14 November 2011

மின்வெட்டு - தீர்வுதான் என்ன?



தமிழகத்தில் ஆறு மின் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகளால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதால், மின்வெட்டு நேரம் ஐந்து மணி நேரமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.


தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு தினமும், 10 ஆயிரம் முதல் 11,500 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் வழக்கமாக, 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது, காற்று வீசும் சீசன் குறைந்து, மழை மற்றும் பனிக்காலம் வந்ததால், காற்றாலை மின் உற்பத்தி, "ஜீரோ' நிலைக்கு வந்து விட்டது. 

காற்று வீசும் நிலைமைக்கு ஏற்ப, 10 மெகாவாட், 20 மெகாவாட் என, விருப்பம் போல் காற்றாலைகளில் உற்பத்தியாகிறது.நேற்று முன்தினம் அதிகாலையில், பூஜ்யம் மெகாவாட்டும், நேற்று காலையில், 10 மெகாவாட்டும் காற்றாலை மின்சாரம் உற்பத்தியானது. அனல் மின் நிலையங்கள் மூலம், 2,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.



அதே நேரம், பல மின் நிலையங்களில், பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் கோளாறு காரணமாக ஒரு யூனிட்டும், வருடாந்திர பராமரிப்புக்காக, ஒரு யூனிட்டும் மூடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து, 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

ஊத்தங்கரையிலுள்ள தனியார் எஸ்.டி.சி.எம்.எஸ்., நிலையத்திலும் பணிகள் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து, 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குத்தாலம், பேசின்பிரிட்ஜ், வழுதூர் ஆகிய, காஸ் மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றால் கூடுதலாக மொத்தம், 970 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க, வெளிச்சந்தையிலும், டெண்டர் மூலமும், 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. மீத தட்டுப்பாட்டை சமாளிக்க, கூடுதலாக மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, கடந்த இரு தினங்களாக, சென்னையில் ஒரு மணி நேரமும், மற்ற நகரங்களில் நான்கு மணி நேரமும், கிராமப் பகுதிகளில், ஐந்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதில், வழக்கமான மூன்று மணி நேரம் போக, கூடுதல் நேரத்திற்கு, சுழற்சி முறையில் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்ற கணக்கில், மின்வெட்டு அமலாகிறது.
மேலே உள்ளது இன்றைய செய்தி.

தலையாய பிரச்னையான இதில் எந்த அரசுமே தொலை நோக்குப் பார்வையில் செயல்படவில்லை என்பதே நிதர்சனம். மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மிக எளிதில் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொடுக்கும் இதில் எல்லா அரசுகளுமே கையாலாகாமல்தான் இருக்கின்றன.

ஏழைகளுக்கு இலவச திட்டங்களை அறிவித்து ஓட்டைத்தான் அறுவடை செய்ய நினைக்கிறார்களே தவிர, அவர்களின் இல்லங்களில் இருள்நீக்கும் மின்தட்டுப்பாட்டைப் பற்றி கவலையே கொள்வதில்லை. சென்னை மக்கள் மட்டும் புன்னியம் செய்தவர்களாம். ஏனென்றால் அவர்களுக்கு மட்டும் ஒரே ஒரு மணிநேரம் மின்வெட்டாம். தமிழகத்தின் பிற பகுதிளுக்கு 4 லிருந்து 5 மணி நேரமாம்.

பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என எல்லோருக்குமே இனி பிரச்னைதான். கற்காலத்திற்கே இனி நாம் போக வேண்டியதுதான். அரசு இதைப்பற்றி ஏனோ வாயே திறப்பதில்லை.

22 வருடங்களுக்கு முன்பு (28.02.1989) 'தினமணி'யில் மின் பற்றாக் குறையை முன்வைத்து எழுதப்பட்ட 'கார்முகிலின் ஒளிவிளிம்பு' என்ற தலையங்கத்திற்கு நான் எழுதிய வாசகர் கடிதம் உங்கள் பார்வைக்கு.....


             கார்முகிலின் ஒளிவிளிம்பு


08.02.1989 தினமணியில் ‘கார்முகிலின் ஒளிவிளிம்பு என்ற தலையங்கம் படித்தேன். தற்போது ஏற்பட்டிருக்கும் மின் உற்பத்தியின் கடும் நெருக்கடியினால் முதலில் பாதிக்கப்படுவோர் விவசாயிகள்தாம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பிரச்னையில்லாமல் தங்குதடையின்றி மின் விநியோகம் கிடைத்துவந்தது. பதவியேற்றதும் எதிர்பாராதவிதமாக அவப்பெயருக்கு ஆளாகும் நிலையில் உள்ளது தற்போதய அரசு என்பதை மறுக்கமுடியாது. எண்ணூர் அனல் மின்நிலையத்தினை உடனடியாகச் சீர் செய்யாததின் மெத்தனப் போக்கும், அணுமின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் கோளாறுகளும்தான் இதற்குக் காரணம் என்று பாமரர்கள் நினைக்க வாய்ப்பில்லை.

பயிர்த்தொழிலில் ஈடுபடும் விவசாயி இரவு-பகல் பாராது இனி மின் விநியோகத்திற்குத் தகுந்தவாறு செல்லவேண்டும் என்று கவலையுற்று இருக்கும்போது, டி.வி. அந்தோனி, டி.வி.யில் இராமாயணம், மகாபாரதம் பார்க்கும் நேரங்களில் தடை இருக்காது என்று கூறியிருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

குளு குளு வசதியையும், பகல் சினிமாக் காட்சியையும் நிறுத்தி மின் ஆற்றலை மிச்சப்படுத்தலாம் என்பது அருமையான யோசனை. கல்பாக்கம் அணுமின் உலையின் உற்பத்தித் திறனில் ஏற்படும் இந்தக் கோளாறுகளினால், இனி ஏற்படுத்தப்போகும் அணுமின் உலைகளை அறவே தவிர்த்து, எண்ணெய், நிலவாயு இவற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய அரசு முன்வரவேண்டும். இதை மக்கள் முழு மனதோடு ஆதரிப்பார்கள்.

எம் ஞானசேகரன்.
நாராயணபுரம்.


பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!
உங்களுடைய வாழ்க்கையில் பிரச்னைகளே இல்லாவிட்டாலும் அவற்றை உண்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த ஆலோசனை கொஞ்சம் வேடிக்கையாக இருக்கலாம். எந்த முயற்சியும் செய்யாதவருக்கு பிரச்னைகளே தோன்றுவதில்லை. இதன் பொருள் ‘செயல்படுங்கள்என்பதாகும்.



No comments:

Post a Comment