14 April 2014

இரண்டு குரல்கள்காலக்குரல்
அடே வைரமுத்து
உலகு மீதான உனது வியப்பு
தீர்ந்தாலும் தீருமொருநாள்
அற்றாலும் அற்றுப்பொகும்
பட்டாம்பூச்சியின் சிறகில்
பயணிக்கும் உன்னாசை
பெண்மூட்டும் உஷ்ணத்தை
வாங்கிப் பெருக்கும் வல்லமையை
செல்கள் இழக்கலாம் சிறுகச் சிறுக
போர்த்தொழில் போலும் புணர்ச்சி வேட்கை
குற்றேவலென்று குறுகியொழியலாம்
தேகத்தினுள்ளே ஒளிந்திருந்து
திடூரென்றொருநாள் வெள்ளையாய்க் குதித்துப்
பல்லில்லாதவனை மெல்லும் முதுமை
உறவுகளுக்குமுன் கிட்னியோ
கிட்னிக்குமுன் உறவுகளோ
உன்னைக் கைவிடும் திருநாள் வரலாம்
முன்பல்லில் நீ கொறித்த சூரியன்
கடைவாய்ப் பல்லில் கடித்த பூமி
அடிநாக்கில் அதக்கிய நெல்லிக்காய் நிலவு
நினைவுக்கயிறு துண்டித்தேடலாம்
மொழிகள்
அநாகரிகங்கள் ஆகிப் போக
எண்களால் மட்டுமே இயங்கலாம் உலகு
என்னதான் செய்குவை
அந்நாள் எய்துமுன்..?

கவிக்குரல்
அந்நாள் எய்துமுன்
அகோ என்
மாக கவிதைகள்!
ஐம்பூதங்களை உண்டு நிமிர்கள!
என்னில் திரண்டு என்னில் அடரந்து
உட்செல் துளைத்து உயிர்த்திரை கிழித்து
ஞான மின்னல் நாற்புறம் விசிறி
மோழிகள் உரச இடிகள் சிதறி
அண்ட சராசரம் விண்டு பொடிபட
சரசர சரவென சரமழை பொழிக!
சூரியன் அக்குள்
பூமியின் அல்குல்
ஆழ்கடல் மர்மம்
ஆகாய முதுகு
தீயின் நாவுகள்
காற்றின் சிறகுகள்
ஆதியின் முதல் நொடி
காலத்தின் கடைநொடி
எல்லாம் எல்லாம் எல்லாம் நனைக
மழையின் இழையில் மானுடம் மலர்க!

11 April 2014

வெற்றி வேண்டுமா?
நாம் போடும் திட்டங்களைச் செயலாக்கும்போது தடங்கலாக வருபவற்றை நீக்கி வெற்றி பெறுவதுதான் நம் சாதனை. வெற்றியடைந்தே தீரவேண்டும் என்ற நோக்கமும், வெற்றி நிச்சயம் என்ற மனப்பாங்கும்தான் தேவை

நம் நினைப்புக்கு மாறாக நிகழ்வுகள் அமைந்துவிட்டால்?

சீர் செய்து கொள்ள சில வழிகள்;

எதிர் பாராத நிகழ்ச்சி ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்று அலசுங்கள்.
ஆக்கபூர்வமாக உங்களையே சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள்.

தகுதியானவர்களிடமிருந்து அறிவுறை கேளுங்கள்.

அதிர்ஷ்டம், சூழ்நிலைகள்இப்படி உங்களால் கட்டுப்படுத்த முடியாதவற்றின் மீதோ, அல்லது கட்டுப்படுத்த முடியாத நபர் மீதோ பழி போடாதீர்கள்.

எந்த கஷ்டத்திற்கும் ஒரு தீர்வு உண்டு என்று நம்புங்கள். 

உங்களுடைய செயல்பாட்டுத் திட்டங்களை மீண்டும் திருத்தி அமைத்துக்  கொள்ளுங்கள்.  

தேவையானால் மீண்டும் முதலிலிருந்தே ஆரம்பியுங்கள்.

துணிச்சலான சோதனைகளில் செயல்படுங்கள்.

எதிலாவது தோல்வி ஏற்பட்டாலும், அதிலும் நல்ல அம்சங்களைப் பாருங்கள்.

மிகப்பெரிய சாதனையாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்.

பிரச்னைகள் தலைதூக்கும் போதெல்லாம் மேற்கண்ட விதிகளைப் பின்பற்றி வெற்றி குவியுங்கள்.

MARTIN RHODES எழுதிய Personal achievement என்ற புத்தகத்திலிருந்து.

7 January 2014

"அர்ஜூனா' என்ற ஆங்கிலப்புத்தகம் எழுதிய தமிழ்ப்பெண்!விருதுநகர் மண்ணில் பிறந்து வளர்ந்து, சென்னையில் படித்து, சிவகாசியின் மருமகளாய் வசிக்கும் 29 வயது குடும்பத்தலைவி அனுஜா... இன்று உலக வாசகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இவர் எழுதிய "அர்ஜூனா' என்ற ஆங்கிலப்புத்தகம், வெளியான சில மாதங்களிலேயே பிரபலமாகி விட்டது. மகாபாரதத்தை தழுவி, அர்ஜூனன் என்ற கதாபாத்திரத்தை மையமாக்கி, ஓர் ஆங்கில காப்பியத்தை தமிழ்ப்பெண், தன் முதல் படைப்பாய் படைத்திருப்பதுஎழுத்துலகின் அசைக்க முடியாத பதிவு.

சிவகாசியில் அனுஜாவுடன் ஒரு நேர்காணல்...

மகாபாரத அர்ஜூனன் - உங்கள் எழுத்தில் எப்படி வந்தார்?
என் குழந்தை பருவத்தில், தாத்தாவும் பாட்டியும், மகாபாரத கதைகள், கிருஷ்ணன் கதைகள் சொல்வார்கள். இதனை பள்ளியில் தோழிகளிடம் சொல்வேன். ஒரு திரைப்படம் பார்த்தாலும், அதனை கதையாக சொல்வது எனது கலை. அப்போதே நான் ஒரு "கதை சொல்லி'. அப்பா நிறைய புத்தகங்கள் படிப்பார். எனக்கும் அந்த நல்ல பழக்கம் ஏற்பட்டது. அமர்சித்ர கதைகள் துவங்கி வேதவியாசரின் மகாபாரதம், அதற்கு ராஜாஜியின் உரை என நூற்றுக்கணக்கான புத்தகங்கள் படிப்பேன். 

மகாபாரத கதாபாத்திரங்களாக பீமன், கர்ணன், கண்ணன் என பலர். இருந்தாலும் அர்ஜூனன், என் கவனத்தை ஈர்த்தார். அவர் பற்றி அவ்வளவாக புத்தகங்கள் இல்லை. எனவே ஆராய்ச்சியில் இறங்கினேன். பல்வேறு தகவல்களை திரட்டினேன். நவீன ஆங்கிலத்தில், இன்றைய வாசகர்களுக்கும் புரியும் விதத்தில், குட்டி குட்டி கதைகளை கோர்த்து எழுதினேன். அர்ஜூனன் தன் சகோதரர்களிடம் பேசும் வசனங்கள் சிலவற்றை கற்பனை கலந்து, சிறிது நகைச்சுவையுடன் உருவாக்கினேன்.
எத்தனை நாட்கள் ஆனது?

இந்த காப்பியம் படைக்க எத்தனை நாட்கள் ஆனது?

எனக்கு வேதா, வர்ணா என்று இரு குழந்தைகள். இரண்டாவது குழந்தை கருவில் இருக்கும் போது, இந்த "கதைக்கரு' உருவாகி, எழுத ஆரம்பித்தேன். ஒன்றரை ஆண்டு ஆனது.

குழந்தைகளை கவனித்துக் கொண்டே, எழுத்தாளர் ஆனது எப்படி?

சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி., (சைக்காலஜி), பின்னர் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்றேன். பி.எஸ்.சி., மூன்றாண்டு முடியும் வேளையில் திருமணம் முடிவானது. அப்போது எனது பேராசிரியை ஒருவர் சொன்னார்; "நீ நல்ல மனைவியாய், மருமகளாய் இருப்பது போல, சமூகத்திற்கு ஏதாவது செய்!'. அதுவே மனதில் நின்றது. "வெளிநாடுகளுக்கு சென்று, பிரபல பத்திரிகையாளர் ஆவேன்' என்று பள்ளி, கல்லூரி நாட்களில் அடிக்கடி அப்பாவிடம் சொல்வேன். மகளை வெளியே எல்லாம் அனுப்ப, அப்பா விரும்பவில்லை. என்றாலும், என்னுள் எழுத்தார்வம் இருந்தது. என்னை அடையாளப்படுத்த, எழுத்து துறையே சரி என்று பட்டது. கணவர் சந்திரமவுலி வித்யாசாகர் (தொழிலதிபர்), எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி தந்து எழுத தூண்டினார். எனது அத்தைக்கு, கீதை அத்துப்படி. அவரும் நிறைய படிக்கவும், எழுதவும் ஊக்கமளித்தார்.
 
அடுத்த உங்கள் படைப்பு...

"காமதேவன்' பற்றி ஒரு புத்தகம். இவரை, அவ்வளவாக யாரும் எழுதவில்லை. மலர் அம்பு வைத்திருப்பார் ; சிவபெருமான் எரித்து விட்டார் என்பதை தவிர, புராணங்களில் காமதேவன் பற்றி அதிகமாய் காணோம்! எப்படி இருப்பார்; அவரது நோக்கம் என்ன? தோற்றம் எப்படி? என்று ஆராய்ச்சி செய்து, தகவல் திரட்டி, என் கற்பனை வளத்தையும் சேர்த்து எழுதியுள்ளேன். விரைவில் வெளியாகும். இந்த புத்தகமும் பேசப்படும். முப்பது வயதிற்குள், இரண்டு புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஈடேறப்போகிறது என்பதில் மகிழ்ச்சி.

தமிழ்பெண் நீங்கள்... தமிழில் ஏன் எழுதவில்லை?

கான்வென்டில் படித்தேன். எனவே தமிழில் புத்தகம் எழுதும் அளவிற்கு திறமை இல்லை. என் குழந்தைகளுக்கு தமிழை அதிகமாக சொல்லித்தர விரும்புகிறேன். என் புத்தகத்தை, நல்ல தமிழில் யாராவது மொழிபெயர்க்க முயற்சித்தால் உதவத் தயார். என் அம்மா, கல்கியின் தீவிர ரசிகை. கல்கி போல எழுத வேண்டும் என்பதே என் கனவு. அடுத்து பாண்டியர்கள் வரலாற்றை படித்து, நாவல் எழுத வேண்டும்.

இளைஞர்களின் ஆர்வம்:

புராண, வரலாற்று கதாபாத்திர நாவல்களுக்கு இன்றைய இளைஞர்களிடம் எப்படி ஆர்வம் உள்ளது?

இளைஞர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வம் குறையவில்லை. இ-புக்ஸ் மூலமும் படிக்கிறார்கள். மகாபாரத கருத்துக்கள் இன்றைய உலகிற்கு நன்கு பொருந்தும். அதனை இளைஞர்கள் விரும்பும் நடையில் தரும் போது ஆர்வமுடன் படிப்பார்கள்.
வாழ்த்த: anujamouli@gmail.com
நன்றி; தினமலர்.