30 October 2011

எரிமலையின் திரிகளில் தீ வைத்து...


அவள் கேட்டாள்,
பனித்தாமரையாய் உங்கள் கவிதை முகம்
ஏன் கருகியிருக்கிறது?
உங்கள் கண்களில் பார்வை இறந்து கிடப்பது ஏன்?
இப்போதெல்லாம் சிரிப்பதை நிறுத்திவிட்டீர்கள்,
என்ன நேர்ந்தது உங்களுக்கு?
ஏன் மௌனத்தை மட்டுமே
மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

நான் பேசவில்லை,
ஒரே ஒரு புன்னகை மட்டும்
என் உதட்டின் ஒரு கோடியில் பிறந்து
மறு கோடியில் இறந்தது.
உனக்கென்ன!


எரிமலையின் திரிகளில் தீ வைத்துவிட்டுப்
பொழுது போகவேண்டுமென்று
பூப்பரித்துக் கொண்டிருக்கிறாய்!
எனக்குத்தானே தெரியும்,
இதயம் வெடித்து எங்கெங்கே சிதறுகிறதென்று!

கண்ணீரில் வாழ்க்கை செலவழிக்கப்படுகிறது
காதலில்தான் சம்பாதிக்கப் படுகிறது.
விளக்கணைந்தால் மட்டும்தான் இருள் வருமா?
அவள் விலகிச் சென்றாலும் வருகிறதே!


இந்தக் கவிஞர்களெல்லாம்
காதலிகளைவிடக் காதலை அதிகமாய் நேசிக்கிறவர்கள்

இந்தக் கவிதைகள் ரசிப்பதற்குத்தான்; 
வசிப்பதற்கில்லை.

இன்றைய பொன்மொழி
"பொறுமையாக இல்லாதவனுடைய வாழ்க்கைதான் முதலில் சோதனைக்குள்ளாகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புங்கள், எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறுகிறீர்கள். கிருமியிலேயே செத்துப் போகிற உயிர்களும் உண்டு. இதயத்தில் துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்து வாழ்க்கையை ஓட்டியவர்களும் உண்டு".


No comments:

Post a Comment