11 April 2011

வருகிறது இன்னொரு தேர்தல்




தமிழா!
முகவரியைப் பெறுவதற்கே முகம் தொலைந்து போனவனே!
கண்ணீரே வாழ்க்கையென்று கண்டுவந்து சொன்னவனே!
நலமா...? உனக்கேது அது...?
போன நாற்றாண்டையே (-) நீ
இப்போதுதானே வாழ்கிறாய்...

இதுவரை வோட்டுப்பெட்டியின் சாவி- உனது
வாழ்வின் வாசலை திறக்கவேயில்லை...

ஒவ்வொரு தேர்தலிலும் – நீ
முகூர்த்த சேலைக்குத்தான் மனு போட்டாய்...
அவர்களோ – உனக்கான
சவத்துணியை நெய்து தந்தார்கள்...!
நீ சிரம்ப்பட்டுச் செய்துமுடித்த
புல்லாங்குழலின் ஓட்டைகள்
உன் உதடுகளையே மென்று தின்றன!

நட்சத்திரங்களைக் கனவு கண்டுகொண்டே – நீ
மின்மினிகளிடம் சரண்டைந்தாய்...

வருகிறது இன்னொரு தேர்தல் – இனி
மந்திரிகள் உன் குடிசைக்குள் குனிந்து வரலாம்...
கண்ணீர் துடைக்க்க் கைகுட்டையைக்கூடத் தராதவர்கள்,
மூக்குத்தி சுமந்த லட்டு கொடுத்தார்கள்.

இந்தமுறை எந்த தூண்டிலோ?
அந்தத் தூண்டில்களில் மாட்டதே – முடிந்தால்
மண்புழுக்களை விடுவித்துவிடு!
உனது வோட்டு.. சட்டசபைக்கு இனி
மந்திரிகளையல்ல,
மனிதர்களை அனுப்பட்டும்..

வாங்கிய சாபங்களும்கூட இனி
வரங்களாகட்டும்!
-          ---- வாசன். சென்னை-26 

   நிஜகுணம்!

   நூறு சதவிகிதம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிற சமயத்தில் ஒரு மனிதன் என்ன செய்கிறானோ....... அதுதான் அவனது நிஜ குணம்.

10 April 2011

அறிதல் அறிவித்தல்



சந்தோஷத்தை முகம் முழுக்கப்
பரத்திக்கொண்டு
கண்களில் ஒளிமின்ன –
முகமன் கூறாதீர் எனக்கு

தூரத்தே நான் வரும்போதே
கைகள் உயர்த்தி
உறுசாகமாய் ஆர்ப்பரிக்காதீர் –
வரவேற்கும் விதமாக
தோளோடு அணைத்து
நா தழுதழுக்க
‘எத்தனை காலமாச்சு பாத்து
என்று ஏங்காதீர்
இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை.

-          ---ஸோமா வனதேவதா
   
   தவறில்லாத மனிதர் யார்? 
   யாருக்கு அவமானமில்லை. யார் முதுகில் அழுக்கு இல்லை. பொய் சொல்லாத மனிதர் உண்டா? ஏமாற்றாத தொழிலாளி உண்டா? தவறில்லாத மனிதர் யார்? ஆசை இயல்பு. ஆசையின் பால் விளையும் அபத்தமும் இயல்பு.



3 April 2011

பள்ளிப்பருவ நாட்கள்



 யாரையும் அடிக்காத கமலம் டீச்சரின் பிரம்பும்,
காரை பெயர்ந்து மண்புழுதி அடிக்கும் ஒண்ணாம் வகுப்பும்,
மழைவாசம் அடிக்கும் சிலேட்டு பெண்சிலும்,
மூக்கொழுக போட்டியாய் படிக்கும் சோமசுந்தரமும்
துவைத்த சட்டையும், கிழியாத டிரவுசரும்,
மிளகாய்ப்பொடி தூவி நாவாப்பழம் விற்பவரும்,
பத்து பைசாவுக்கு பெட்டி திறக்கும் ஐஸ்காரரும்,
‘அ எழுதத் தெரியாமல் ஒண்ணுக்கிருந்த சிவலிங்கமும்,
நொண்டியும், கபடியும், குண்டு விளையாட்டும்,
உரச்சாக்குப் பையில் இலவச புத்தகமும்,
வறுத்த அரிசியும், வெல்லக்கட்டியும்,
இரண்டாம் வகுப்பு படிக்கும் தாஸ் அண்ணனும்,
‘மழை வருது, மழை வருது நெல்லு வாருங்கோ பாட்டும்,
எனக்கு அறிமுகமான அதே பொழுதுகளில்
எங்கேயோ பிறந்திருக்கிறாய் –
சக பயணியாய்.


--புலியூர் முருகேசன்.



முட்டாள்தனம்!

குரலை உயர்த்துவது மட்டுமே நல்ல விவாதம் ஆகிவிடாது. கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கி விட்டதன்மூலம் அவனை ஜெயித்து விட்டதாக நினைப்பது முட்டாள்தனம்.