17 November 2011

நூலகம் மூடல்! நம் மனப்போக்கு எப்படி?


நம்புங்கள்!!!............அதிமுக ஆட்சியின் முடிவிற்கு எதிரான ஒரு கட்டுரை தினமலரில்..........நம்ப முடியவில்லை.


காவல் நிலையம் இருப்பது, அப்பகுதியில் குற்றவாளிகள் இருப்பதற்கு அடையாளம். மருத்துவமனைகள் இருப்பது, அப்பகுதியில் நோயாளிகள் இருப்பதன் அடையாளம். நூலகங்கள் இருப்பது, அவ்விடம் புத்தக ஆர்வலர்கள் இருப்பதன் அடையாளம். இவற்றுள் ஆரோக்கியமான அடையாளம், நூலகங்கள்தான்.

ஒரு பெரும் நூலகத்தை இடம் மாற்றி, அப்பெரு நூலகம் இருந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வருவது சரியான செயலா? சில மாதங்களுக்கு முன், செம்மொழிக்காக அமைக்கப்பட்ட பழைய சட்டசபை நூலகம் மூடப்பெற்று, இடம் மாற்றப்பட்டது.கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர் படை எடுத்தபோது, தீப்ஸ் என்ற நாட்டை வென்றார். அப்படை எடுப்பு நடக்கும் போது, அந்நாட்டில் கிரேக்க கவிஞர் பிண்டார் என்பவருடைய இல்லம் இருந்தது. கிரேக்க வீரர்கள், நகரையே நாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அது கவிஞரது இல்லம் என்று, மகா அலெக்சாண்டரிடம் சொன்னவுடன், "அந்த அறிவாளியின் இல்லத்தைத் தீண்டாதீர்கள்' எனத் தடுத்து ஆணை போட்டார். 

தமிழக வரலாற்றில், பகை அரசர்களால் சோழ நாட்டின் ஒரு பகுதி வெல்லப்பட்டபோது, அவ்வூரில் இருந்த ஓர் இல்லம், உருத்திரங்கண்ணன் என்ற புலவனுடையது என்று சுட்டிக்காட்டப்பட்டது. "அப்புலவனின் இல்லத்தை ஒன்றும் செய்து விடாதீர்கள்' என்று அரசன் ஆணையிட்டான்.

பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் நம் மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய கோவில்களில், நூலகம் வைத்துப் பராமரிக்கப்பட்டது. அந்நூலகத்தில் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட நம்முடைய இதிகாசங்களும், காப்பியங்களும், தேவார, திருவாசகங்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும், ஓலைச் சுவடிகளில் கைவலிக்க எழுத்தாணியால் எழுதப்பட்டு, பத்திரப் படுத்தப்பட்டிருந்தன. 

அக்காலத்து அரசர்களும், செல்வந்தர்களும், பழைய ஓலைச்சுவடிகளை, புதிய ஓலைச்சுவடிகளில் எழுதி, பத்திரப்படுத்துவதற்காக நன்கொடைகள் வழங்கினர்.அந்நன்கொடைகள், "சாத்திர தானம்' என்று அழைக்கப்பட்டன. ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்ட இடம், சரஸ்வதி பண்டாரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

முதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவியின் மகன் என, இருவருக்கும் இடையே நடந்த சகோதரச் சண்டையால், தமிழகம், டில்லி இஸ்லாமியருக்குச் சரணாக்கப்பட்டு, அதன் விளைவாக, மாலிக்காபூர் என்ற இஸ்லாமியத் தளபதி, தமிழகத்தின் மேல், 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தான். தமிழகத்தையே நிர்மூலப்படுத்தினான். 

கண்ணில் பட்ட கோவில்களை எல்லாம், அடித்து நொறுக்கினான்.ராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் முதலான இடங்களில் இருந்த பெரும் கோவில்கள், மாலிக்காபூர் எனும் இஸ்லாமியப் படைத்தளபதியால் மண் மேடாக்கப்பட்டன. ஆனால், அவன் செய்த ஒரு நல்ல காரியம், "கோவில்களில் பத்திரப்படுத்தப்பட்ட சரஸ்வதி பண்டாரத்திற்கு, எந்தவித ஊறும் செய்யக் கூடாது' என ஆணையிட்டான்.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாகக் கருதப்படும் ஒரு பெரும் நூலகம் மூடப்பட்டு மருத்துவமனையாக்கப்படுவது, வரவேற்கத்தக்கதா என அனைவரும் சிந்திக்க வேண்டும். அவ்வாணையை, மறுபரிசீலனை செய்வது தான் அறிவு தர்மம்.இந்திய நூலகத்தின் வரலாறு, மிகத் தொன்மை வாய்ந்தது. புகழ் பெற்ற அரசர் அக்பர் காலத்தில், அவராலேயே ஒரு நூலகம் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. நாளந்தா பல்கலைக் கழகத்தில் அழகான நூலகம் நிர்வகிக்கப்பட்டது. 

தர்மபாலன் பிறந்த காஞ்சிபுரத்தில், புத்த சமயம் சார்ந்த நூலகம் இருந்தது. தமிழை வளர்ப்பதில் முன்னணியில் இருந்த பாண்டியர், முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து, நூல் அரங்கேற்றத்தை முறைப்படுத்தி இருந்தனர்.தஞ்சாவூரை மகாராஷ்டிர சரபோஜி மன்னர்கள் ஆண்டபோது, உலகிலேயே புகழ் பெற்ற பழமை வாழ்ந்த சமஸ்கிருத ஓலைச் சுவடிகளையும், தமிழ் ஓலைச் சுவடிகளையும் பெற்று, பத்திரப்படுத்தி வைப்பதற்காகவே சரஸ்வதி மஹால் நூலகம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தில், 1925க்குப் பிறகு நூலக உணர்வும், எண்ணங்களும் மிகுதியாக வெளிப்படத் தொடங்கின. 1928 ஜனவரி, 30ல், கிருஷ்ணசாமி அய்யர் என்பவரின் தலைமையில், சென்னை மாகாணத்தில், நூலக இயக்கத்தைப் பரப்ப, சென்னைப் புத்தகாலய சங்கம் அமைக்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர், அறிஞர் எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆவார். இச்சங்கம், தன் சீரிய செயல்பாட்டால், மக்களுக்கு பல நூலக நன்மைகளைச் செய்தது. 

உள்ளாட்சிகள், 1948ல், சொத்து வரி மற்றும் வீட்டு வரியின் மீது, ஒரு ரூபாய்க்கு, 3 காசுகள் நூலக வரி பெற வழி வகுத்தது. பின், 1972ல் அது, 5 காசாக உயர்த்தப்பட்டது. 1993 முதல் அது, 10 காசுகளாக உயர்ந்தது. இதன் வழி, தமிழ்நாடு பொது நூலகத் துறைக்கு, ஒவ்வொரு ஆண்டும் கோடி, கோடியாக வருவாய் வருகிறது. இப்பணம் முற்றுமாக, நூல்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. மிகக் குறைந்த சதவீதத் தொகையே, நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. 

எஞ்சியத் தொகை, நூலக ஊழியர்களுக்காகவும், நூலகக் கட்டட வாடகைக்காகவும், செலவழிக்கப்படுகிறது.இந்நிலையில் தான், நூலகத்திற்கு என, சொந்தமாக ஒரு கட்டடம், 172 கோடியில் கட்டப்பட்டது. தற்போது, இதுவும் பறிபோகிறது.

இந்தியாவில் நூலகத் துறையில் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகப் போராசிரியராகவும் இருந்த, எஸ்.ஆர்.ரங்கநாதன், "கோலன் பகுக்கும் முறை' என, நூல் அடுக்கு முறையை முதன் முதல் வகுத்துக் காட்டினார். தமிழகத்தில், நூலகங்கள், வெள்ளைக்கார அரசாட்சியிலேயே தொடங்கி, சுதந்திரம் பெற்ற பின், ஒரு பேரியக்கமாக வளர்ந்தது. தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயில, வாய்ப்பாக பொது நூலகங்கள் அமைக்கப்பட்டன. 

இந்தியாவில் புத்தகங்களை வெளியிடுவதிலும், ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதிலும் கேரளாவும், மேற்கு வங்கமும் முன்னிடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் புத்தகம் வாங்கும் பழக்கம், போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. வாசிக்கும் பழக்கமும் போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. இவை இரண்டையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் அரசுக்கும், சமுதாயத்திற்கும் தலையாயக் கடமை. 

அதற்கு ஒரு பெரும் வழி, பொது நூலகங்களை விரிவுபடுத்துவது, வசதிப்படுத்துவது. அதற்குச் சரியான எடுத்துக்காட்டு, சென்னையில் புகழ்பெற்ற அண்ணாசாலையில் நாம், நம் மக்களின் மனப்போக்குக்கு தக, திரைப்பட அரங்கைக் கட்டினோம். அதை, "ஏசி' ஆக்கினோம். அதற்கு நேர் எதிரில் அமெரிக்க தூதரகம் ஒரு நூலகத்தைக் கட்டியது. அதை முழுதும், "ஏசி' ஆக்கியது. நம் மனப்போக்குக்கு இதைவிட வேறு சான்று காட்டத் தேவையில்லை.

க.ப. அறவாணன்

புத்தகம்
உங்கள் வீட்டில் எந்த அறையிலும் புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அழகிற்காக அல்ல. ஆன்மாவுக்காக.6 comments:

 1. சறுக்கிய சறுக்களுக்கு சப்பைக் கட்டு இது. நியாயமாகவும் நடுநிலையாகவும் இருக்கிறார்களாம். இன்னும் எத்தனை வேடம் வேண்டுமானாலும் போடும் இந்த தினமலர்

  ReplyDelete
 2. வருகைக்கும், தங்களின் கருத்துக்கும் நன்றி நிவாஸ் அவர்களே!

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி வான்சூர்!

  ReplyDelete
 4. உண்மைதான்!!!

  நம்ப முடியவில்லை!!!

  தினமலரில் வந்ததா ?

  நுலகம் மாற்றம் குறித்து
  நானும் கவிதை ஒன்று எழுதி
  யுள்ளேன்
  என் வலைவந்து பாருங்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புலவர் சா இராமாநுசம் அவர்களே! உங்கள் வலைத்தளத்திற்கும் வருகை தருகிறேன்!

  ReplyDelete