நீங்கள் திறமைசாலியாக வேண்டுமா? அப்படியானால் முதலில் மற்றவர்களை கவருகின்ற அளவுக்கு உங்களது பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். எப்படி?
முதலில் தேவை புன்சிரிப்பு. இந்த புன்சிரிப்பே மற்றவர்களை உங்களை நோக்கி இழுக்கும். அகங்காரம் நிறைந்தவர்கள் முகத்திலும், கர்வம் நிறைந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு வராது. முகம் இறுகிக் கிடக்கும். அவர்கள் மற்றவர்களிடம் இருந்து விலக்கப்படுவார்கள். சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பவர்களுக்கு எந்தச் சபையிலும் தனி மவுசு இருக்கும்.
ஆரோக்கியம் பெண்களுக்கு மிக அவசியம். ஆரோக்கியமுள்ள பெண் எந்த வயதிலும் அழகாகத் தோன்றுவாள். உங்களிடம் இருக்கும் ‘ப்ளஸ் பாயின்ட்’ என்ன, ‘மைனஸ் பாயின்ட்’ என்ன என்பதை அறியுங்கள். அழகிலும், உங்களிடம் இருக்கும் குறையைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் நிறைய மெருகேற்றுங்கள். அதற்கு தேவைப்பட்டால் ‘ப்யூட்டி பார்லர்’ செல்லலாம்.
திறமைசாலிகளுக்கு குண்டான உடல் இருக்கக்கூடாது. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, உணவுமுறைக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை சுத்தமாக வைத்திருப்பது சிறந்தது.
உங்களுடைய உடை நேர்த்தி, உங்கள் குணாதிசியங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வயதுக்கும், சூழ்நிலைக்கும் தக்கபடி பொருத்தமான உடைகளை அணியுங்கள். சிவந்த உடலைக் கொண்டவர்களுக்கு அடர்த்தியான திற உடைகளும், சுமாரான நிறம் கொண்டவர்களுக்கு இள நிற உடைகளும் பொருத்தமாகும்.
நல்ல உடைகளை அணியும்போது மனதுக்கு 'தன்' உற்சாகம் பிறக்கும். அறுந்த பட்டன்கள், முறிந்த ஊக்குகள் கொண்ட உடைகளை வெளி உபயோகத்துக்குப் பயன்படுத்தக்கூடாது.
புதியவர்களோடு அறிமுகமாகும்போது வெட்கம், நாணத்தை தேவையில்லாமல் வெளிக்காட்டக் கூடாது. அது பலஹீனத்தின் அறிகுறி. பேசும்போது மற்றவர்களை சலிப்படைய வைத்து விடக்கூடாது. மிதமான குரலில் தெளிவான சிந்தனையில் பேசவேண்டும்.
மேலும் அப்படிப் பேசும்போது, தனது கௌரவத்தை விட்டுவிடல் ஆகாது. அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
கோபத்தைக் குறைக்கப் பழகுங்கள். மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள். தன்னிடம் இருக்கும் தவறுகளையும் களையத் தெரிய வேண்டும். எப்போதுமே உங்களை சுய பரிசோதனை செய்யத்தயாராய் இருங்கள்.
எந்த ஒரு செயலையும் அறிவு பூர்வமாக அணுகுங்கள். சின்னப் பிரச்னைகளுக்காக ஆவேசம் கொள்ளாதீர்கள்.
சொல்லிலும், செயலிலும் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்.
உங்களின் விமர்சன புத்தியை ஒதுக்க முன்வாருங்கள். மற்றவர்களிடம் இருக்கும் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, தேவைக்கு ஊக்குவியுங்கள்.
இதெல்லாம் இருந்தால், இருக்கிற துறையில் உங்களால் வேகமாக முன்னேறிவிட முடியும். உங்களிடமும் நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகிவிடும்.