6 November 2011

உங்களிடம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளதா?

(எச்சரிக்கைப் பதிவு!)
 
தற்போது, தமிழகத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு மற்றும் தனியார் வங்கிகள் என, அனைத்து வங்கிகளுக்கும், ஏ.டி.எம்., வசதி உள்ளது. ஆன்-லைன் வசதி வந்ததும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதியும் வந்துவிட்டது. இது, மோசடியாக பணத்தை திருடும் கும்பலுக்கு, மிகுந்த வசதியாக அமைந்துவிட்டது.

மீண்டும் கைது... : கடந்த, 2009ல், ஸ்கிம்மர் இயந்திரத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் "பங்க்'களில் பணியாற்றுவோர், வாடிக்கையாளர்கள் கார்டு விவரங்களை திருடி, வெளியில் விற்பனை செய்து வந்தனர். இதை கொண்டு, புதிய கார்டு தயாரித்த, மகேஷ், உமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய மூன்று கும்பல் பிடிபட்டது. இதில், உமேஷ், ஒரே மாதத்தில் ஜாமினில் வெளிவந்துள்ளான். அவ்வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும், உமேஷ் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.



மூன்று விதமாக... : கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்களை, ஏ.டி.எம்., மையம், வர்த்தக நிறுவனம், பெட்ரோல் பங்க், கூரியர் மூலம் திருடுகின்றனர். இப்படி திருடப்படும் விவரங்களை, ஸ்கிம்மரில் இருந்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து, என் கோடர் இயந்திரங்களுக்கு மாற்றுகின்றனர். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட காலி கார்டுகளை, என் கோர்டர் இயந்திரத்தில் வைத்து, அதில் பதிவு செய்கின்றனர். இந்த கார்டுகளை, எம்போசர் இயந்திரத்தில் வைத்து, பெயர் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் பதிவு செய்து, புதிய கார்டு தயாரிக்கின்றனர்.

அதிகரிக்கும் புகாரும், போலீஸ் நடவடிக்கையும்... :வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டதை அறிந்து, ஒவ்வொருவராக புகார் கொடுக்க ஆரம்பித்தனர். போலீசார், முதலில், பெட்ரோல் "பங்க்'கள் மூலம் விவரங்களை திருடிய, இலங்கையைச் சேர்ந்த ஜாட்டி உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். மேலும், உமேஷ் உள்ளிட்ட ஐவரையும், விக்னேஷ் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர். இதில், வினோத்குமார் உள்ளிட்ட சிலரை, தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, தினமும், 10க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம், 22 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதில், உலக வங்கி அதிகாரி ஒருவரும் அடக்கம். அவரது வங்கிக் கணக்கில் இருந்து, 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. முன்னதாக, 110 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவினர், எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.

மூன்று கோடி ரூபாய் மோசடி: மோசடி செய்யப்பட்டதாக வாடிக்கையாளர்கள், போலீசில் புகார் அளித்த பின்பே, வங்கிகள் பணத்தை திரும்ப அளிக்கின்றன. இதனால், புகார் கொடுப்பவர்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, மூன்று கோடி ரூபாய் வரை, மோசடிதாரர்கள் எடுத்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

1,800 கார்டு விவரங்கள்; தப்பியது ரூ.100 கோடி! : உமேஷ் கும்பலிடமிருந்து இரண்டு கார்கள், ஐந்து கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்ததில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளின், 1,800 வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் கைப்பற்றப்பட்டன.
இதில், அமெரிக்காவின் பெடரல் உள்ளிட்ட வங்கிகளின், 1,010 வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களும் அடக்கம். மோசடி கும்பல் இதை பயன்படுத்தியிருந்தால், வாடிக்கையாளர்கள் பணம், 100 கோடி ரூபாய் வரை பறிபோயிருக்கும் என, கூறப்படுகிறது.

தூதரகங்கள் மூலம் எச்சரிக்கை தகவல்: வெளிநாடுகளில் இதுபோன்ற கும்பல்கள் அதிகளவில் இருப்பதால், தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் நெட்-ஒர்க், எங்கு வரை செயல்படுகிறது என்பதை, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சிக்கியுள்ள, 1,800 கார்டு விவரங்களை, அந்தந்த நாடுகளின் தூதரகம் மூலம், வங்கிகளுக்கு அனுப்பி, அவர்களை எச்சரிக்கும் முயற்சியில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர்.


ஆளில்லா ஏ.டி.எம்., இயந்திரத்தில் திருட்டு: வங்கி ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் பொருத்திய விவகாரத்தில், கனரா வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்தே, அதிகளவில் விவரங்கள் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் ஒன்றில், ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கொண்டே, உமேஷ் கும்பல் பிடிபட்டது. இதையடுத்து, வங்கிகளிடம், ஏ.டி.எம்., இயந்திரம் உள்ள பகுதியில், பாதுகாப்பை பலப்படுத்த, போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

ஏழு முதல், 10 ஆண்டுகள்: தற்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது, மோசடி, கூட்டுச் சதி, பிறரது கார்டை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியின் வாடிக்கையாளர்கள் புகார் அனைத்தும், ஒரே எப்.ஐ.ஆர்.,ராக பதிவு செய்யப்படுகிறது. குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், ஏழு முதல், 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என, கூறப்படுகிறது.

தொடர் கண்காணிப்பு: இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ஜான் ரோஸ் கூறியதாவது: கிரெடிட், டெபிட் கார்டு மோசடியில் இதுவரை, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்களுக்கு வரும் புகார்கள் தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஏ.டி.எம்., இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை குறித்தும், வங்கிகளின் நடவடிக்கை குறித்தும், பல ஆலோசனைகளை, பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம்.

ஏ.டி.எம்., மையங்களில் காவலாளி இல்லாதது குறித்து, கனரா வங்கிக்கு அறிவுறுத்தியதன் பேரில், இதுவரை 28 மையங்களில், வசதிகளை ஏற்படுத்திவிட்டனர். அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மோசடி தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் பிடிபட்டால், வெளிநாட்டு தொடர்பு குறித்த தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு ஜான் ரோஸ் கூறினார்.

வருகிறது "ஜிட்டர்' தொழில்நுட்பம் : ஏ.டி.எம்., மூலம் கார்டு விவரங்களை திருடும் தொழில்நுட்பம், தமிழகத்தில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் செயல்படுகிறது. இப்பிரச்னையை போக்க, வெளிநாடுகளில் பலவற்றில், "ஜிட்டர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
வங்கி ஏ.டி.எம்.,களில் கார்டு நுழைக்கும் பகுதியில் அடிப்படையில் உள்ள இயந்திரத்துடன், இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய, "சிப்' பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம், ஏ.டி.எம்., இயந்திரங்களில், வேறு கருவிகளை யாராவது பொருத்தினால், அந்த வங்கியின் தலைமையகத்தில், அலாரம் அடிக்கும்; சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாடும் முடங்கிவிடும்.

இந்த தொழில்நுட்பத்தை, தமிழகத்திலும் பயன்படுத்தும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வங்கிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர். வங்கிகள், கூடிய விரைவில் இதை செயல்படுத்தும் என, கூறப்படுகிறது.

கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 1,800 வெளிநாட்டு வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், 100 கோடி ரூபாய் தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தூதரகங்கள் மூலம், அந்தந்த நாட்டு வங்கிகளுக்கு தகவல் அளிக்கும் முயற்சியில், சென்னை போலீஸ் இறங்கியுள்ளது.

தகவல்; தினமலர்

2 comments:

  1. விளிப்புணர்வு மிக்க பதிவு.. அவசியம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்..

    பணி சிறக்கட்டும்...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி CPEDE NEWS.

    ReplyDelete