எப்போதுமே எதிர்க்கட்சிகள் என்பவை எதிரிக்கட்சிகளாகவே செயல்பட்டு வருவது தெரிந்ததே! ஆளும் கட்சி எடுக்கும் மோசமான முடிவுகளை எதிர்பதைத்தான் நாம் விரும்புகிறோமே தவிர, எல்லா பிரச்னைகளையுமே எதிர்த்து பாராளுமன்றத்தையே முடக்குகின்ற செயலை நடுநிலையாளர்கள் யாருமே விரும்புவதில்லை.
சமீபத்திய 'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் விஷயத்தில் எதிர்கட்சிகளின் எதிர்வினையால்தான் அது இப்போது கேள்விக்குரியதாகி இருக்கிறது.எல்லாவற்றையும் எதிர்த்து கெட்ட பெயர் சம்பாதிப்பதைவிட இந்தக் காங்கிரஸ் அரசின் ஊழல்களை மக்களிடத்திலே பரப்ப முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த 1989 ம் ஆண்டில் ராஜிவ்காந்தியை பதவியிலிருந்து இறக்க அப்போதைய ஜனதா தளம் போராடியபோது நான் எழுதிய வாசகர் கடிதம் உங்கள் பார்வைக்கு........
எதிர்க்கட்சிகளின் தற்போதைய போக்கு மோசமானதாகவே உள்ளது. ஆளும் கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், இவைகளின் அடிப்படை நோக்கம் ராஜிவ் காந்தியை பதவியை விட்டு இறக்குவதேயாகும். அதற்காக இவர்கள் நாடாளுமன்ற விதிகளைக் கூட மீறத்துங்கிவிட்டனர்.
ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் யாருமே தம்மீது குற்றம் சாட்டப்பட்டால் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனே தாம் வகித்து வரும் பதவியிலிருந்து விலகுவர். ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறுவது அரிதாகிவிட்டது. இந்திலையில் எதர்க்கட்சிகள் ராஜிவ் பதவி விலகவேண்டும் என்று பலமுறை கூறுவதும், அவை நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்வதும் நல்லதல்ல.
மாறாக ஆளுங்கட்சிகளின் குறைகளை, ஊழல்களை நாட்டு மக்களுக்கு உணர்த்தி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று நிலையான ஒரு தலைவரை முன்னிருத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஜிவைத் தோற்கடிக்க முயலலாம்.
அதைவிட்டு இவர்கள் பதவிப்போட்டி, மாற்றுக்கொள்கைகள், ஒத்துழையாமே போன்றவற்றை தங்களுக்குள்ளே வைத்துக்கொண்டு ராஜிவ் பதவி விலக வேண்டும் என்று மட்டும் கூறினால், பிறகு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
பதவிப்போட்டியினால் இன்னும் மோசமானதொரு நிலைக்குத்தான் இந்தியாவைக் கொண்டு செல்வார்கள்.
எம்.ஞானசேகரன்.
No comments:
Post a Comment