சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, சுரங்கப் பாதை தோண்டும் பணியை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.. சுரங்கப் பாதை தோண்ட வசதியாக, எழும்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில், ஆயத்தப் பணிகள் முடிந்து விட்டன.
இதற்காக, ரஷ்யா, சீனாவிலிருந்து, சுரங்கம் தோண்டும் 10 இயந்திரங்கள் வந்துவிட்டன. மொத்தம், 45 கி.மீ., தூரம் அமையும் இத்திட்டத்தில், 24 கி.மீ., சுரங்கப் பாதை வழியே, மெட்ரோ ரயில் ஓட உள்ளது. இதற்காக, சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம், சுரங்கப் பாதைப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டை பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து முடிந்துவிட்டன. எழும்பூர் ரயில் நிலையத்தின் இரண்டாவது வாயில் அருகே உள்ள டூவீலர் பார்க்கிங் பகுதி தடுக்கப்பட்டு, சுரங்க ரயில் நிலையம் அமைக்க, மண் பரிசோதனை நடந்தது.இயந்திரத்தை பூமிக்குள் கொண்டு செல்ல வசதியாக, 17 மீ., நீளத்திலும், 6.2 மீட்டர் அகலத்திலும், பிரமாண்ட பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. பள்ளம் தோண்டும் பகுதியில், மண் சரிவு ஏற்படுவதைத் தடுக்க, உடனுக்குடன், 9 மீட்டர் உயரத்திற்கு, கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட உள்ளன.
வண்ணாரப்பேட்டையில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளம் தோண்டி, தடுப்புச்சுவர் அமைத்த பின், சுரங்கம் தோண்டும் நவீன இயந்திரம் மூலம், சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுரங்க ரயில் நிலையம் அமைய உள்ள வண்ணாரப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில், மண் பரிசோதனைப் பணிகள் முடிந்து, சமப்படுத்தும் பணிகள் நடந்துள்ளன. தொடர்ந்து, சுரங்கப் பாதை தோண்டும் இயந்திரத்தை, பூமிக்குள் இறக்க வசதியாக, பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. எந்த இடத்தில் பணிகள் முடித்துத் தயார் நிலையில் உள்ளதோ, அந்தப் பகுதியில் இயந்திரம் கீழே இறக்கப்பட்டு, சுரங்கப் பாதை தோண்டப்படும்.
எழும்பூரில் தான் முதல் சுரங்க ரயில் நிலையம் அமைகிறது என்று சொல்ல முடியாது. ஐந்து தொகுப்புகளாக டெண்டர் விடப்பட்டு பணி நடக்கிறது. எங்கு பணிகள் முதலில் முடிகிறதோ, அந்த இடத்தில் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் துவங்கும். இரண்டு வழித்தடங்களிலும், 20 சுரங்க ரயில் நிலையங்கள் அமைகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
இயந்திரத்தின் செயல்பாடு எப்படி?
*சுரங்கப் பாதை, சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டர் கீழே தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக, பாதை அமைகிறது.
*சுரங்கப் பாதை தோண்டும் இயந்திரத்தில் உள்ள சுழலும் தண்டுப் பகுதி, மண், பாறை போன்றவற்றை துளைத்து எடுக்கும் வகையில், அதற்கேற்ப மாற்றியமைக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*தோண்டிய மண், பாறை போன்றவை, கன்வேயர் பெல்ட் மூலமாக, வெளியேற்றப்பட்டு விடும். 6.2 மீட்டர் விட்டத்தில் பள்ளம் தோண்டத் தோண்ட, அதையொட்டி, 0.4 மீட்டர் தடிமனில், கான்கிரீட் லேயர்கள் உடனுக்குடன் போடும் வசதி உள்ளது. இதனால், மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
*கப்பல் மூலம், சென்னை துறைமுகம் வந்து சேரும், சுரங்கம் தோண்டும் இயந்திரம், சாலை வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, கிரேன்கள் உதவியுடன், தயார் நிலையில் உள்ள பள்ளத்தில் இறக்கப்பட்டு, சுரங்கப் பாதை தோண்டப்பட உள்ளது.
தினசரி 1.5 மீட்டர் தான் தோண்ட முடியுமா?
மெட்ரோ ரயில் சுரங்கப் பணிக்காக, நவீன இயந்திரங்கள் கையாளப்பட உள்ளன. இதன் மூலம், நாளொன்றுக்கு 1.5 மீட்டர் தான் தோண்ட முடியும் என்பது சரியல்ல. அப்படியானால், திட்டப்பணிகளை, குறித்த காலத்தில் முடிக்க முடியாது. சுரங்கப் பாதை தோண்டும் பகுதியில், மண்ணின் தன்மைக்கேற்ப, பணியின் வேகம் மாறுபடும். பாறை நிறைந்த பகுதிகளில், பணிகள் வேகமாக நடக்கும். மண்ணின் தன்மை லேசாக உள்ள இடங்களில், சரிவு ஏற்படும் என்பதால், பணிகள் மெதுவாக நடக்கும்.
பாதிப்பு இருக்காது...!
சுரங்கப் பாதை தோண்டும் பணி, தரை மட்டத்திலிருந்து 17 மீட்டர் ஆழத்தில் நடைபெறுகிறது. 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அப்பாதையிலிருந்து, தரைப்பகுதி 10 அடி உயரத்திற்கு மேல் தான் இருக்கும். இதனால், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்களுக்கு, எந்தப் பாதிப்பும் வர வாய்ப்பில்லை.
இதுவரை நடந்துள்ள பணிகள்
சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி, ஐந்து தொகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது. தொகுப்பு ஒன்றில், 95 சதவீத மண் பரிசோதனை முடிந்துள்ளது. நிலம் எடுக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை பஸ் நிலையப் பகுதியில், பஸ் நிலையப் பணிகள் முடிந்துள்ளன.
மே தின பூங்காவில், 12, வண்ணாரப்பேட்டையில் ஆறு "வால் பேனல்'களும் தயார் நிலையில் உள்ளன. எழும்பூரில், டிரையல் பேனல்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
அரசினர் தோட்டத்தில், கழிவுநீர் கால்வாய் மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரம் விளக்கு பகுதியில், சுரங்கப் பாதைக்கான பள்ளம் தோண்டும் ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
சைதாபேட்டையில், கழிவுநீர் கால்வாய் மாற்றியமைக்கும் பணி, புதிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. சுரங்கப் பாதைப் பணிக்காக, பள்ளம் தோண்டும் ஆயத்தப் பணிகள், சேமியர்ஸ் சாலை, தேனாம்பேட்டை, ஜெமினி பகுதிகளில் துவக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு நான்கு, ஐந்திலும் மண் பரிசோதனை முடிந்துள்ளது. நிலையம் அமையும் இடங்களில், கட்டமைப்புகள் மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது.
திட்டத்தின் விவரம்
சென்னை மாநகரில், பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் திட்டம் அமைகிறது. முதல் வழித்தடம், வண்ணாரப்பேட்டை முதல், சென்னை ஏர்போர்ட் வரை, 23 கி.மீ., தூரமும், இரண்டாவது வழித்தடம் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை, 22 கி.மீ., தூரமும் என, மொத்தம் 45 கி.மீ., வரை அமைகிறது. 2015 ம் ஆண்டிற்குள், பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்க ரயில் நிலையம் அமையும் இடங்கள்
முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஐகோர்ட், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம்,எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை மற்றும் சைதாபேட்டை என, 11 இடங்களில், சுரங்க ரயில் நிலையம் அமைகிறது.
இரண்டாவது வழித்தடத்தில், சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கே.எம்.சி., பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என, ஒன்பது ரயில் நிலையங்கள் உட்பட, மொத்தம் 20 சுரங்க ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
நல்ல அலசல்..தகவல்களை சிறப்பாக தொகுத்து தந்துள்ளீர்கள்..நன்றி.
ReplyDeleteசைக்கோ திரை விமர்சனம்
வருகைக்கு நன்றி குமரன் அவர்களே! தங்களுடைய கருத்திற்கும் கூட என் நன்றி!
ReplyDelete