1 January 2012

ஒடிஸா - சிலிகா ஏரியில் ஒருநாள்


சிலிகா ஏரி. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும். 

கடல் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் நன்னீரோடு உப்பு நீரும் கலந்த கலவையிலான நீராகும். அதாவது கடல் நீரைப்போன்று அதிக உப்புமிருக்காது. நல்ல நீராகவும் இருக்காது. 


ஒடிஸா மாநிலத்தில் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இரண்டாவது மிகப்பெரிய ஏரி நமது சென்னைக்கு அருகே 60 கி.மீ. தொலைவில் உள்ள கடந்த வாரத்தில் ஒரு படகு விபத்தில் 22 பேர்களின் உயிரை பலி வாங்கிய பழவேற்காடு ஏரி.

ஒடிஸாவின் கன்ஜாம், குர்தா, பூரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த இந்த ஏரி பரவியிருக்கிறது. கிட்டத்தட்ட 1165 லிருந்து 906 ச.கி.மீ. பரப்பிற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு! (பழவேற்கடு ஏரியும் இப்படித்தான் ஆந்திராவில் பாதியும், தமிழ்நாட்டில் பாதியுமாக பரவியுள்ளது.)


சென்னை-கொல்கோட்டா தேசிய நெடுஞ்சாலை எண்.5 மற்றும் சென்னை-கொல்கோட்டா இரயில்வே இருப்புப் பாதையும் இந்த சிலிகா ஏரியைத் தொட்டுத்தான் செல்கின்றன. பாலுகான், சிலிகா, ரம்ப்பா என்ற மூன்று நிலையங்கள் சிலிகா ஏரி எல்லைக்குள் வருகின்றன. பேருந்துப் போக்குவரத்து அதிகம் இல்லாத ஒடிஸாவில் எல்லோரும் நம்பியிருப்பது ரயில் பயணங்களைத்தான். பாலுகான் என்ற ரயில் நிலையத்தில் எல்லா சில முக்கியமான ரயில்களைத் தவிர்த்து மற்ற எல்லா விரைவு ரயில்களுமே நின்று செல்கின்றன.


நீண்ட நாட்களாகவே அங்கு போக எண்ணி கடந்த மாதம்தான் அதற்கான நேரம் வாய்த்தது. பாலுகான் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரம்தான் சிலிகா ஏரி. ஆட்டோக்களும், ரிக்ஸாக்களும் கிடைக்கின்றன, என்றாலும் நானும் நண்பர்களும் நடந்தேதான் போனோம். மிகப் பழமையான ஊர் என்பது அங்குள்ள வீடுகளைப் பார்க்கும் போதே தெரிந்தது.

படகுத்துறையில் தனியார்களும், அரசும் படகுகளை இயக்கி வருகிறது. வெகு தூரத்தில் சின்னச்சின்ன தீவுகள் தெரிகிறது. அதில் ஒன்றுதான் காளிஜாய். அங்கு ஒரு சின்ன கோவில் மட்டுமே இருக்கிறது. அதையொட்டி சில கடைகளும் இருக்கின்றன. ஆனால் மீதி உள்ள காலி இடங்கள் எந்த பராமரிப்பும் இன்றி முட்புதர்களாகவே காட்சியளிக்கிறது.


காளிஜாய் கோயில் மட்டுமல்ல இங்குள்ள எல்லா கோயில்களிலும், சிங்கத்தின் சிலைகளோ அல்லது குதிரைச் சிலைகளோ கண்டிப்பாக இருக்கிறது.நம்மூர்களில் அய்யனார் கோவில் முன்பாக இருக்கும் குதிரைச் சிலைகள் போல!


பாலுகானிலிருந்து இந்த காளிஜாய் கிட்டத்தட்ட 16 கி.மீ. தூரம் இருக்கிறது. படகுப் பயணமே முக்கால் மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நண்பர்களோடோ அல்லது உறவினர்களோடோ செல்லாவிட்டால் பயணம் போரடித்துவிடும். அங்கு ஒரு அரை மணிநேரம் செலவிட்டபின் அங்கிருந்து 26 கி.மீ. தூரமுள்ள நளபான் தீவுக்குப் பயணமானோம்.


நளபான் தீவு. இது பறவைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது. காஸ்பியன் பெருங்கடல், ஆரல் கடல், ரஷ்யா, கிர்கிஸ்தான், மங்கோலியா, மத்திய கிழக்காசிய நாடுகள் போன்ற நாடுகளிலிருந்தும், இமயமலை, காஷ்மீரின் லே, லடாக் போன்ற பகுதிகளிலிருந்தும் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. ஆனால் நாங்கள் போன நவம்பர் மாதத்தில் ஒரு பறவையும் காணக் கிடைக்கவில்லை. வழியில் டால்ஃபின் மீன்கள் துள்ளிவிளையாடுவதைப் பார்த்ததுதான் ஒரே ஆறுதல். திரும்பவும் 20 கி.மீ. பயணம் செய்துதான் தொடங்கிய இடத்துக்கு வந்தோம்.

சில அரிய வகை மீன் இனங்கள், நீர்வாழ் உயிரினங்கள், நண்டு மற்றும் இரால் வகைகளும் இங்கே காணப்படுகின்றன. இதற்காகவே இங்கு வரலைன்னாலும் பக்கத்திலிருக்கிற சரித்திரப் புகழ்பெற்ற பரி ஜகன்நாதர் ஆலயம், கொனார்க் போன்றவற்றையும் பார்க்க திட்டமிடலாம். மற்ற விபரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்.

அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.No comments:

Post a Comment