27 January 2012

ஆதிவாசி மக்களோடு வித்தியாசமான குடியரசு தின கொண்டாட்டம்


ஒடிஸாவின் ராயகடா மாவட்டத்தின் காசிபூர் தாலுக்காவில் ஒருசிறிய பகுதி டிக்கிரி. அலுவலக விஷயமாக இங்கு வந்து சில நாட்களாக தங்கியிருக்கிறேன். மிகச்சிறிய இரயில் நிலையம். எந்தப்பக்கம் திரும்பினாலும் மலை, மலைதான். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி நிலப்பகுதிதானே! அதனால் குளிர் கொஞ்சம் கூடவே வாட்டுகிறது. இன்னும் குளிர் தன் பணியை விட்டபாடில்லை. அருமையான தட்பவெப்பநிலை.


எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு அப்போதுதான் கட்டப்பட்ட வீடு. பணிகள் இன்னும் முழுமையாக முடிந்தபாடில்லை. அறுபதடி ஆழத்தில் ஒரு கிணறு. அதிலிருந்துதான் தண்ணீர் இறைத்துப் பயன்படுத்த வேண்டும். இங்கே மின் விநியோக முறையை நினைத்தாலே வயிறு எரியும். ஆனால் மின்விளக்குதான் எரியாது.

இங்குள்ளவர்கள் வேடிக்கையாக 'பவரும் டவரும்' இங்கே கியாரண்டி இல்லை என்று சொல்கிறார்கள். ஏர்டெல் தவிர்த்து வேறு எந்த நெட்வொர்க்கும் சரியாக செயல்படுவதில்லை. எப்போதாவது பி.எஸ்.என்.எல். அல்லது ரிலயன்ஸ். மின்சாரம் சொல்லவே வேண்டாம். எப்போது போகும் எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதுவும் மிகக் குறைந்த LOW VOLTAGE  மின்சாரம். இந்த வெளிச்சத்தில் புத்தகம் கூட படிக்க முடியாது.


மின்சாரம் வரும். அடுத்த பத்து நிமிஷத்துலேயே போகும். பன்னிரண்டு மணிநேரத்துக்கு வராது. இங்குள்ள மக்களுக்கோ இது பழகிப்போன ஒன்று. இத்தனைக்கும் ஆதித்ய பிர்லாவின் ‘உத்கல் அலுமினா(UTKAL ALUMINA) இங்குதான் உள்ளது. திரும்பிய இடமெல்லாம் மலைத்தொடர்களே... அதுவும் அலுமினிய உற்பத்திக்கு முக்கியமான தாதுப்பொருளான பாக்ஸைட் மலைத்தொடர்களாக... என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பனி (NALCO) கூட இங்கு பக்கத்தில்தான் இருக்கிறது.

வேறு ஒரு நிறுவனம் ஆயிரக்கனக்கான ஏக்கரில் நிலங்களையும், மலைகளையும் வளைத்துப்போட்டு சுற்றுச்சுவர் எழுப்பி வருகிறது. சுற்றுச்சுவர் என்பது நிலப்பகுதியில் மட்டுமில்லை. மிக உயரமான மலைமீதும் சுற்றுச்சுவர் எழுப்பபட்டிருக்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் அதன் தோற்றம் சீனப்பெருஞ்சுவரை ஞாபகப்படுத்தாமல் போகாது.குடியரசு தினத்தில் டிக்கரியைச் சுற்றியுள்ள சுமார் ஐந்தாறு கிராமங்களுக்கு கொடியேற்றத்தில் பங்கு கொள்ள கிளம்பினோம். எல்லமே ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்கள். விடியற்காலை 5 மணிக்கு நான் குளிக்கும்போதே தெருவில் ஊர்வலமாய் பிள்ளைகள் ‘ரகுபதி ராகவ ராஜாராம் பாடிக்கொண்டும், ‘பாரத் மாதாகி ஜே என்று கோஷமிட்டுக்கொண்டு போனதும் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. தங்கள் பாடசாலை மட்டுமல்லாது அருகிலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் அவர்கள் சென்று குடியரசு விழாவில் கலந்து கொண்டதும் வியப்பையே தந்தது.வழக்கமாய் எங்கள் நிறுவனத்தில் மட்டுமே கொடியேற்றிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுகிற நான் இந்த வருடத்தில் ஒரே நிகழ்ச்சிக்காக தொடர்ந்து ஐந்தாறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மறக்க முடியாத நிகழ்வாகும். மற்றவற்றை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

No comments:

Post a Comment