9 March 2010

நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது எப்படி?


ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய இரண்டு முக்கியமான தருணங்கள் இருக்கின்றன. முதலாவது திருமணம்... அதற்கும் முன்னதாக இருப்பது இன்டர்வியூவில் கலந்து கொள்வது!




உண்மைதான்... திருமணத்துக்கு நிகரான முக்கியத்துவம் கொண்டதுதான் வேலைக்காக நாம் செல்லும் இன்டர்வியூ. இல்வாழ்க்கையைப் போலவே, இதிலும் பல சூட்சுமங்கள் இருக்கின்றன. என்னதான் படித்திருந்தாலும், தங்க மெடலே வாங்கியிருந்தாலும் இன்டர்வியூவில் தனது திறமையைக் காட்டாவிட்டால் பயனில்லாமல் போய்விடும்.

‘ஒரு நேர்முகத்தேர்வை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமலே இருப்பதும் தேர்வாகாததற்கு முக்கிய காரணம்’ என்கிறார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி. இன்டர்வியூவில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது எப்படி? என்பது பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்துவதில் பத்தாண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்.

ஒரு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது பற்றி அவர் சொன்னவற்றிலிருந்து.....

‘தெளிவாகப் பேசுவதுதான் இதில் முக்கியமான விஷயம். கம்யூனிகேஷன் திறனைச் சோதிப்பதுதான் அதில் பிரதானமாக இருக்கிறது. எந்த இன்டர்வியூவாக இருந்தாலும் முதல் கேள்வி, உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்’ என்பதாகத்தான் இருக்கும். அதற்குச் சொல்லும் பதிலில் இருந்தே ஒருவரைப்பற்றி எளிதாகக் கணித்து விடலாம். அதோடு அந்த முதல் கேள்விக்குச் சொல்லப்படும் பதிலில் இருந்துதான் அடுத்த கேள்விகள் பெரும்பாலும் எழும். அதனால் உங்களைப் பற்றிச் சொல்லும்போது முழுக்கவனத்துடன் பதில் சொல்லுங்கள்.

சொந்த ஊர், படித்த விபரங்கள் அதிகமாகச் சொல்லி, குடும்பம் பற்றிய தகவல்களைக் குறைத்து, செய்திருக்கும் பிராஜக்ட்டுகள் பற்றியும், தனக்கு ஆர்வம் உள்ள ஏரியாக்கள் பற்றியும் தெளிவுபடுத்தி கோர்வையாகச் சொல்லவேண்டும்.

இதில் தெரிந்த சப்ஜக்டை மட்டுமே குறிப்பிட வேண்டும். தெரிந்த்தைப்போல காட்டிக்கொண்டு பதில் சொன்னால் மாட்டிக் கொள்ள நேரிடும். அடுத்து வேலை கொடுக்கும் நிறுவனத்தின் இணைய தளத்தில் ஒருமுறை பார்வையை ஓட்டி, அவர்களுக்கு எங்கெல்லாம் கிளைகள் உள்ளன, என்னென்ன தயாரிக்கிறார்கள் என்பன போன்ற தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது நம்மீது இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

கூடுமானவரையில் இன்டர்வியூவிற்கு உங்களை உயர்வாக்காட்டும் வகையில் உடையணிந்து செல்ல வேண்டும். பூப்போட்ட சட்டை, அடிக்கிற வண்ணங்களில் சட்டை, பேன்ட் என்று செல்லாமல் மிதமான வண்ணங்களில் மெல்லிய கோடுகள் கொண்ட சட்டை, உறுத்தாத வண்ணங்களில் பேன்ட் அணிந்து செல்லலாம். டை கட்டுவதில் கூட சில வழிமுறைகள் உள்ளன. அரைக்கை சட்டை அணிந்து சென்றால், உங்களுடைய டை பட்டையாகவும், அகலமாகவும் இருக்கவேண்டும். அதுவே முழுக்கை சட்டை என்றால், டை அகலக் குறைவாகவும், நீளமாகவும் அணிந்து செல்ல வேண்டும்.

பெண்களும் பளபளா வண்ணங்களில் உடைகளை அணியாமல், மென்மையான நிறங்களில் சுடிதாரோ, புடவையோ அணிந்து செல்லலாம். மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்து செல்வது நல்லதல்ல.

எந்த இன்டர்வியூவாக இருந்தாலும் ஆடை அணிந்திருக்கும் விதம்தான் பாதி வெற்றியைத் தீர்மானிக்கிறது. நடந்துகொள்ளும் விதம் அடுத்ததாகவும், சொல்லும் பதில் கடைசியாகவும்தான் இடம் பெறுகிறது.

இன்டர்வியூ நடக்கும் அறையில் நுழையும்போது அனுமதி பெற்று நுழைவது, அனுமதி பெற்ற பிறகு நாற்காலியில் சரியாக அமர்வது, ஏதாவது குறிப்புகள் சொன்னால் எழுதிக்கொள்வதற்கு பேப்பரும் பேனாவும் கொண்டு செல்வது, சிரித்த முகத்துடன் பதில் சொல்வது என்று பழகிப்போன விஷயங்கள்தான் என்றாலும் சலிப்பிலாமல் செய்ய வேண்டும்.

எதைப் பேசும்போதும் உதாரணங்களோடு விளக்கமாகப் பேச வேண்டும். வித்தியாசமாக சிந்திப்பவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்து பதில் சொல்ல வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வேலை நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு இன்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் என்கிறார் ஜெயபிரகாஷ் காந்தி.

நன்றி; நாணயம் விகடன்.


படித்ததில் பிடித்தவை !
லட்சியம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
அடையக்கூடியதாக!

வாழ்க்கை என்பது…?
கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள் சேர்க்கும் போராட்டம்.

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete