்லாம் பழைய கதை. தற்போது நவீனே ஊழலை ஊக்குவிக்கிறார்" என்கிறார் ஒரிஸா காங்கிரஸின் துணை தலைவரான ஷிவானந்த ரே. "அரசியல் வட்டாரங்களில் நிலக்கரி ஊழலில் ஒரு அமைச்சரவையாவது நீக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இந்த ஊழலால் 125 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது" என்கிறார்.


அதேபோலவே வேதாந்தா பல்கலைக்கழகத்துக்கு நிலங்கள் கையகப்படுத்திய விவகாரமும் மாநில அரசுக்கு அவமதிப்பானது. ஆனால் நவீன் பட்நாயக் சிறு கீறலும் இல்லாமல் இப்பிரச்னையில் இருந்து தப்பித்தார். இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற பெஞ்ச் அரசு நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என தீர்ப்பளித்தனர். இப்பிரச்னையில் 22 கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் பேர் தங்கள் நிலங்களுக்காக பல்கலைக்கழக திட்டத்தை எதிர்த்து போராடினார்கள். ஆனால் மாநில அரசோ உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியது.
 
நவீன் பட்நாயக்கின் இரண்டாவது ஆட்சி காலமும் சர்ச்சைகள் இல்லாதது அல்ல. ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் என பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஒரிஸாவின் சாதாரண குடிமகன் நவீன் பட்நாயக் மீது நம்பிக்கை வைத்துள்ளதுதான் ஆச்சர்யமாகியிருக்கிறது?!.

29 December 2011

பசியோடு இருங்கள்; முட்டாளாக இருங்கள்; ஸ்டீவ்ஜாப்ஸ்


'வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு புள்ளி. வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் இந்தப் புள்ளிகளுக்குள் இருக்கும் தொடர்பு புரியும். இந்தப் புள்ளிகள் எப்படியாவது சந்திக்கும் என்று நாம் நம்ப வேண்டும். இதற்குக் காரணம் உள்ளுணர்வு, விதி, வாழ்க்கை, கர்மா என்று பல காரணங்களைச் சொல்லலாம். நான் இதை நம்புகிறேன்'.

இந்த வாழ்க்கைத் தத்துவத்தால் ஸ்டீவ் இறந்த காலம் பற்றி அழவில்லை; வருங்காலம் பற்றி கவலைப்படவும் இல்லை.

'உங்கள் வாழ்க்கை குறுகியது. இன்னொருவருக்காக வாழ்ந்து அதை வீண்டிக்காதீர்கள். நீங்கள் நிஜமாகவே என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மனதுக்கும், உள்ளுணர்வுக்கும் தெரியும். அவற்றைப் பின்பற்றுங்கள்' என்று சொன்ன ஸ்டீவ், ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்ந்தார். மரணம் வருவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்னால் வரை, அவர் உழைப்பு ஓயவில்லை.

திறமை, திறமை, திறமை!

வெற்றியின் மந்திரச்சாவி திறமை மட்டுமே என்பதை ஸ்டீவின் அசைக்க முடியாத நம்பிக்கை. நம்பர் 1 திறமைசாலிகள் மட்டுமே அவரோடு வேலை செய்ய முடியும். இரண்டாம் தர ஆட்களை வேலைக்கு எடுத்தால், அவர்கள் மூன்றாம் தர ஆட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நடைமுறை கம்பெனிகளை எழுந்திருக்கவே முடியாத படுகுழிக்குள் தள்ளிவிடும் என்பது ஸ்டீவின் கொள்கை.



பசியோடு இருங்கள்; முட்டாளாக இருங்கள்!

அமெரிக்க ஸடான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 2005 ல் ஸ்டீவ் பேசினார். தன் வாழ்க்கையின் சித்தாந்தம் என்னவென்று இளைய தலைமுறைக்குச் சொன்னார். அது, STAY FOOLISH, STAY HUNGRY.


அப்படியென்றால்....? உங்கள் வெற்றிகளில் எப்போதுமே திருப்திப்படாதீர்கள். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கிற பசி உங்கள் அடிவயிற்றில் வெறியாக எறியட்டும். சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருக்கும் மரபுகளை உடையுங்கள். செம்மறியாட்டுக் கூட்டமாக எல்லோரும் போகும் பாதையில் போகாமல் புதிய பாதையைப் போடுங்கள்.

மரபுகளை மீறும்போது, உலகம் உங்களைக் கேலிசெய்யும்; முட்டாள் என்று செல்லும். நீங்கள் அடியெடுத்து வைக்கும் பாதை சரியானதென்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால், உங்கள் பயணத்தை தயக்கமே இல்லாமல் தொடருங்கள். அந்த நான்கு பேர் கணிப்பில் 'முட்டாள்களாகவே இருங்கள்'.

இந்தப் பசியும் புதுமைத்தேடலும் இருந்தால்தான், சிங்கநடைபோட்டு சிகரத்தில் ஏறி விண்ணைத் தொட்டார் ஸ்டீவ்.

26 December 2011

சென்டிமெண்ட் மனிதர்கள்!


ஒவ்வொரு முறையும்
வீட்டில்
குப்பைகளை ஒழிக்கும்போது,
தொண்டை எரிச்சலும்
தும்மல்களுமே மீதமாகின்றன!

பழம்புடவை, நைந்த கொசுவலை,
உடைந்த குடை, சக்கரமில்லா
பொம்மைக் கார்கள்,
இடமடைக்கும் சைக்கிள்,
சுவாசமிழந்த வி.சி.டி.பிளேயர்,
அடுக்கடுக்காய் புத்தகங்கள்...
இன்னும் இன்னும்
இண்டு இடுக்குகளிலும்
ஏராள அடைசல்கள்!

பத்தடி அகல அறையில்
புழங்குதல் என்பது
புழுங்குதல்!

ஒவ்வொரு முறையும்
உற்சாகமாய் ஆரம்பிக்கும்
குப்பை ஒழிப்பு;
குப்பைகளின் பழங்கதை பேசி
இதமாக நகர்கிறது.

இற்று வெளுத்த பிங்க் நிற சட்டை;
கழித்துக் கட்ட நினைக்கும்போது;
'கல்யாண சட்டைங்க....
இருக்கட்டும்... இருக்கட்டும்...'
என்பாள் என்னவள்.

உடைந்த குடையை
எடுத்து வீசினால்,
'நீங்க துபாய் போனப்போ
வாங்கினது...
இருக்கட்டும்... இருக்கட்டும்...!
என்பாள் மீண்டும்!

சக்கரம் ஒடிந்த
காரை எடுத்தால் -
'அப்பா அதை வீசாதே...
விளையாட வேணும்...'
என்பாள் சின்ன வாண்டு.

பயன்படா தலைகிளிப்,
ரிப்பன், கவுன்களைத் தொட்டால்,
கண்களில் நீர் காட்டி
கலங்க வைப்பாள் தலைச்சன் மகள்.
இப்படி ஒவ்வொரு
குப்பைக்குப் பின்னாலும்
தடைகளாய் நிற்கிறது சென்டிமெண்ட்.

வீட்டை ஒழித்து முடிக்கும்போது,
குப்பைகள்
இடம் மாறுகிறதே தவிர,
ஒழிவதே இல்லை!

ஆஸ்துமா, அலர்ஜி தும்மல்களோடு
குப்பையோடு குப்பையாகவே
வாழ்ந்து மடிகிறார்கள்!
சென்டிமெண்ட் மனிதர்கள்!

நன்றி; பெ. கருணாகரன்

13 December 2011

எதிர்கட்சிகளின் பொறுப்பு

எப்போதுமே எதிர்க்கட்சிகள் என்பவை எதிரிக்கட்சிகளாகவே செயல்பட்டு வருவது தெரிந்ததே! ஆளும் கட்சி எடுக்கும் மோசமான முடிவுகளை எதிர்பதைத்தான் நாம் விரும்புகிறோமே தவிர, எல்லா பிரச்னைகளையுமே எதிர்த்து பாராளுமன்றத்தையே முடக்குகின்ற செயலை நடுநிலையாளர்கள் யாருமே விரும்புவதில்லை. 

சமீபத்திய 'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் விஷயத்தில் எதிர்கட்சிகளின் எதிர்வினையால்தான் அது இப்போது கேள்விக்குரியதாகி இருக்கிறது.எல்லாவற்றையும் எதிர்த்து கெட்ட பெயர் சம்பாதிப்பதைவிட இந்தக் காங்கிரஸ் அரசின் ஊழல்களை மக்களிடத்திலே பரப்ப முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த 1989 ம் ஆண்டில் ராஜிவ்காந்தியை பதவியிலிருந்து இறக்க அப்போதைய ஜனதா தளம் போராடியபோது நான் எழுதிய வாசகர் கடிதம் உங்கள் பார்வைக்கு........




எதிர்க்கட்சிகளின் தற்போதைய போக்கு மோசமானதாகவே உள்ளது. ஆளும் கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், இவைகளின் அடிப்படை நோக்கம் ராஜிவ் காந்தியை பதவியை விட்டு இறக்குவதேயாகும். அதற்காக இவர்கள் நாடாளுமன்ற விதிகளைக் கூட மீறத்துங்கிவிட்டனர். 


ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் யாருமே தம்மீது குற்றம் சாட்டப்பட்டால் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனே தாம் வகித்து வரும் பதவியிலிருந்து விலகுவர். ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறுவது அரிதாகிவிட்டது. இந்திலையில் எதர்க்கட்சிகள் ராஜிவ் பதவி விலகவேண்டும் என்று பலமுறை கூறுவதும், அவை நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்வதும் நல்லதல்ல.


மாறாக ஆளுங்கட்சிகளின் குறைகளை, ஊழல்களை நாட்டு மக்களுக்கு உணர்த்தி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று நிலையான ஒரு தலைவரை முன்னிருத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜிவைத் தோற்கடிக்க முயலலாம். 


அதைவிட்டு இவர்கள் பதவிப்போட்டி, மாற்றுக்கொள்கைகள், ஒத்துழையாமே போன்றவற்றை தங்களுக்குள்ளே வைத்துக்கொண்டு ராஜிவ் பதவி விலக வேண்டும் என்று மட்டும் கூறினால், பிறகு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?


பதவிப்போட்டியினால் இன்னும் மோசமானதொரு நிலைக்குத்தான் இந்தியாவைக் கொண்டு செல்வார்கள்.


எம்.ஞானசேகரன்.

10 December 2011

முதல் கோணல்... முற்றும் கோணலாகுமா...?

இது எனது ஐம்பதாவது பதிவு

நேற்று கொல்கத்தாவில் நடந்த கொடூர கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 90 ஐத் தாண்டியுள்ளது. மருத்துவமனைக்கென கட்டுமானம் கொண்ட கட்டிடத்தில் உடனடியாக தீவிபத்தை தடுக்க முடியாத காரணத்தினால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் சிலர் தப்பித்திருக்கலாம். மருத்துவமனையில் படத்த படுக்கையாய் நடக்க முடியாமல் இருந்த அத்தனை நோயாளிகளும் இந்த தீ விபத்தில் சிக்கியிருக்கின்றனர். உயிர்ப்பலியின் எண்ணிக்கை இன்னும் கூட அதிகரிக்க வாய்ப்பண்டு.


இந்த நேரத்தில் தமிழக முதல்வரின் புதிய தலைமை செயலகத்தையும், அண்ணா நூலகத்தையும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்கிற யோசனை எத்தனை விபரீதமானது என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும். ஆனால் மாறுமோ மனம். முதல்வரின் பிடிவாதம்தான் வெல்லுமோ?

இவருக்கு என்னமோ புதிதாக மருத்துவமனை மீது பாசம் வந்துள்ளது, அழகாக கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தையும், அண்ணா நூலகத்தையும் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்கிறார், முதலில் இருக்கிற ஜார்ஜ் கோட்டை இட பற்றாகுறையினால் புது தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று ராணி மேரி கல்லுரியையும் அண்ணா பலகலைகழக வளாகத்தையும் சேதபடுதியது இவர்தான், இப்போது உலகிலேயே best Eco-friendly administrative building என புகழ பட்ட இந்த புதிய தலைமை செயலகத்தை மாற்ற நினைப்பதில் இருந்து இவரின் உண்மை முகம் தெரிகிறது. 


கருணாநிதி கட்டியது என்ற காரணத்தால்தான் இவர் இதை மாற்றுகிறார் என்றால் எப்படியும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், ஜார்ஜ் கோட்டை இடப் பற்றாக்குறை காரணமாக நான் வேறு ஒரு தலைசெயலகம் கட்டப் போகிறேன் என்று நம் வரிப்பணத்தை நிச்சயம் வீணடிக்கத்தான் போகிறார். நாமும் பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டும்.  

கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நம் வரிப்பணத்தால் கட்ட பட்டது, அதை பெரும் பொருட் செலவில் மருத்துவமனையாக மாற்றபடுவதும் நம் வரிப்பணத்தில், இன்னும் புதிதாக இவரின் விருப்பத்திற்கேற்ப கட்டப்போகும் புதிய தலைமைச் செயலகமும் நம் வரி பணத்தில். ஆக ஓட்டுப் போட்டவன் எல்லாருமே கோமாளிகள். இவர்கள் எல்லோருக்கும் நெற்றியில் பட்டை நாமம. 


இது இந்த முதல்வரின் உச்ச கட்ட பழி தீர்ப்பு. ஹோட்டல் கட்டி அதை கோவில் ஆக்க நினைத்தால் என்ன நடக்குமோ அதுதான் இங்கயும் நடக்க இருக்கிறது. தி.மு.க.வினருக்கு எல்லா இடத்திலும் தங்கள் பேரை பதிக்கணும் இவங்களுக்கு அதை எடுக்கணும் இதுதானே இப்ப நடந்துகிட்டு இருக்கு. கடைசியில் ஒரு செலவுக்குப்பதில் இரு செலவுகள் என்று மக்கள் தலையில்தான் விடியப்போகிறது.

எந்த ஒரு கட்டிடத்தையும் மாற்றி அமைத்து , வேறு பயனுக்கு கொண்டுசெல்வது சாத்தியமே. இதற்கு நல்ல முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பெற்று, தகுந்த தொழில் நுட்பத்தை கையாளவேண்டும். மாற்றியமைப்பதற்கு நிதி மற்றும் தகுந்த கால அவகாசம் தரப்பட வேண்டும். நிதி மேலாண்மையில், எந்த ஒரு மாற்றமும், முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் விலையில், ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தாலே, நியாயமானதாக ஏற்றுக்கொள்ளப்படும். இங்கு அதையும் தாண்டி செல்லுமாகையால், பழைய உபயோகத்திற்கே கொண்டு செல்வது சிறந்தது. மருத்துவமனை புதிதாக கட்டுவது உத்தமம்.


முந்தய ஆட்சியாளர்கள் கோடி கணக்கில் நம்முடைய வரிபணத்தை செலவுசெய்து அதை முழுமையாக்காமல் சென்றுள்ளார்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் அந்தக் கட்டிடம் எதற்காக கட்டப்பட்டதோ அதற்காகவே பயன்படவேண்டும் ஏனெனில் மருத்துவமனைக்கான அடிப்படை வசதியே அக்கட்டிடத்தில் இல்லை. அக்கட்டிடத்தை திரும்பவும் கோடிக் கணக்கில் நம்முடைய வரிபணத்தை செலவுசெய்து மருத்துவமனையாக மாற்றுவது எளிதல்ல. 

அதேசமயத்தில் தலைமை செயலகதிற்காக உருவாக்கப்பட்டதை எந்தவித மாற்றமும் இல்லாமல் கட்டிடத்தை முழுமையாக்கி தலைமை செயலகமாக்க முனையாவிட்டாலும் ஏதோ ஒரு அரசு அலுவலகமாக செயல்பட ஆட்சியாளர்கள் முடிவு எடுக்க வேண்டும் சிந்திப்பார்களா ?
ஆட்சி மாறும்போதெல்லாம் முந்தைய அரசின் கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் பணியை புதிதாக பொறுப்பேற்கும் அரசு செய்ய ஆரம்பித்தால் அது வெட்டி வேலையாகவே அமையும், மேலும் மக்களின் வரிப்பணமும், அரசின் நேரமும் வீணடிக்கப்படும்.


துக்ளக் ஆட்சியில்தான் யாரைப்பற்றியும் எதப்பற்றியும் கவலைப்படாமல் முடிகள் எடுக்கப்படும். அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அந்த கட்டடமே இடிந்தாலும் ஆட்சியாளர்கள் கவலை படப்போவதில்லை. அவர்களின் நோக்கமே நினைத்த்தை செயல்படுத்தியாக வேண்டும். சமீபத்திய பால், பேருந்து, மின்கட்டணங்களைப் போல. இதைத்தான் என்போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம், எவரும் (தினமலர் முதற்கொண்டு) ஒத்துக்கொள்ளவில்லை. இப்போதாவது தினமலரின் ஞானக்கண் திறந்திருக்கிதே!!! மகிழ்ச்சி!!!

முதல் அறிவிப்பு இப்படி என்றல் முதல் கோணல் முற்றும் கோணல் தானே அப்ப அண்ணா நினைவு நூலகம் நிலை அதுவும் இதே போல் தானே தனக்கு எல்லாம் தெரியும் என்றால் நம்பிக்கை தனக்குதான் எல்லாம் தெரியும் என்றால் தலைகனம் ஆனால் அதை தைரியம் என்று பாராட்ட ஒரு கூட்டம் இருக்கும் போது இது தான் நடக்கும்.


ஏற்க்கனவே வேறு ஒரு காரணத்திற்க்காக கட்டிய கட்டிடத்தை மாற்றுவது மக்களின் உயிரின் மீது விளையாடுவதற்கு சமமானது. அதுதான் இப்போது கொல்கத்தாவில் நடந்திருக்கிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இதற்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? நாட்டுமக்களுக்கு நல்லது செய்ய தான் உங்களுக்கு பதவி கொடுத்தார்களே தவிர உங்கள் சொந்த பிரட்சனைகளைத் தீர்த்துக்கொள்ளவும், பழிவாங்கவும் இல்லை. 
(கொல்கத்தா மருத்துவமனையின் சில புகைப்படங்களையும் இணைத்திருக்கிறேன்.)

கவலைப்பட நேரம் ஒதுக்குங்கள்! 
கவலைப்பட என்று சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதற்கென்று பத்து நிமிடம் ஒதுக்கிக் கொண்டு அன்றைய கவலைகளையும் பற்றி வரியைக் கிரமமாகக் கவலைப்படுங்கள்.
கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு, முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு கவலைப்படுங்கள். பத்து நிமிடம் ஆனவுடன், இன்றைக்கு கவலைப்பட்டாயிற்று என்று தாளைக்கசக்கித் தூக்கி எறியுங்கள். இதன்மீலம் மற்ற நேரங்களை மகிழ்ச்சியுடன் செலவிடலாம்.

எம்.ஞானசேகரன்.

4 December 2011

வாழைப்பழங்களில் சிற்பம்; ஜப்பான் இளைஞர் சாதனை!


நமக்கு வாழைப் பழம் கிடைத்தால் என்ன செய்வோம்... "இதென்ன கேள்வி... பழத்தை சாப்பிட்டு, தோலை, குப்பையில் தூக்கி வீசுவோம்...' என்று தானே கூறுகிறீர்கள். 

ஆனால், ஜப்பானைச் சேர்ந்த, 23 வயது இளைஞர் ஒருவர், வாழைப்பழங்களில் விதவிதமான சிற்பங்களை உருவாக்கி, அசத்துகிறார். அவரின் பெயர், கெசுகி யமெடி. "வழக்கமான சிற்பங்களை உருவாக்குவதற்கு பதிலாக, வித்தியாசமான சிற்பங்களை உருவாக்கலாமே...' என்ற எண்ணம் இவருக்கு தோன்றியது; உடனடியாக களத்தில் இறங்கி விட்டார். 


வித்தியாசமான சிற்பங்கள் என நினைத்ததுமே, அவரின் கண் முன் தோன்றியது, வாழைப்பழம் தான். வி.ஐ.பி.,க்களின் முகங்கள், பிரபலமான கார்ட்டூன் உருவங்கள் என, விதவிதமான சிற்பங்களை, வாழைப்பழத்தைக் கொண்டு உருவாக்கி, சாதனை படைத்துள்ளார். வாழைப் பழத்தை தவிர, பற்பசையை மட்டுமே, சிற்பங்கள் உருவாக்கு வதற்கு கூடுதலாக இவர் பயன் படுத்துகிறார். இந்த ஒவ்வொரு சிற்பத்தையும் உருவாக்குவதற்கு, அதிகபட்சமாக அரை மணி நேரம் தான் எடுத்துக் கொள்கிறார். 


"அதெல்லாம் சரி... வாழைப்பழங்கள் விரைவில் கெட்டுப் போய் விடுமே, பின் எப்படி இந்த சிற்பங்களை பாதுகாக்கிறீர்கள்...' எனக் கேட்டால், வித்தியாசமான பதில் அவரிடம் இருந்து வருகிறது. "வாழைப்பழ சிற்பங் களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என்று யார் கூறியது? சிற்பங்களை உருவாக்கிய பின், அதனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வேன். பின், அந்த வாழைப்பழம் கெட்டுப் போவதற்கு முன், சாப்பிட்டு விடுவேன்...' என, நாக்கைச் சப்புக் கொட்டியபடி, கிண்டலாக பதில் அளிக்கிறார், அந்த ஜப்பான் இளைஞர்.
நன்றி; தினமலர்.

வாழைப் பழத்தைப் பற்றி மேலும் அறிய இந்த 'சுட்டி'க்குச் செல்லுங்கள். தமிழில் அல்ல ஆங்கிலத்தில்.

சிரியுங்கள்!
மனிதப் பிறவியே சிரித்து மகிழ்வதற்காகத்தான். முகத்தை வாழைப்பூ மாதிரி தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. சூரியகாந்தி மாதிரி மலர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனால்........எப்போதும் சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்கத்தான் வாழக்கூடாது.