நாட்டில் வைலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்காக சுய வேலைவாய்ப்புத் திட்டம் முதல், தற்போதைய ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் வரை அரசின் புதுப்புது திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதியின்படி திட்டங்கள் அறிமுகப் படுத்தப்படுவதாலேயே அவை முழுவதும் செயல்படுத்திவிட்டதாக ஆட்சியாளர்கள் சாதனைத் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.
நாடு 21-ம் நூற்றாண்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது; நாடு தன்னிறைவு அடைந்துவிட்டது; உலக வல்லரசு நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. அக்னி ஏவுகனை சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது – இவைகள் செய்திகள். இவைகள்தான் நாடு முன்னேறிவிட்டதற்கான அடையாளங்களா? உண்மை நிலை என்ன? வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் சதம் என்ன? படித்தவர்களின் சதம் என்ன? படிக்காத படிக்க வசதியில்லாத பாமர மக்களின் சதம் என்ன? படித்து பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்கள்? இவர்களில் எத்தனை லட்சம் பேர்கள் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளனர்? இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது? அரசின் அனைத்து திட்டங்களும் இவர்களைப்போய்ச் சேருகின்றனவா? எங்கே இவைகளுக்கு புள்ளிவிவரக் கணக்குகள்?
திட்டங்களைப் பாருங்கள! ‘ஓர் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலையாம்’; யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழி போல் கடந்தகால தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன இளைஞர்களுக்கு உதவித்தொகை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயலாக்கியது. தற்போதைய அரசோ அதே உத்தியின்படி உதவித்தொகையை சற்று உயர்த்தி வயது வரம்பை மேலும் இரண்டு ஆண்டுகள் தளர்த்தியிருக்கிறது. இதனால் என்ன நன்மை உண்டாகப்போகிறது? கவர்ச்சி திட்டங்களால் மேலும் கவலையைத்தான் அதிகமாக்குகின்றன இந்த அரசுகள்.
இளைஞர்களே வேலை கிடைக்கவில்லையா? சுய தொழில் தொடங்குங்கள், பிரதமரின் திட்டங்கள் உங்களுக்காகவே – எங்கு பார்த்தாலும் வாசகங்கள், மேடைப் பேச்சுகள். அரசின் திட்டங்கள் முறைப்படி மக்களைப் போய்ச்சேருகின்றனவா என்று எந்த அரசாவது இதுவரை ஆராய்ந்ததுண்டா?
வேலை வாய்ப்பகங்கள் தங்கள் வேலையைச் சரிவரச்செய்கின்றனவா? இல்லையே! அங்கும் கூட வேலை செய்ய போதுமான ஆட்கள் இல்லை என்ற நிலை அல்லவா இருக்கின்றது. இந் நிலையில் அரசு வேலைகளையே நம்பியிராமல் தனியார் நிறுவனங்களில் சென்று வேலை செய்யும் இளைஞர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
ஒரு சில நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்கள் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, குறைந்த சம்பளம் கொடுத்து, தாற்காலிகமாகவே ஊழியர்களை வைத்துக் கொண்டுள்ளன. என்றைக்காவது ஒருநாள் நாம் நிரந்தரமாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உழைத்து ஓடாய்த் தேயும் இளைஞர்களும், நிரந்தரம் பற்றிக் கேட்பவர்களை உடனே வீட்டிற்கு அனுப்புவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் இந்தக்கால இளைஞர்கள் சகித்துக்கொண்டு போவதற்கு காரணம் இந்த வேலையாவது கிடைத்ததே என்ற அற்பத் திருப்திதான். இதற்கு நேர்மாறாக ஏதோ உழைப்பதினால் உடம்பிலுள்ள சக்தியெல்லாம் வீணாகிவிடுவதைப்போல், உற்பத்தியைப் பற்றி சிறிதும் எண்ணாமல் வேலைக்குச் சென்று ஆஜரானால் போதும் என்ற நிலையில் இயங்கும் அரசு நிறுவனங்கள்! ஏன் இவைகள் நஷ்டத்தில் இயங்காது?
இதைத் தவிர்த்து சுய தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்களின் நிலை என்ன? எப்படிச்செய்வது? யாரிடம் அணுகுவது? வழிகாட்டி யார்? என்ற வினாக்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு சிக்கித்தவிக்கும் இளைஞர்களுக்கு யார் உதவுகிறார்கள்? நாம் பயின்று வருகின்ற கல்வி என்ன அனைத்தையும் அறிந்து கொள்கின்ற வகையிலா அமையப்பெற்றுள்ளது? கிராமப்புற இளைஞர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையும், அரசு அலுவலகங்களின் மெத்தனப்போக்கும் மலைப்பையே உண்டாக்குகின்றன.
சம்பந்தப்பட்ட துறைகளிடம் சென்று கேட்டால் உடனடியாக பதில் வருகின்றதா? இல்லை, அவர்களுக்கு உதவுகின்ற மனப்பாங்குதான் இருக்கின்றதா? கடமையைச் செய்ய காசு கேட்கிறார்களே!
எண்ணற்ற கடன் வசதிகள்- வியாபாரக்கடன், சுயதொழில் கடன், நகர்ப்புற வேலையற்றோரின் தொழில்கடன், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சிக்கடன், மாவட்ட தொழில் மையக்கடன் போன்ற வசதிகள் இருந்தும் இதை நாட்டு மக்களில் எத்தனை சதம் பேர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்? அதற்கு எத்தனை இடைத்தரகர்கள்? வேண்டப்பட்டவர்களுக்கே இவ்வசதிகள் கிடைக்கச் செய்கின்ற அநியாயங்கள்.
வேலையில்லாமல் சோம்பித்திரியும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வேலை கிடைக்காத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க திட்டங்கள் மட்டும் அறிவித்தால் மட்டும் போதாது. அவைகள் முழுமையாக செயல்படுத்தப்பட இளைஞர்களுக்கு எல்லா வழிவகைகளும் செய்து தரப்படவேண்டும். அப்போதுதான் நாடு தன்னிறைவு கொள்ளும். முன்னேற்றம் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் விளங்கும்.
எம்.ஞானசேகரன்,
சுய மதிப்பீடு
நம்மைப் பற்றிய சுய மதிப்பீடு, நல்லவன், திறமைசாலி என்ற எண்ணம் நம் உள்ளத்திற்கும், உடலுக்கும், நம் வாழ்க்கைக்கும் நல்லது. வெளியே கிளம்பும்போது ஒரு நல்ல சட்டையைப் போட்டுக் கொள்ளுங்கள்; குளித்துவிட்டுக் கிளம்பிப் பாருங்கள். கொஞ்சம் பூ வாங்கித் தலையிலோ (பெண்களுக்கு), சட்டைப் பையிலோ (ஆண்களுக்கு) வைத்துக்கொண்டு புறப்படுங்கள். நம் மனத்தில் ஒரு மகிழ்வும் நிறைவும் உலவுவதைக் காணலாம். சூழ்நிலையே மணம் வீசத்துவங்கும். உலகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.