31 December 2011

கவலை இல்லாத முதலமைச்சர் ?



இந்தியாவில் சில மாநகரங்கள் பெயர் மாறியதைப் போல் ஒரிஸா மாநிலம் இப்போது ‘ஒடிஸாவாகியிருக்கிறது. இந்த மாநிலத்தில்தான் கடந்த 5 ஆண்டுகளாக நான் பணிபுரிந்து வருகிறேன். கல்வி அறிவு அதிகம் இல்லாததால் சூதுவாது தெரியாமல் இருந்தவர்கள் தற்போது விழித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நான் இங்கு கிரகித்த, பார்த்த சில விஷயங்களை உங்களோடு சில பதிவுகளில் பகிர ஆசையாயிருக்கிறேன். அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை போட்டியே இல்லாமல் நவீன் பட்நாயக் முதல்வராக தொடர்கிறார். அவரைப் பற்றிய ஒரு தமிழ் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையை முதல் அறிமுகமாக இங்கே பகிர்கிறேன்.

சற்று அயர்ந்தால் நம் கழுத்து அறுபடும் அரசியல் சூழ்நிலையிலிருந்து ஒரிஸாவும் வேறுபட்டதல்ல. ஆனால் இப்படிப்பட்ட சூழலிலும் கவலையே இல்லாமல் மூன்றாவது முறை முதல்வராக 12வது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறார் நவீன் பட்நாயக். கண்படும் தொலைவில்கூட எதிரிகள் யாரும் அவருக்கு இல்லை. பிஜு பட்நாயக்கின் செல்வாக்கிலிருந்து முதன்மை பலன் பெற்றவர் நவீன். சர்ச்சைகள் இல்லாதவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் சந்தித்த பிரச்னைகளை வேறுயாராவது சந்தித்திருந்தால் அவர்கள் அரசியலிலேயே இருந்திருக்கமாட்டார்கள்.

*** சுரங்கத்துறையில் 14 ஆயிரம் கோடி ஊழல் வெளியானது.
*** போலி தொழில் நிறுவனங்களுக்கு மானியத்தில் கிடைக்கும் நிலக்கரியை கொடுத்து 1.25 பில்லியன் ரூபாய் இழப்பு.
*** மொச்சை ஊழலில் மிகப்பெரிய அவமானத்தை சம்பாதித்தது. ஆனால் நவீன் மீது குற்றம் ஏதுமில்லாமல் வெளியே வந்தார்.
*** வேதாந்தா பல்கலைக்கழகத்துக்காக இடம் கையகப்படுத்தியது தொடர்பாக ஒரிஸா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாநில அரசுக்கு மிகப்பெரிய கெட்டப்பெயரை உருவாக்கியது.

ஒரிஸா முதலமைச்சரை சுற்றி இத்தனை சேறு ஓடினாலும் அவர்மீது ஒன்றும் படியாமல் இருப்பது எப்படி?
டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியாவின் உறுப்பினரான பிஷ்வஜித் மொஹந்தி விண்ணப்பித்த தகவல் அறியும் மனு நவீன் பட்நாயக்குக்கு மிகப்பெரிய அசௌகரியத்தை உருவாக்கியுள்ளது. அந்த மனு மூலம் சாதாரண குடிமகனின் குறைகளை கேட்க அவருக்கு நேரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

2000மாவது ஆண்டில் மிகப்பெரிய பரபரப்புடன் தொடங்கப்பட்ட முதலமைச்சர் குறைகேட்கும் பிரிவுக்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை சரமாரியாக குறைந்துவிட்டதன் காரணம் பற்றி டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் உறுப்பினர்கள் அந்த மனுவில் கோரியிருந்தனர். பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் ஊழியர் நிர்வாகத்துறை இந்த மனுவுக்கு அளித்த பதிலில் முதலமைச்சர் குறைகேட்கும் பிரிவு 2004 முதல் 2007 வரை கிட்டத்தட்ட இயங்காத நிலையிலேயே இருந்தது என்பதை தெரிவித்துள்ளது. 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் இரண்டே இரண்டு கூட்டங்கள்தான் நடந்துள்ளன.

மற்ற அரசியல்வாதிகள் போல நவீன் பட்நாயக் ஊடகத்தினருடன் சரியான உறவை மேற்கொண்டதில்லை. அவரது 12 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2000த்தில் மட்டுமே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அத்தனை கூச்சலுக்கு பிறகும் நவீனின் வாய்ப்புகள் ஏதும் பாதிக்கப்படவே இல்லை.


ஒரிஸா சட்டசபையில் நடந்த சமீப கூட்டத்தில் பருப்பு ஊழல் பிரச்னை மிகப்பெரிதாக வெடித்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் சம்மதித்தது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மதிய உணவு திட்டத்திற்காகவும் கூடுதல் உணவூட்ட திட்டத்திற்காகவும் வாங்கப்பட்ட பருப்பு தரமற்றது என்றும் கெட்டுப்போனதாய் இருந்ததும் தெரியவந்தது. 

ஆனால் சந்தை விலையைவிட இந்த பருப்பு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பருப்பு கொள்முதல் தொடர்பாக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் செய்த புலனாய்வின் வழியாக இந்த ஊழலில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்பு இருந்தது தெரியவந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஊழல் குற்றச்சாட்டில் நவீன் பட்நாயக் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

ஒரிஸா உயர்நீதிமன்றமும் இந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள பருப்பு ஊழலில் நவீன் பட்நாயக்கை விசாரிக்க வேண்டும் என்று வந்த பொதுநல வழக்கை அனுமதித்தது. இதையடுத்து அரசு குற்றச்சாட்டுகளை சமாளிப்பதற்காக பருப்பு கொள்முதல் முறையை சீரமைத்து தனியார் ஒப்பந்ததாரர்களை அகற்றியது. இதன் மூலம் நவீன் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பினார்.


சுரங்கத்துறையை பொறுத்தவரை ஒரிஸா அதிக தாதுவளம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். உலகளாவிய நிறுவனங்களில் பிரம்மாண்டமான முதலீடு ஒரிஸாவில்தான் உள்ளது. நவீனின் முதலமைச்சர் பதவிக்காலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 5000 ஹெக்டேர் நிலம் சுரங்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவான பிரசாத் ஹரிசந்திரன், "தகவல் அறியும் மனுவின் மூலம் கூறப்பட்டதில் 12க்கும் மேற்பட்ட முன்னணி சுரங்க எஃகு நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக இரும்பு, குரோமைட் மற்றும் மாங்கனீசு தாதுக்களை விதிமுறைகளுக்கு மாறாக எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரிஸா மாசுகட்டுப்பாட்டு துறை, இந்திய சுரங்கத்துறை, மாநில சுரங்கத்துறை, வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் அலட்சியமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது" என்கிறார். 

ஒரிஸாவிலிருந்துஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தாதுக்களை போலியான அனுமதி சீட்டுகளை கொண்டு எடுத்து செல்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அனுமதி சீட்டுகளை குறிப்பிட்ட வர்த்தகர்களே அச்சிட்டுக்கொள்ளலாம் என மாநில அரசு அனுமதித்துள்ளதால் அரசுக்கு அதிகபட்சமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சுரங்க துறையின் உயரதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதிலும் முதலமைச்சர் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. மாநில அரசு வட்டாரத் தகவல்களின்படி, சுரங்க ஊழல் தொடர்பாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் மீது குற்றப்பத்திரிகைகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத சுரங்க தொழிலால் அரசுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு துறை மூலம் சட்டவிரோதமாக சுரங்கத்தொழிலில் ஈடுபட்டதாக 2823 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் மூலம் தண்டத்தொகையாக 16 கோடியே 73 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது.


ஒரு முதலமைச்சராக நவீன் பட்நாயக்கின் பணியை பார்ப்பவர்கள் தனது நேர்மையான பிம்பத்துக்கு பங்கம் வந்தால் யாரையும் தண்டிக்க தயங்கமாட்டார் என்பதை உணர்வார்கள். இதுகுறித்து யாருக்கும் மாற்று அபிப்ராயம் இல்லை. முறைகேடு செய்த தனது அமைச்சரவையின் உறுப்பினர்கள் யாரையும் அவர் தண்டிக்க தயங்கியதே இல்லை. 2001 ஆம் ஆண்டு தனது முதல் ஆட்சி காலத்திலேயே மூன்று செல்வாக்கு மிக்க அமைச்சர்களை வெளியேற்றினார்.


நவீன் அந்த விஷயத்தையும் புன்னகையுடனேயே செய்வார். தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் 12 அமைச்சர்களை ஊழல், முறைகேடு மற்றும் திறனின்மைக்காக நீக்கினார். "ஊழல் தொடர்பான சகிப்பின்மை என்பதெல்லாம் பழைய கதை. தற்போது நவீனே ஊழலை ஊக்குவிக்கிறார்" என்கிறார் ஒரிஸா காங்கிரஸின் துணை தலைவரான ஷிவானந்த ரே. "அரசியல் வட்டாரங்களில் நிலக்கரி ஊழலில் ஒரு அமைச்சரவையாவது நீக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இந்த ஊழலால் 125 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது" என்கிறார்.


அதேபோலவே வேதாந்தா பல்கலைக்கழகத்துக்கு நிலங்கள் கையகப்படுத்திய விவகாரமும் மாநில அரசுக்கு அவமதிப்பானது. ஆனால் நவீன் பட்நாயக் சிறு கீறலும் இல்லாமல் இப்பிரச்னையில் இருந்து தப்பித்தார். இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற பெஞ்ச் அரசு நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என தீர்ப்பளித்தனர். இப்பிரச்னையில் 22 கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் பேர் தங்கள் நிலங்களுக்காக பல்கலைக்கழக திட்டத்தை எதிர்த்து போராடினார்கள். ஆனால் மாநில அரசோ உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியது.
 
நவீன் பட்நாயக்கின் இரண்டாவது ஆட்சி காலமும் சர்ச்சைகள் இல்லாதது அல்ல. ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் என பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஒரிஸாவின் சாதாரண குடிமகன் நவீன் பட்நாயக் மீது நம்பிக்கை வைத்துள்ளதுதான் ஆச்சர்யமாகியிருக்கிறது?!.

No comments:

Post a Comment